முக்தி தரும் முடவன் முழுக்கு!

அபயாம்பாள் மயிலாக இருந்து ஈசனை ஆராதிப்பதால் மாயவரத்திற்கு "கெளரி மாயூரம்' என்ற பெயர் உண்டு.
முக்தி தரும் முடவன் முழுக்கு!

அபயாம்பாள் மயிலாக இருந்து ஈசனை ஆராதிப்பதால் மாயவரத்திற்கு "கெளரி மாயூரம்' என்ற பெயர் உண்டு. தற்போது மயிலாடுதுறையாக மருவியுள்ளது. சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்களில் ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று சொல்வார்கள். இம் மாதத்தைப் புனிதமாகக் கருதி காவிரி ஆற்றில் புனித நன்னீராடச் சொல்கிறது அக்னி புராணம். இதனை துலா சங்க்ரமணம் எனவும் அழைக்கின்றனர். ஐப்பசி மாத கடைசி நாள் "கடை முகம் அல்லது கடை முழுக்கு' என்றும் கார்த்திகை முதல் நாள் "முடவன் முழுக்கு' என்றும் கொண்டாடுகிறார்கள்.
 அர்தோதய புண்யகாலம் என்பது; அமாவாசை ஞாயிற்றுக்கிழமையில் வரப்பெற்று; புஷ்யம் அல்லது தை மாதத்தில் வரும் ஸ்ரவண நட்சத்திரத்தில் வ்யதிபாத யோகத்தில் வருமானால்; அந்த நாளை வாழ்நாளில் மிகச் சிறப்பான நாளாக கணிக்கின்றனர் ஜோதிடர்கள். இப்படியான நாள் நம் வாழ்நாளில் எப்போதோ வரும். இதனால் கிடைக்கும் பலன் மகத்தானது. அப்படி கிடைக்கும் பலனை விட பன்மடங்கு பலன் சுலபமாக மாயவரத்தில் துலா கட்டத்தில் கடைமுகத்தன்றோ, முடவன் முழுக்கன்றோ ஸ்நானம் செய்வதால் கிடைக்கும் என்று துலா மஹாத்மியம் கூறுகின்றது.
 காவிரி பாய்ந்தோடும் கரையில் வசிக்கும் மக்கள் முன்னாளில் தெய்வத் தாயாக அவளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்; அதனால் அவளும் மகிழ்ச்சியுற்று வருடம் முழுவதிலும் சீறிப் பாய்ந்தோடி தமிழகத்தில் முக்கியத் தொழில் செய்வோரான விவசாயிகளுக்கு எந்தக் குறையுமின்றி காவிரித்தாய் அருளினாள். ஸ்ரீகிருஷ்ணனின் ஆணைக்கிணங்க உலகிலுள்ள அறுபத்தி ஆறாயிரம் கோடி ஆறுகள் இந்த மாதத்தில் இங்கு வந்து காவிரியில் நீராடி தன் மீது ஏற்பட்டுள்ள களங்கங்களான ஐந்து வகையான பாவங்களை சுத்திப்படுத்திக் கொள்ள வருகிறார்கள் என்பது ஐதீகம்.
 சிறந்த சிவபக்தரான நாத சர்மா மற்றும் அவரது மனையாள் அனவித்யாம்பிகை இருவரும் திருவையாற்றிலிருந்து புறப்பட்டு மாயவரம் துலாஸ்நானம் செய்வதற்கு வந்து, மாலை நேரம் நெருங்கிவிட்டதால் ஸ்நானம் செய்ய இயலாமல் தவித்து அங்குள்ள மண்டபத்தில் இரவு தங்கி ஈசனை துதித்தனர். அது போல் மாற்றுத் திறனாளி ஒருவரும் (முடவன்) ஆசை இருந்தும் கால் ஊனமுற்றதால் நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி தவழ்ந்து; வெகு நாட்களுக்கு முன்பே அவரது ஊரிலிருந்து கிளம்பி மாயவரம் வந்து சேரும் போது, துலா மாதம் முடிந்து இரவாகிவிட்டது. அண்டத்தின் நாயகனை நோக்கி மாற்றுத் திறனாளி "இந்த சந்தோஷத்தை அடைவதற்கு எனக்கு கொடுப்பினை இல்லையே" என்று கதறினான். மூவரும் துலாஸ்நானம் செய்யும் பேறு கிட்டாததால் பெரிதும் கவலையுற்றனர்.
 இவர்களது பக்தியில் கட்டுண்ட எம்பெருமான் கைலாயபதி இந்த மூவரின் விண்ணப்பத்தை ஏற்று அசரீரியாக; ""ஐப்பசி கடைசி நாள் துலா ஸ்நானம் முடிந்து விட்டாலும் என் அன்பிற்குறியவர்களான உங்களுக்காக நாளை ஒரு நாளும் நீட்டித்துத் தருகிறேன்; இந்த நாளில் ஸ்நானம் செய்தால் நம்முள்ளே சேர்ந்துள்ள பாவம் விலகி புண்ணியம் பெறலாம்'"என அருளினார்; இதனால் அந்த மூவரும் முக்தி பெற்றனர். அன்று முதல் கார்த்திகை முதல் நாளை "முடவன் முழுக்கு' என்று அழைக்கலாயிற்று.
 நாத சர்மா, அனவித்யாம்பிகை தம்பதிகள் ஐக்கியமான சிவலிங்கங்கள் மயூரநாத சுவாமி ஆலயத்தில் அபயாம்பிகா சந்நிதிக்கு தென்புறத்தில் உள்ளது. இதில் பெண் அடியாரான அனவித்யாம்பிகை ஐக்கியமான லிங்கத்தின் மீது சேலை அணிவிக்கப்படுவது வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத சிறப்பு அம்சமாகும். மயூரநாத சுவாமி ஆலயத்திற்கு வழிபட வருபவர்கள் இந்த தம்பதிகள் ஐக்கியமான லிங்கங்களையும் தரிசனம் செய்தால் மட்டுமே வழிபாடு நிறைவு பெறும் என்பது இறைவாக்கு.
 கடை முழுக்கு, ஐப்பசி மாதக் கடைசி நாள் (16.11.2019) சனிக்கிழமையன்று முடிகிறது. முடவன் முழுக்கு, கார்த்திகை முதல் நாள் வருகிறது (17.11.2019). அபயாம்பிகை உடனுறை மயூரநாத சுவாமியை திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசரும் பதிகத்தில் போற்றிப் பாடியுள்ளார்கள். தன் பங்குக்கு அருணகிரிநாதரும் புகழ்ந்துள்ளார். கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்ற பழமொழிக்கொப்ப இந்த ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானம் செய்து மயூரநாதரையும் தரிசித்து நற்பேற்றினை பெறுவோம்.
 - எஸ். எஸ். சீதாராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com