Enable Javscript for better performance
ஆதிசங்கரரின் இரு லஹரிகள்!- Dinamani

சுடச்சுட

  

  ஆதிசங்கரரின் இரு லஹரிகள்!

  Published on : 04th October 2019 10:46 AM  |   அ+அ அ-   |    |  

  vm1

  ஆதி சங்கரர் நமது பாரத தேசம் முழுவதும் பல முறை வலம் வந்து அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டினார். அது மட்டுமல்ல, சாதாரண மக்களும் உய்யும் பொருட்டு ஷண்மத ஸ்தாபனம் செய்து அந்த தெய்வங்கள் மீது அற்புதமான ஸ்தோத்திரங்களையும் அருளிச் செய்தார். அவற்றில் சிவானந்தலஹரி, செளந்தர்யலஹரி என்ற இரண்டு ஸ்தோத்திரகளும் மிகவும் பிரசித்தமானவை.
   "லஹரி' என்றால் "பெருக்கு' என்றும் "அலை'என்றும் பொருள். "சிவானந்த லஹரி' என்றால் சிவபெருமானாகிய "ஆனந்தப் பெருக்கு' என்று அர்த்தமாகிறது. நூறு சுலோகங்களில் பரமேஸ்வரனின் சிறப்புகளை எடுத்துரைத்து அதன் மூலம் நம்மை ஆனந்தப்பெருக்கில் ஆழ்த்துவதால் இந்த நூல் சிவானந்தலஹரி என்று அழைக்கப்படுகிறது.
   அதே போன்று, "செளந்தர்யலஹரி' என்றால் "அழகு வெள்ளம்' என்று பொருள் படும். லோக மாதாவானஸ்ரீராஜராஜேஸ்வரியின் அழகுப் பெருக்கை நூறு சுலோகங்களில் வர்ணிப்பதால் இந்த கிரந்தத்திற்கு "செளந்தர்யலஹரி' என்ற பெயர் ஏற்பட்டது. இந்த இரண்டும் மேலான பக்திக்கு வழி வகுக்கிறது.
   சிவானந்த வெள்ளம் எப்படிப் பெருக்கெடுத்து ஓடி வந்து நம்மை மகிழ்விக்கிறது என்பதை அந்த ஸ்தோத்திரத்தின் 2 -ஆவது ஸ்லோகம் சொல்கிறது. உன்னுடைய பெருமை வாய்ந்த திவ்ய சரித்திரங்களையும் நாமாக்களையும் சொல்லச்சொல்ல, கேட்க கேட்க ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வெள்ளம் நாம் பல பிறவிகளில் சேர்த்து வைத்திருக்கும் பாவங்களை அடித்து செல்கிறது. பிறப்பு இறப்பு என்ற சம்சாரச் சூழலில் சுற்றிச் சுற்றி வரும் களைப்பை போக்கி சாந்தியை அளிக்கிறது. இந்த சிவானந்த வெள்ளம் தான் இந்த ஸ்தோத்திரத்தின் ஜீவ நாடி ஆகும்.
   செளந்தர்யலஹரியின் 44 -ஆவது சுலோகம் ஜகன்மாதாவின் முக செளந்தர்யத்தின் பெருக்கை வர்ணிக்கிறது. இந்த சுலோகத்தில் ஆதிசங்கரர் "ஹேஜகஜ்ஜனனி! உனது திருமுக மண்டலத்தின் செளந்தர்யப் பெருக்கு கரைபுரண்டு ஓடுகிறது. அந்த அழகு வெள்ளத்திற்கு ஓர் வடிகால் வேண்டாமா? அந்த வடிகால் உனது கூந்தலில் உள்ள ஸீமந்தம் எனப்படும் வகிடு. அந்த வகிட்டின் நுனியில் நீ தரித்துள்ள சிந்தூரப் பொட்டு உதிக்கின்ற செங்கதிரோன் போல் பிரகாசிக்கிறது. அந்த அழகு வெள்ளம் எங்களுக்கு எல்லா மங்களத்தையும் அருளட்டும்’ என்கிறார்.
   இந்த இரண்டு சுலோகங்களிலும் சக்தியும் சிவனும் சேர்ந்து விளங்கும் காட்சியும் இருவரும் இணைந்து பக்தர்களுக்கு அருள்புரியும் அழகும் ஆகும்.
   சிவானந்தலஹரியின் 61-ஆவது சுலோகத்தில் பக்தியின் லட்சணத்தை அழகாக எடுத்துரைக்கிறார். எங்கெல்லாமோ சுற்றித்திரியும் மனத்தின் நாட்டம் இறைவனது திருவடிகளை அடைந்து அங்கேயே நிலைபெற்று நிற்குமானால் அதுதான் பக்தி என்று விவரிக்கிறார். பக்தியின் மூலமாக நாம் உயர்ந்த முக்தி நிலையை அடையமுடியும் என்பதை செளந்தர்யலஹரி 22- ஆவது சுலோகத்தில் கூறுகிறார்.
   அம்பாளிடம் அளவுகடந்த பக்திகொண்ட பக்தர் ஒருவர் அம்பாளிடம், "ஹே... பவானி! உனது தாசனான என்னிடத்தில் நீ கருணைகூர்ந்த பார்வையைச் செலுத்த வேண்டும்' என்று சொல்ல நினைக்கிறான். ஆனால் பக்திப்பரவசத்தால் "பவானி த்வம்’ என்று இரண்டு வார்த்தைகள் மட்டுமே கூறி மேலே ஏதும் பேச முடியாமல் நிற்கிறான். ஆனால் கிருபா சமுத்ரமான ஜகன் மாதா பக்தனுக்கு முக்தி நிலையை அளித்து தன்னோடு சேர்த்துக் கொள்கிறாள் என்று அழகுபட கூறுகிறார் ஆதிசங்கரர்.
   சிவானந்தலஹரி 81-இல் "ஹே.. மகேசா! உன்னுடைய திருவடித் தாமரைகளை அர்ச்சிப்பது, உன்னை தியானிப்பது, உன்னை நமஸ்கரிப்பது உன்னுடைய திவ்ய சரித்திரங்களையும், திருவிளையாடல்களையும் கேட்பது, உன்னை தரிசித்து துகிப்பது இப்படி எவன் ஒருவன் தனது மனத்தை உன்னிடத்திலேயே அர்ப்பணிக்கிறானோ அவன் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே முக்தி நிலை அடைகிறான்' என்று பக்தியின் மூலம் முத்தி நிலை அடைவதை அழகாக கூறுகிறார்.
   நாமும் வருகிற நவராத்திரியில் செளந்தர்யலஹரி என்ற அழகுப் பெருக்கினாலும் சிவானந்தலஹரி என்ற ஆனந்தப் பெருக்கினாலும் ஜகன்மாதாவையும் பரமேஸ்வரனையும் துதித்து திளைத்து மகிழ்ந்து முக்தி நிலையான ஸாயுஜ்யம் பெறுவோம்; அம்பாளின் அனுக்கிரகம் பெறுவோம்!
   - பட்டம்மாள் ஜெகந்நாதன்
   
   

  kattana sevai