பொருநை போற்றுதும்! 67

 கைலைச் சிவனாரைத் தேடியவருக்குப் பாறைச் சிவனார் பார்வையில் பட்டார். "கைலைநாதனைக் காணவேண்டுமே, கண்ணில் காட்டமாட்டாயா?' என்று பாறைச் சிவனாரையே பிரார்த்திக்க... "ஏன்
பொருநை போற்றுதும்! 67

அகத்தியச் சிவனான
 ஆற்றுச் சிவனார்
 கைலைச் சிவனாரைத் தேடியவருக்குப் பாறைச் சிவனார் பார்வையில் பட்டார். "கைலைநாதனைக் காணவேண்டுமே, கண்ணில் காட்டமாட்டாயா?' என்று பாறைச் சிவனாரையே பிரார்த்திக்க... "ஏன், யாம் அங்கு உண்டென்றால் இங்கும் இல்லையோ?' என்று எதிர்க்கேள்வி எழுப்பினாராம் பாறைக்காரர் (அங்கு = கைலாயம்; இங்கு = பொருநைத் தீவு). அடடா, அண்டம் அகிலம் அனைத்தும் ஆண்டவன் என்பதை மறந்துவிட்டேனே என்று உணர்ந்த அகத்தியர், சித்தீச்வரரான பாறைச் சிவனாருக்குப் புதிய நாமம் சூட்டினார் "அங்கு உண்டீச்வரர்'! அங்கு (கைலை) உள்ளவரே இங்கும் (பொருநைக் கரை) உள்ளார் என்பதை உணர்த்தத் தோன்றிய திருநாமம், அங்குண்டீச்வரர்.
 காலச் சக்கரம் சுழன்றது. கருவூர்ச் சித்தர் (சோழர் குலகுருவாகத் திகழ்ந்து, திருப்புடைமருதூர்ப் பகுதிகளில் நாம் சந்தித்த அதே கருவூர்ச் சித்தர்தாம்), பொருநைக் கரையில் சிவபூஜைகளில் ஈடுபட்டிருந்த காலம். சித்தீச்வரரான அங்குண்டீச்வரரை ஞானதிருஷ்டியில் கண்ட கருவூர்ச் சித்தர், வடிவத் திருமேனியில் வணங்கவேண்டும் என்னும் ஆசை கொண்டார். சுத்தமல்லித் தீர்த்தக்கரையில் வந்து நின்று தேடினார். என்ன துரதிருஷ்டம்! சுவாமியோ கோயிலோ கண்ணில் படாதவாறு, ஆற்றுவெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
 கண்ணீர் மல்க உருகி நின்றார் கருவூர்ச் சித்தர் - "அங்குண்டீச்வரா, உன்னைக் காணும் பேறு கிட்டாதோ?' அசரீரி ஒலித்தது, –"மகனே, பனிவரை நாதனைப் பாறையில் காணலாம். பாறை நாதனை கந்தர்வேச்வரனில் காணலாம்'.
 கருவூராரைக் களிக்கச் செய்த கந்தர்வேச்வரர் உள்ளம் உறுத்த, சுற்றிலும் பார்த்தார் கருவூர்ச் சித்தர். கந்தர்வேச்வரத் திருக்கோயில் கண்ணில் பட்டது.
 துர்வாசரின் சாபத்தால் நாரை வடிவம் கொண்ட கந்தர்வன் ஒருவன், சாப விமோசனம் பெறுவதற்காகத் தாமிரவருணிக் கரையை அடைந்தான். பெண் துறவியான அக்னிசிகா என்பாரின் ஆச்ரமம் அடைந்து அருள் வேண்டினான். கருங்கற்கள் நிறைந்த கலசம் ஒன்றை அக்னிசிகா கொடுக்க, அக்கலசத்தையே கடவுளாகக் கொண்டு பூஜித்தான். காலப்போக்கில், கருங்கற்களோடு சேர்ந்த கலசம், சிவலிங்கமாக உருக்கொண்டது. பாரத்வாஜ முனிவரின் வழிகாட்டுதலில், பொருநை வடகரையில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். கந்தர்வனால் ஸ்தாபிதம் செய்யப்பெற்ற சிவலிங்கம், அருள்மிகு கந்தர்வேச்வரர் என்று திருநாமம் கொள்ள, சில காலத்திலேயே, சிவலிங்கத்தைச் சுற்றிக் கோயில் ஒன்றும் உருவானது. இந்தக் கோயில்தான், இப்போது கருவூர்ச் சித்தரின் கவனத்தை ஈர்த்த கோயில்.
 ஆற்றின் நடுவிலிருக்கும் அங்குண்டீச்வரரை வணங்கத் தலைப்பட்ட கருவூர்ச் சித்தர், வடகரை கந்தர்வேச்வரரில் அங்குண்டீச்வரரைக் கண்டு வழிபட்டார். இச்சம்பவத்திற்குப் பின்னர், சுத்தமல்லி பொருநை வடகரை சுவாமியும் "அங்கு உண்டு ஈச்வரம் உடையார்' என்றே அழைக்கப்பெற்றார்.
 நூற்றாண்டுகள் நகர, பொருநை நல்லாள் அவ்வப்போது வெள்ளப் பெருக்கு கண்டாள். காலசுழற்சியின் நில-நீர் மாற்றங்களில், தீவுத்திடலின் சித்தர்வனமும் சித்தீச்வர அங்குண்டீச்வர ஆலயமும் நீருள் மூழ்கின. கீழச் செவல், தேசமாணிக்கப் பகுதிகளின் மக்கள், தங்களின் வழிபாட்டுக்காக, பொருநைத் தென்கரையில் கோயில் அமைத்து, புதிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, அங்குண்டீச்வரர் என்னும் பழைய பெயரையே சூட்டினர்.
 ஒன்றானவன், வடிவில் மூன்றானவன் தென்கரையில் நவ அங்குண்டீச்வரரும், வடகரையில் கந்தர்வேச்வர அங்குண்டீச்வரரும் நெடுங்காலமாக அருள்பாலித்துக் கொண்டிருக்க... கலியுகத் திருவிளையாடல்களையும் பரமனார் நிகழ்த்தினார்.
 2010 -ஆம் ஆண்டு வாக்கில் கடும் வறட்சியைக் கண்டது பொருநைப் பகுதி. ஆற்றில் மணல் அள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன. 2013 -ஆம் ஆண்டு, இவ்வாறு மணல் அள்ளப்பட்ட நிலையில், சுமார் 9 அடி ஆழத்தில் புதைந்திருந்த ஆதித் திருக்கோயிலாம் சித்தீச்வரத் திருக்கோயிலின் (சித்தர்வனத் தீவில் உருவான சரஸ்வதி-அகத்தியர் வழிபட்ட முதல் கோயில்) கட்டுமானங்கள் வெளித் தெரிந்தன. அடியார் பலரின் உதவியால் மணல்மேடு அகற்றப்பட்டு, கோயிலும் சிவலிங்கமும் சீர் செய்யப்பட்டன. ஆக, இப்போது ஆற்றின் நடுப்பகுதியில், சித்தீச்வர அங்குண்டீச்வரரும் அருள்பாலிக்கத் தொடங்கிவிட்டார்.
 ஆற்றின் நடுக்கோயிலை, ஆதித்தலம் என்றும் ஆதிமருந்தீச்வரத் திருக்கோயில் என்றும் அழைக்கிற ஊர்க்காரர்கள், இன்னொரு கதையையும் சொல்கிறார்கள். ஹயக்ரீவரால் சாபம் பெற்றாள் ஒரு பெண்; ஆகவே அவளுக்குக் குதிரை முகம் தோன்றியது; சாப விமோசனம் பெறுவதற்காக, ஆற்றின் நடுவிலிருக்கும் இங்கு வழிபட்டாள்; சாபம் நீங்கப் பெற்றாள்; ஆகவே இது குரு பரிகார ஸ்தலம். ஹயக்ரீவர், பெண்ணுக்குச் சாபம் என்னும் சங்கதிகளையும் ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகிய இருவருமே ஞானக் கடவுளர்கள் என்னும் தகவல்களையும் சேர்த்துப் பார்த்தால், சரஸ்வதியின் சித்தீச்வர வழிபாடுதான், இப்படி உருமாறிவிட்டதோ என்று தோன்றுகிறது.
 எப்படியிருந்தாலும், செவல் தென்கரை, ஆற்று நடு, சுத்தமல்லி வடகரை என்று மூன்று இடங்களிலும் ஒரே திருநாமத்தோடு சிவனார் காட்சி தருகிறார்.
 சித்தர்வனம், சித்தர்காடு போன்ற பெயர்களே, காலப்போக்கில், சித்தவனம், சித்தமல்லி என்றெல்லாம் மருவி, சுத்தமல்லி என்றாகிவிட்டது என்கிறார்கள்.
 (தொடரும்...)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com