புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 34

எருசலேம் நகரைச் சுற்றி உயரமான கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டைக்குள் நுழைய 12 வாசல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கிழக்கு வாசல்
கிழக்கு வாசல்

எருசலேமின் 12 வாசல்கள்
எருசலேம் நகரைச் சுற்றி உயரமான கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டைக்குள் நுழைய 12 வாசல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவிலியத்தில் 12 வாசல்களின் பெயர்கள் விவரம்:
1. ஆட்டு வாசல் - SHEEP GATE 
 (நெகமியா: 1, 12: 39), 
2. ஊருணி வாசல் - THE GATE OF FOUNTAIN  
(நெகமியா: 14, 3:15, 12:37), 
3. பள்ளத்தாக்கின் வாசல் - THE VALLEY GATE 
(நெகமியா: 13, 3:13), 
4. மீன் வாசல் - HE FISH GATE  
(நெகமியா: 3, 12:39), 
5. பழைய வாசல் - THE OLD GATE 
(நெகமியா: 6, 12:39), 
6. குப்பை மேட்டு வாசல் - THE DUNG GATE 
(நெகமியா: 13, 12:31), 
7. தண்ணீர் வாசல் - THE WATER GATE
(நெகமியா: 26), 
8. குதிரை வாசல் - THE HORSE GATE (நெகமியா: 28), 
9. கிழக்கு வாசல் - THE EAST GATE (நெகமியா: 29), 
10.மிப்காத் வாசல் - THE GATE OF MIPHKAD  
(நெகமியா: 31), 
11.எப்பிராயீம் வாசல் - THE GATE OG EPHRAIM 
(நெகமியா: 16, 12:39), 
12. காவல் வீட்டு வாசல் - THE PRISON GATE  
(நெகமியா: 2:39).
பாபிலோன் (ஈராக்) மன்னரான நெபுகத்நேசர் கி.மு. 587- இல் இஸ்ரேலை கைப்பற்றி எருசலேமில் இருந்த தேவாலயம், அரண்மனைகள், பெரிய மாளிகைகள் மற்றும் இதர வாசல்கள் அனைத்தையும் சுட்டெறித்துப்போட்டான். அதன்பிறகு கி.மு. 5- ஆம் நூற்றாண்டில் பெர்சிய அரசின் மன்னர் அர்தஷ்டா என்பவரிடம் பணியாற்றிய யூதரான நெகமிய மன்னரின் அனுமதியைப் பெற்று எருசலேமுக்கு வந்து அரண்மனையையும் பன்னிரெண்டு வாசல்களையும் மீண்டும் கட்டினார். தற்போதுள்ள இந்த வாசல்கள் அனைத்தும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டன. ஒவ்வொரு வாசலும் ஒரு நோக்கத்தோடு கட்டப்பட்டன. 
ஆட்டு வாசல்: தேவாலயத்தில் பலி செலுத்தப்படுவதற்காக சந்தைகளில் வாங்கப்படும் ஆடுகள் இவ்வழியாகத்தான் சந்தைக்கு கொண்டு வரப்படும். எனவேதான் இது ஆட்டு வாசல் என அழைக்கப்பட்டது. 
மீன் வாசல்: வியாபாரிகள் மீன்களை இந்த வாசல் வழியாகத்தான் கொண்டு வருவார்கள். எனவே, இது மீன் வாசல் என்று அழைக்கப்படுகிறது. 
பழைய வாசல் (ஒலிமுக வாசல்) : எருசலேம் நகரில் உள்ள முக்கிய நபர்கள் சமுதாயத்தின் முக்கியமான காரியங்கள், நியாயம், நீதி போன்ற காரியங்களை இந்த வாசல் அருகே உட்கார்ந்து பேசுவார்கள் (ரூத்: 4, 1, 2, 11), நீதிமொழிகள் 31: 23, எரேமியா 6: 16).
குப்பைமேட்டு வாசல் : நகரில் உள்ள குப்பைகள், பலியிடப்பட்ட ஆடு, மாடுகளின் கழிவுகள் இந்த வாசல் வழியாகத்தான் எடுத்துச் செல்லப்படும். 
