உத்தம தோழர் உதுமான் (ரலி)

உத்தம தோழர் உதுமான் (ரலி)

உத்தம நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் உத்தமர்களே. ஏனெனில் அவர்கள் நந்நபி (ஸல்) அவர்களின் நந்நெறிகளை அணுவும் பிசகாது பிறழாது பின்பற்றியவர்கள்.

உத்தம நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் உத்தமர்களே. ஏனெனில் அவர்கள் நந்நபி (ஸல்) அவர்களின் நந்நெறிகளை அணுவும் பிசகாது பிறழாது பின்பற்றியவர்கள். இதனை இறைமறை குர்ஆனின் 9-100 ஆவது வசனம், "முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் முதலில் முந்தினார்களோ அவர்களையும் நற்செயல்களில் இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியுறுகிறான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைகின்றனர். தொடர்ந்து நீரருவிகள் ஓடும் சொர்க்கத்தை இவர்களுக்காக தயார்படுத்தி வைத்திருக்கிறான். அவற்றில் அவர்கள் நிரந்தரமாக தங்குவர். இது மகத்தான மாபெரும் வெற்றி.''
 முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுவத்தை முதலில் ஏற்றவர்கள் தூய உள்ளத்தினர். கண்ணியமான ஆளுமை அடையப் பெற்றவர்கள். வாரிவழங்கும் தன்மையினர். பெருந்தன்மையோடு நடக்கும் பண்பினர். உயரிய மதிப்பிற்கு உரியவர்கள். இத்தகு நற்குணம் வாய்க்கப் பெற்ற தோழர்களில் நந்நபி (ஸல்) அவர்களின் நண்பர்களில் ஒருவர் உதுமான் இப்னு அப்பான் (ரலி).
 அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்களை உண்மையை கொண்டு உத்தம நபியாக அனுப்பினான். எனவே, அல்லாஹ் மற்றும் அவனின் தூதரின் அழைப்பினை ஏற்றவர்களில் நானும் இணைந்தேன். அவர்கள் எதனைக் கொண்டு அனுப்பப் பட்டார்களோ அவற்றை நான் முழுவதும் ஏற்கிறேன். நானும் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்தேன். அவர்களோடு நான் பைஅத் என்னும் உடன்படிக்கை செய்தேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அவர்களுக்கு மாறு செய்யவில்லை என்று உதுமான் இப்னு அப்பான் (ரலி) அறிவித்தது புகாரி 3696 -இல் பதிவாகி உள்ளது.
 மற்ற தோழர்களிலும் மாநபி (ஸல்) அவர்களோடு தூய்மையாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் நெருக்கமாகவும் இருந்தார்கள் உதுமான் இப்னு அப்பாஸ் (ரலி). தர்மம் செய்வதிலும் வாரி வழங்குவதிலும் வழிகாட்டியாக திகழ்கிறார்கள். தயாள தன்மைக்கும் இரக்க தன்மைக்கும் சிறந்த முன்னோடிகள். நற்செயல்களை விரைந்து நிறைவேற்றுபவர்கள். நற்பணிகளில் முந்துவார்கள் உதுமான் (ரலி).
 ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்ய ஆர்வம் ஊட்டியபொழுது உடையிலிருந்த ஆயிரம் தீனார் தங்க காசுகளைத் தயங்காது வழங்கினார்கள் உதுமான் (ரலி). அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உதுமானின் முயற்சிகளில் முன்னேற்றமே ஏற்படும் என்று வாழ்த்தினார்கள்.
 உதுமான் (ரலி) தேவை உள்ளவர்களைத் தேடிச் சென்று உதவுவார்கள். வறியவர்களுக்கு வாரி வழங்குவார்கள். உணவுக்கு உதவ கோரியவர்களுக்கு உணவு தானியங்களைத் தானமாக தாராளமாக கொடுப்பார்கள். அவ்வாறு அள்ளி தரும்பொழுது துள்ளும் பாசத்தோடும் துடிக்கும் நேசத்தோடும் காக்கும் கண்ணியத்தோடும் உள்ளே அழைத்து சென்று உதவுவார்கள்.
 அதிக விலை தருவதாக வியாபாரம் பேசும் வணிகர்களிடம் தர்மத்திற்கு ஒன்றுக்குப் பத்தாக தரும் அல்லாஹ்வை விட அதிகமாக நீங்கள் தர முடியுமா? என்று வினா தொடுப்பார்கள்.
 மக்கத்து முஹாஜிர்கள் மதீனாவிற்கு அபயம் தேடி சென்றபொழுது ரூமா என்ற கிணற்றை விலைக்கு வாங்கி பொதுமக்கள் பயன்படுத்த தர்மம் செய்தார்கள். தங்கு தடையின்றி மக்களுக்குப் பொங்கி வரும் நீர் கிடைத்தது. அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களுக்குச் சொர்க்கத்தில் நிலையான நீர் ஊற்று கிடைக்கும் என்று உறுதி கூறினார்கள். மதீனா பள்ளிவாசல் விரிவாக்கத்திற்கு நிலம் தேவைப்பட்ட பொழுது அந்நிலத்தை விலைக்கு வாங்கி அப்பள்ளி வாசல் விரிவாக்கத்திற்குக் கொடுத்தார்கள் உதுமான் (ரலி).
 குர்ஆனைத் தொகுத்து ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பிரதியை அனுப்பினார்கள்- புகாரி 4604. அந்த பிரதிகளோடு குர்ஆனை ஓதுபவர்களையும் அனுப்பினார்கள்- மன்ஜில் இர்பான் 261/ 1. குர்ஆனை ஓதாத நாள் என் வெறுப்பிற்குரிய நாள் என்றார்கள் உதுமான் (ரலி).
 சாந்த நபி (ஸல்) அவர்களின் சத்திய வழியில் நித்தமும் வாழ்ந்த உத்தம தோழர் உதுமான் (ரலி) அவர்களைப் போல் நாமும் நற்செயல்களை நாளும் புரிந்து பொற்புடன் வாழ்வோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com