நிறைவான வாழ்வருளும் நிரஞ்சீசுவரர்!

"தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' என்று புகழப்படும் தொண்டை நாட்டில், வரலாற்றுச் சிறப்பு மிகுந்த கொசஸ்தலை ஆறு - கூவம் ஆறுகளுக்கு இடையே பசுமை வயல்கள் நிறைந்த இயற்கை சூழலுடன்
நிறைவான வாழ்வருளும் நிரஞ்சீசுவரர்!

"தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' என்று புகழப்படும் தொண்டை நாட்டில், வரலாற்றுச் சிறப்பு மிகுந்த கொசஸ்தலை ஆறு - கூவம் ஆறுகளுக்கு இடையே பசுமை வயல்கள் நிறைந்த இயற்கை சூழலுடன் "சிறு மணவை' என்ற அழகிய கிராமம் அமைந்துள்ளது. இவ்வூர் "சிறுமணவூர்', "சின்ன மண்டலி' என்றும் அழைக்கப்படுகின்றது.
 திருக்கோயில்கள்: சின்ன மண்டலி என தற்போது அழைக்கப்படும் இவ்வூரில் இஷ்ட சித்தி விநாயகர், ஆதிகேசவப் பெருமாள் கோயில், மரகதவல்லி சமேத நிரஞ்சீசுவரர் திருக்கோயில், பெரிய பாளையத்தம்மன் கோயில், ஆரூரம்மன் கோயில், செல்லியம்மன் கோயில், படைவீட்டம்மன் கோயில் போன்ற திருக்கோயில்கள் சிறப்பாக வழிபடப்படுகின்றன.
 ஆலய அமைப்பு: இக்கிராமத்தின் வடகிழக்கில் சிவன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகில் அழகிய சிவப்பு நிறமுடைய தாமரை மலர்கள் பூத்து குலுங்கும் தடாகம் அமைந்துள்ளது. திருக்கோயிலை சுற்றி வேம்பு, ஆலமரம், அரசமரம், வில்வமரம் ஆகியவை அமைந்து குளிர்ந்த சூழலை உருவாக்கியுள்ளன.
 கிழக்கு நோக்கிய திருக்கோயில் திருச்சுற்றில், கற்பக விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், ஐயப்பன், சண்டிகேசுவரர், பைரவர், நவக்கிரகம், சந்திர, சூரியர்கள், ஆஞ்சநேயர், சமயக்குரவர் நால்வர்கள், ராமலிங்க அடிகளார் திருமேனிகளுக்கு தனித் தனியே சந்நிதிகள் அமைந்துள்ளன.
 கருவறையில் லிங்க வடிவில் நிரஞ்சீசுவரர் எழுந்தருளி அருள்புரிகின்றார். அர்த்த மண்டபத்தில் தரையில் வாஸ்து சக்கரம் - பல கட்டங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு நின்று இறைவனை வழிபட்டால் பக்தர்கள் ஒரு வித பரவசநிலைக்கு ஆளாகின்றனர் என்று கூறப்படுகின்றது. இறைவன் கருவறைக்கு எதிரே நந்திபெருமான் எழுந்தருளியுள்ளார். தேவ கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை போன்ற தெய்வ மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
 கல்வெட்டுகள்: இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டுகள் மத்திய தொல்லியல்துறையால் 1944 - ஆம் ஆண்டு படியெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணப்ப நாயக்கரின் அதிகாரி இக்கோயிலுக்கு வழிபாட்டிற்காக நிலம் அளித்த செய்தி குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டில் இறைவன் "சிறுமணவூர் கச்சாலீசவரர்" என அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் நிரஞ்சீசுவரர் என்ற பெயருடன் திகழ்கின்றார்.
 இக்கோயிலில் விநாயகர் சந்நிதியில் காணப்படும் கல்வெட்டு இஷ்டசித்த விநாயகர் திருவடிவம் தொண்டை மண்டலம் முத்து வீரபத்ர நாயக்கரின் முத்திரை அதிகாரி கந்தப்ப முதலியாரால் அமைக்கப்பட்டது என்ற செய்தியைக் கூறுகின்றது. மேலும், இவர் கோயிலுக்கு ஒரு (துரவு) கிணறு எடுப்பித்ததையும் மற்றொரு கல்வெட்டு கூறுகிறது. பெருமாள் கோயிலுக்கு தானம் அளித்ததைக் குறிப்பிடும் திருமண் (ஆழிக்கல்) பொறித்த கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகின்றது.
 மரகதவல்லி அம்மன்: இறைவன் கருவறைக்கு அருகில் தெற்கு நோக்கி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. கருவறையில் அம்பாள் தனது மேலிரு கரங்களில் அங்குசம் - பாசம் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய - வரத முத்திரை தாங்கியும் அருள்வழங்கும் அழகு வடிவத்தைக் கண்டு தரிசிக்கலாம்.
 அம்பாள் சந்நிதியின் வாயிலின் அருகே சங்கு, சக்கரம், கத்தி, கேடயம், வில், அம்பு ஆகிய ஆயுதங்களை தனது எட்டுக்கரங்களில் தாங்கி - மான், வாகனத்துடன் காட்சியளிக்கும் தொன்மையான வனதுர்க்கை வடிவத்தையும் கண்டு போற்றி வழிபடலாம்.
 சின்ன மண்டலி கோயிலுக்கு காஞ்சி மகாசுவாமிகள் வந்து வழிபட்ட பெருமை உண்டு. திருக்கோயிலில் பௌர்ணமி, பிரதோஷம், தமிழ் மாதப் பிறப்பு, ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் மற்றும் கார்த்திகை தீபம், ஆருத்ராதரிசனம், ஆவணி மாதத்தில் திருக்கல்யாண வைபவம் போன்ற வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சென்னை அண்ணாமலையார் உழவாரப் பணி குழுவினரால் உழவாரப்பணி செய்யப்பட்டு 2013 -ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 சிறுமணவை முனுசாமி முதலியார்: இவ்வூர் வாசியான முனுசாமி முதலியார் மிகப்பெரிய அறிஞராகவும், கவிஞராகவும் திகழ்ந்திருக்கின்றார். இவர் எழுதியவைகளில், சிவ மகாமந்திரம், நடராஜப்பத்து, ஆருரம்மன் தோத்திரம், நவக்கிரக மகாமந்திரம், போன்ற ஆன்மீக நூல்கள் குறிப்பிடத்தக்கவைகள்.
 திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் இதய நோய் அகலும், புத்திர பாக்கியம் உண்டாகும், மனக்கவலை அகன்று நிம்மதி அளிக்கும் திருத்தலமாகவும் இக்கோயில் விளங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
 இவ்வூரைச்சுற்றி பாகசாலை, திருவாலங்காடு, மணவூர், பேரம்பாக்கம், மப்பேடு, கூவம் போன்ற சிறப்புடைய திருத்தலங்கள் அமைந்துள்ளன. திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. பூந்தமல்லி - பேரம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. ஆட்டோ வசதிகள் உள்ளன.
 தொடர்புக்கு: 93610 52748 / 99659 36221.
 - கி.ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com