கிழக்கு வாசல், ஒலிமுக வாசல் அல்லது தங்க வாசல்: எருசலேமில் உள்ள அனைத்து வாசல்களிலும் இது புனிதமானது. ஒலிவ மலையை பார்த்த வண்ணம் இந்த வாசல் அமைக்கப்பட்டுள்ளது. இது எருசலேமின் கிழக்கு வாசல், தங்க வாசல், புற வாசல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வாசல் வழியாகத்தான் தேவ மகிமை இறங்கி வருவது வழக்கம். இந்த வாசல் வழியாக வரும்போது தேவாலயத்துக்குள் போகலாம். 
கி.மு. 10- ஆம் நூற்றாண்டில் சாலமோன் கட்டிய தேவாலயத்தின் கிழக்கு பகுதியில் இருந்த இந்த வாசல் கிழக்கு வாசல் என அழைக்கப்பட்டது. இப்போது தங்க வாசலுக்கு அருகே அது இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் இறுதியில் எருசலேம் அழிக்கப்பட்ட பிறகு 5-ஆம் நூற்றாண்டில் பெர்சியர்களின் ஆதரவோடு மீண்டும் இந்த வாசல் நெகமியாவின் தலைமையில் கட்டப்பட்டது. அப்போது பெர்சியர்களின் தலைநகரமாக விளங்கிய சூசானின் பெயரால் இது சூசான் வாசல் என்றும் சில காலம் அழைக்கப்பட்டது.
அதன்பின்னர் கி.மு. 1- ஆம் நூற்றாண்டில் ஏரோது மன்னரால் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டபோது இந்த வாசல் மீண்டும் கட்டப்பட்டு ஏரோது வாசல், கிழக்கு வாசல் என அழைக்கப்பட்டது. கி.பி. 70- இல் ரோமர்களால் இந்த வாசல் அழிக்கப்பட்டு மீண்டும் அவர்களே கி.பி. 6, 7 -ஆம் நூற்றாண்டுகளில் இந்த வாசலை கட்டினர். அக்காலத்தில் இஸ்ரேலின் அதிபதியாக இருக்கும் நபர் மட்டும் இந்த வழியை பயன்படுத்துவது வழக்கம். குறிப்பாக ஓய்வு நாள்கள், மாத பிறப்புகளிலும் இந்த வாசல் திறக்கப்படும்.
பொதுமக்கள் இந்த வாசல் நடையில் பிரார்த்தனை மட்டும் செய்வார்கள். வரப்போகும் மேசியா கடவுள் இந்த கிழக்கு வாசல் வழியாகத்தான் நுழைந்து எருசலேமுக்குள் போவார் என்றும் ஒலிவ மலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான யூதர்கள் அப்போது கல்லறையில் இருந்து உயிர்த்தெழுவார்கள் என்றும் யூதர்கள் பாரம்பரியமாக நம்புகின்றனர். யூதர்கள் நம்பிக்கைப்படி இந்த வழியாக மேசியா நுழையக்கூடாது என்பதற்காக இஸ்லாமிய மன்னர் சுலைமான் இந்த வாசலை மூடிவிட்டார். இப்போதும் இந்த வாசல் மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. 
ஆனால், யூதர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மேசியாவாகிய இயேசு இஸ்ரேலில் இருந்தபோது இந்த வாசல் வழியாகத்தான் பலமுறை எருசலேமுக்குள் நுழைந்தார். மீண்டும் இயேசு 2- ஆவது முறையாக வரும்போது இந்த வாசல் வழியாக எருசலேமுக்குள் நுழைந்து ஆயிரம் ஆண்டுகள் உலகை ஆளுவார். இங்கே மீண்டும் தேவாலயம் கட்டப்படும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கி.பி. 70- இல் அழிக்கப்பட்ட தேவாலயம், இன்று வரை கட்டப்படவில்லை.
- ஜெபலின் ஜான்
(தொடரும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com