புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 35

இஸ்ரேல் நாட்டின் முதல் மன்னரான தாவீதின் கல்லறை, எருசலேம் நகரில் உள்ள சியோன் மலையில் உள்ளது
எருசலேம் நகரில் உள்ள தாவீதின் கல்லறையில்   மதநூல்களை படித்துக்கொண்டே பிரார்த்தனை செய்யும் யூதர்கள்
எருசலேம் நகரில் உள்ள தாவீதின் கல்லறையில் மதநூல்களை படித்துக்கொண்டே பிரார்த்தனை செய்யும் யூதர்கள்

தாவீது கல்லறை (TOMB OF DAVID), மேல்வீட்டு அறை (UPPER ROOM)
இஸ்ரேல் நாட்டின் முதல் மன்னரான தாவீதின் கல்லறை, எருசலேம் நகரில் உள்ள சியோன் மலையில் உள்ளது. இந்த கல்லறைக்கு மேல் தளத்தில் இயேசு சீடர்களுடன் கடைசி இரவில் ராப்போஜனம் செய்த இடம் (மேல் வீட்டு அறை) உள்ளது.
12-ஆம் நூற்றாண்டில் உருவான பாரம்பரியத்தின்படி, இஸ்ரேலின் முதல் மன்னர் தாவீது அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இக்கல்லறை முன்னாள் பைசாந்திய தேவாலயமான "ககியா சியோன்" அமைந்திருந்த மூலைப் பகுதியின் உள்ள கீழ்த்தளத்தில் அமைந்துள்ளது. பழைய பைசாந்திய பாரம்பரியம் 4-ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியதும், கிறித்தவ விசுவாசத்தின் மூல சந்திப்பு இடமாக "இயேசுவின் மேல் அறை' என அடையாளம் காணப்பட்டது.
கல்லறை "ககியா சீயோன்' என்ற பழைய ஆராதனை இல்லத்தின் எச்சங்களின் கீழ்த்தள அறையின் மூலையில் அமைந்துள்ளது. இக்கட்டடத்தின் மேல் தளம் இயேசுவின் மேல் அறை என பாரம்பரியமாகக் கருதப்படுகிறது.
கி.பி. 4-ஆம் நூற்றாண்டில், தாவீதும் அவருடைய தந்தையும் பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. பின்னர் சீயோன் மலை என கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கருத்து காணப்பட்டது.
இரு யூதத் தொழிலாளிகள் தாவீதின் மூல அரண்மனைக்கு குறுக்காக சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்தபோது, பொன்னால் நிறைந்த முடியையும் செங்கோலையும் கண்டுபிடித்ததால் அவ்விடம் தாவீதின் கல்லறையாக இருக்க வேண்டும் என்ற தீர்மானிக்கச் செய்தது. தற்போது பாதுகாக்கப்பட்டுள்ள கோதிக் வெறுங்கல்லறை சிலுவைப் போர் வீரர்களால் கட்டப்பட்டது.
இந்த கல்லறையை பார்வையிட ஆண்கள், பெண்களுக்கு தனி வழி உள்ளது. கல்லறையை பார்வையிடும் ஆண்கள், அங்கே வைக்கப்பட்டுள்ள குல்லாவை எடுத்து தலையில் கட்டாயம் அணிய வேண்டும். குல்லா அணியாதவர்களுக்கு உள்ளே அனுமதியில்லை. தாவீது கல்லறை அருகே சிறிய நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் இருக்கும் பழங்கால ஆன்மிக புத்தகங்கள், விவிலியம் உள்ளிட்டவற்றை யூதர்கள் ஆழமாக படித்துக்கொண்டும் பிரார்த்தனை செய்துகொண்டும் இருப்பதைப் பார்க்க முடியும்.
மேல் வீட்டு அறை: லத்தீன் மொழியில் இருந்த CANACULCUM என்ற வார்த்தையில் இருந்து CENACLE என்ற வார்த்தை பிறந்தது. CENACLE என்றால் மேல் அறை என்று பொருள். CENA என்றால் இரவு (DINNER) உணவு என்று பொருள்.
மேல் வீட்டு அறை என்பது இயேசுவின் சீடரான மாற்குவின் தந்தை வீடு. மேல் வீட்டு அறை பல்வேறு சம்பவங்களை கொண்டது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இந்த வீட்டில் தான் இரவில் சீடர்களுடன் தங்கினார். சீடர்கள் அவரது கால்களை கழுவிய பின்னர் அவர்களுடன் ராப்போஜனம் செய்தார்.
இயேசு உயிர்த்தெழுதலுக்கு பின்னர், இந்த வீட்டில் கதவை பூட்டிக்கொண்டு இருந்த தோமா உள்ளிட்ட சீடர்களுக்கு இயேசு காட்சி அளித்த இடமும் இது தான். இந்த அறையில் தான் இயேசுவின் சீடர்கள் பரிசுத்த ஆவியை பெற்றனர். இந்த வீட்டின் அறைக்குள் ஓர் ஒலிவ மரத்தில் இருந்து மூன்று கிளைகள் பிரிந்தது போன்ற அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. யூத மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் ஆகியவை ஒரே மரத்தின் மூன்று கிளைகள் என்பதை குறிக்கும் வகையில் இந்த மரம் வைக்கப்பட்டுள்ளது.
கி.பி. 70-இல் ராயன் வெஸ்பேசியஸ் என்பவரின் மருமகன் தீத்து என்ற தளபதி, எருசலேமில் காணப்பட்ட பிரதான வீடுகள் அனைத்தையும் அழித்தபோது இந்த வீடு தப்பியது. போருக்கு பின்னர் இந்த வீட்டை சுற்றி வடக்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளில் பெரிய அளவிலான மதில் சுவர் கட்டப்பட்டது. அதன்பிறகு கி.பி.382-இல் தியோடோசியஸ் (THEODOSIUS) என்ற ரோம மன்னரால் THEODOSIUS CHURCH அல்லது HOLY ZION CHURCH என அழைக்கப்படும் தேவாலயம் கட்டப்பட்டது. அந்த தேவாலயத்துக்கு சற்று அருகே CHURCH OF APOSTLES என்ற தேவாலயமும் கட்டப்பட்டு, கி.பி. 415-இல் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், கி.பி. 614-இல் பெர்சிய படையெடுப்பின்போது இடிக்கப்பட்டது.
பின்னர், MODESTUS திருச்சபை மூலம் இந்த ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது. கி.பி.1009-இல் AL. HAKKIM என்பவரால் மீண்டும் இந்த தேவாலயம் அழிக்கப்பட்டது. பிறகு சிலுவை வீரர்கள் காலத்தில் இந்த இடத்தில் SAINT MARY என்ற தேவாலயம் கட்டப்பட்டது. இப்போது இந்த ஆலயம் DORMITION ABBEY என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதன் பிறகும் பல்வேறு சோதனைகளை சந்தித்த இந்த தேவாலயம், இஸ்ரேல் நாடு உருவான பின்னர் மீண்டும் கம்பீரமாக கட்டப்பட்டது. இதன் கீழ்த்தளத்தில் தாவீதின் கல்லறையும், மேல் தளத்தில் மேல் அறையும் உள்ளன.
- ஜெபலின் ஜான் 
(தொடரும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com