பொருநை போற்றுதும்! 68

தேசமாணிக்கத்திற்குக் கிழக்காக, தாமிராவின் தென்கரையிலுள்ள மற்றுமொரு சிற்றூர், கோபாலசமுத்திரம்.
பொருநை போற்றுதும்! 68

பொருநைக் கரை தந்த புதிய வரைபடம்
தேசமாணிக்கத்திற்குக் கிழக்காக, தாமிராவின் தென்கரையிலுள்ள மற்றுமொரு சிற்றூர், கோபாலசமுத்திரம். இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்புகளில் ஒன்று, பண்ணை வெங்கடராமய்யர் உயர்நிலைப் பள்ளி. 1904 -ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று, பற்பல விஞ்ஞானிகளையும் ஆட்சிப்பணி அலுவலர்களையும் உருவாக்கித் தந்த பெருமை இப்பள்ளிக்கு உண்டு. 
கடந்த ஐந்தாண்டுகளில், தீவிரமான சாதிச் சண்டைகளுக்கும் அவை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் இவ்வூர் உள்ளாகியிருந்தாலும், பொதுவாகக் காண்கையில், அபரிமிதமான இயற்கை அழகும், அமைதியான கம்பீரமும் நிறைந்த ஊர் இது என்பதை மறுப்பதற்கில்லை. கிழக்கே தேசமாணிக்கம், செவல், பத்தமடை மற்றும் சேரன்மாதேவி, மேற்கே தருவை மற்றும் பாளையங்கோட்டை, வடக்கே சுத்தமல்லி மற்றும் நரசிங்கநல்லூர், தெற்கே சிங்கிகுளம் மற்றும் களக்காடு என்று கோபாலசமுத்திரத்தின் வரைபடத்தை நிர்ணயித்துவிடலாம். ஆனால், உலக அறிவியல் வரைபடத்தில், இந்த ஊரின் பெயர் தனிச் சிறப்போடு மிளிர்கிறது. 
இந்தப் பெருமைக்கும் சிறப்புக்கும் காரணமானவர், இந்த ஊருக்குச் சென்றிருந்தாரா என்று தெரியவில்லை. 
20 -ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில், அதுவரை திருநெல்வேலியில் கணித ஆசிரியராக இருந்த திரு. நாராயண ஐயர், அப்போதைய கொச்சி மாகாணத்தின் பகுதியாக இருந்த எர்ணாகுளத்தில், மஹாராஜா கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். மலையாள நாட்டுக்குக் குடும்பம் குடிபெயர்ந்தது. 
1922 -ஆம் ஆண்டு அக்டோபர் 8 -ஆம் நாள், நாராயண ஐயருக்கும் அவருடைய மனைவி லட்சுமி அம்மாளுக்கும் பிறந்த மூத்த மகன்தான், ராமச்சந்திரன். எர்ணாகுளத்தில் பள்ளிக் கல்வியையும் திருச்சியில் கல்லூரி இளங்கலைக் கல்வியையும் பயின்ற ராமச்சந்திரன், தொடர்ந்து பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் உயர்பட்டங்கள் பெற்று, ஆராய்ச்சிகளும் புரிந்தார். பெங்களூருவில் புகழ்மிக்க விஞ்ஞானி சர். சி.வி.ராமன் அவர்களின் அணுக்க மாணாக்கர் ஆனார். 1952-இல், ராமச்சந்திரனுக்கும் சென்னைக்குமான (அப்போதைய மதராஸ்) தொடர்பு வலுப்பட்டது. 
சென்னைப் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் டாக்டர்.ஏ.எல். முதலியார் அவர்கள், இயற்பியல் துறையைத் தோற்றுவிக்கவேண்டி, அத்தகைய துறையை நிறுவுவதற்காகவும் அதன் தலைமைப் பொறுப்பேற்பதற்காகவும், சி.வி.ராமனுக்கு அழைப்பு விடுத்தார். இந்திய அறிவியல் கழகப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, பெங்களூருவிலேயே தம்முடைய ராமன் ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடங்கியிருந்த ராமன், தனக்கு மாற்றாக, இளம் ராமச்சந்திரனைப் பரிந்துரை செய்தார். 
இவ்வாறாகத் தம்முடைய 29 -ஆவது வயதில் சென்னையில் பணியமர்ந்த ராமச்சந்திரன், அடுத்த 18 ஆண்டுகளில், உயிரி இயற்பியலுக்கும் (BioPhysics), படிக வரைவியலுக்கும் (Crystallography), வடிவ உயிரியலுக்கும் (Structural Biology) ஆற்றிய பங்கு, அளப்பரியது. இவரின் பங்களிப்புகளாகப் பலவற்றைக் கூறலாம் என்றாலும், கொலாஜன் (Collagen) இதனைக் "காலஜன்' என்றும் சிலர் அழைப்பார்கள்) என்னும் புரதத்தின் அமைப்பு வடிவம் குறித்த இவரின் விவரிப்பு மிக முக்கியமானதாகும். 
இந்தப் புரதமானது, முச்சுருள் வடிவானது என்பதை முதன்முதலில் விவரித்தவர் ராமச்சந்திரனே ஆவார். கொலாஜன் மற்றும் பிற புரதங்கள் குறித்த அறிவியல் அறிவினை வளப்படுத்துவதற்கு, இவ்விவரிப்புப் பெரிதும் உதவியுள்ளது."நோபல் பரிசு நிலை விஞ்ஞானி' என்றே அறிவியல் உலகம் இவரைப் பாராட்டுகிறது. இவருடைய கண்டுபிடிப்புக்குப் பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் அமைந்துள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள அரங்கத்திற்கு "முச்சுருள்' (Triple Helix) என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
அதெல்லாம் சரி, இத்தனை தகவல்கள் எதற்கு என்கிறீர்களா? 
ராமச்சந்திரன் என்று மட்டும் கூறிக்கொண்டிருக்கிறோமே, இவருடைய முழுப் பெயர், ஜி.என். ராமச்சந்திரன். அதாவது, கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன்! ராமச்சந்திரன் எந்த அளவுக்கு கோபாலசமுத்திரத்தோடு நேரடித் தொடர்பு கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. ஆயினும், அறிவியல் உலகத் தொடர்புகளில், ராமச்சந்திரன் பெயரோடு, இவரின் சொந்த ஊரான கோபாலசமுத்திரமும் நீக்கமற நிறைந்துவிடுகிறது. தாமிராவின் பெருமைமிக்க புதல்வர்களில், கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரனும் ஒருவரல்லவா!
(தொடரும்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com