Enable Javscript for better performance
செழிப்பினை அருளும் செழியநல்லூர் சயன துர்கை!- Dinamani

சுடச்சுட

  
  SELIYANALLR

  துர்சக்திகளை அழிக்கவும், நல்லவர்களைக் காக்கவும், அன்னை பராசக்தி பல்வேறு சமயங்களில் பலவிதமான ரூபங்களை எடுத்திருக்கிறாள். தேவி பாகவதமும் மற்ற புராணங்களும், மந்திர தந்திர சாஸ்திரங்களும் இந்த ரூபங்களின் உயர்வினைப்பற்றிப் பேசுகின்றன. ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி ரூபமும் அதில் ஒன்று. இந்த துர்க்கையைப்பற்றி வேதங்கள் மிகவும் சிறப்பாக கூறியுள்ளது.
   துர்க்கா தேவிக்கு இந்தியாவில் பல இடங்களிலும் திருக்கோயில்கள் உள்ளன. பெரும்பாலும் சிவாலயங்களில் கோஷ்ட தெய்வமாக நின்ற வடிவில் காட்சி தருவாள். வெகுசில இடங்களில் அமர்ந்த கோலத்திலும் அவளை தரசிக்கலாம். ஆனால் அவள் "சயன கோலத்தில்' அருள்பாலிக்கும் திருத்தலம் ஒன்று உள்ளது. காலம், காலமாக கூறப்பட்டுவரும் அத்தலவரலாற்றினைப் பற்றி அறிந்துகொள்வோம்:
   திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது செழியநல்லூர் கிராமம். முன் காலத்தில் இப்பகுதியை செழியன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். கிராமத்தின் காவல் தெய்வமாக வடக்கில் செழிய அம்மனையும், கிழக்கில் தர்மசாஸ்தாவையும், தெற்கில் வலம்புரி விநாயகரையும், மேற்கே தன்னுடைய குலதெய்வமாகிய வனதுர்க்கையையும் அமைத்து தினம் தவறாமல் தன் குடும்பத்தினருடன் வழிபாடு செய்து வந்தான். அவ்வாறு வருகையில் ஒரு சமயம், அச்சிற்றரசனின் எட்டு வயது பெண் குழந்தை வீடு திரும்பாமல் வனத்தில் தங்கிவிட்டது. திடீரென பெற்றோரைக் காணாமல் அக்குழந்தை அழ ஆரம்பித்தது. அவ்வமயம், அவ்வழியே வந்த கள்வன் ஒருவன் குழந்தை அணிந்திருந்த நகைகளை அபகரிக்க முயற்சித்தான். குழந்தை பயத்தில் மேலும் வீரிட்டு அழுதபடி, வனதுர்க்கையின் பக்கம் சென்று அம்மனை ஆரத்தழுவி அணைத்துக்கொண்டது. கள்வன் குழந்தையை பிடித்து இழுக்க, நின்ற கோலத்தில் இருந்த அம்மன் சிலை குழந்தையுடன் சேர்ந்து பின்புறமாக சாய்ந்து விட்டது. அந்த கணமே அம்மன் பிரசன்னமாகி கள்வனை வதம் செய்து, குழந்தையை தன்னுள் அடக்கம் செய்து கொண்டாளாம். குழந்தையை தேடிவந்த அரசனிடம் "உன் குழந்தையை தேட வேண்டாம் என்னுள் சேர்த்துக் கொண்டேன்' என்று சொல்லி, குழந்தையையும் கல் ரூபத்தில் தன் பக்கத்தில் வைத்துக் காத்தருளியதாக வரலாறு.
   சுமார் 5 அடி நீளத்தில் அம்பிகை எட்டு கரங்களுடன் அதிரூப சௌந்தர்யத்துடன் ஐந்து தலை நாகாபரணக் குடையின் கீழ் பஞ்ச வில்வ மரங்களில் ஒன்றாகக் கருதப்படும் மகாலிங்க மரத்தின் கீழ் சயன கோலத்தில் காட்சியருளுகின்றாள். அம்மனின் காலின் கீழ் ஓர் ஆட்டின் தலை உருவம் தெரிகின்றது. (மேஷத்தின் மேல் இருப்பதாக ஐதீகம்) சுற்றிவர நாகராஜ பரிவாரங்களுடன் இந்த வானம்பார்த்த சந்நிதி அமைந்துள்ளது. அருகில் ஆலயத்தின் தலவிருட்சமாக வேப்பமரம் உள்ளது. அதிசயமாக அதன் இலைகளில் கசப்புத்தன்மை இராது. பக்தி சிரத்தையுடன் சாப்பிடுவோர்க்கு பிணிகள் தீருகின்றது என்ற நம்பிக்கை நிலவுகிறது. எந்த பெரிய காற்றிற்கும், மழைக்கும் ஈடுகொடுத்து அம்மன் சிலைக்கு எந்த பாதகமும் ஏற்படாமல் இன்றைக்கும் காத்திருப்பது தெய்வச் செயலாகும். ஆலயம் அருகில் சிற்றாற்றின் ஓடை ஓடுகின்றது.
   மற்றொரு சந்நிதியில் புதியதாக நின்ற கோலத்தில் வைஷ்ணவி துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, வலம்புரி விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி சிலா ரூபங்களும் நிர்மாணிக்கப்பட்டது. முதலில் வனதுர்கைக்கு பூஜைகள் செய்த பின்னரே வைஷ்ணவி துர்க்கைக்கு பூஜைகள் நடைபெறுகின்றது. இவ்வாலயத்தில் நடைபெற்று வரும் அனைத்து விசேஷங்களுக்கும் சென்னையில் இயங்கி வரும் "துர்க்கா பக்த சமாஜம் டிரஸ்ட்' என்ற அமைப்பு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
   இத்தல சயன துர்க்கை தன்னை நம்பி வரும் அடியார்களுக்கு தீராத வியாதிகளைத் தீர்த்து, மனத்துன்பங்களைப் போக்கி அருள்கிறாள். குழந்தை இல்லாதவர்களுக்கு அப்பேற்றினை நல்கி, நினைத்த காரியத்தை நடைபெறச் செய்து, செழிப்பான வாழ்வருளி அருள்பாலித்து வருகின்றாள்.
   இத்திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா இவ்வாண்டு, செப்டம்பர் 29 - இல் தொடங்கி அக்டோபர் 8 வரை, தினசரி அபிஷேகம், அலங்காரம், சகஸ்ரநாமம் போன்ற வைபவங்களுடன் நடைபெற உள்ளது. அக்டோபர் 6 - துர்க்கையம்மனுக்கு உகந்த துர்க்காஷ்டமி அன்று கன்யா பூஜையும், சுவாசினி பூஜையும்; அக்டோபர் 8 - ஸ்ரீ துர்க்கா சூக்த ஹோமமும், வனதுர்க்கா மந்திர ஹோமமும் வேதவிற்பன்னர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றது.
   நின்று, கிடந்து, அருளுகின்றாள் என்ற நிலையில் தினமும் பல லீலைகளை தன் திருச்சந்நிதியில் நிகழ்த்தி வரும் அன்னை துர்க்கா தேவியை நாமும் சென்று தரிசித்து அருள்பெறுவோம்.

   திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் கங்கைகொண்டான் செல்லும் வழியில் உள்ளது வடக்கு செழியநல்லூர். குறிப்பிட்ட நேரங்களில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து தனியார் மற்றும் அரசு பேருந்து வசதிகள் உள்ளன.
   தொடர்புக்கு: 87545 40171 /
   97901 22493.
   - எஸ்.வெங்கட்ராமன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai