சீர்மிகு மணவாழ்வு தரும் ஸ்ரீநிவாசர்!

அரசன் மேகநாதனின் புதல்வன் பலி நீதிமானாக இருந்து திருக்கடல்மல்லை திருவிடந்தை ஆகிய பகுதிகளை ஆண்டு வந்தான்.
சீர்மிகு மணவாழ்வு தரும் ஸ்ரீநிவாசர்!

அரசன் மேகநாதனின் புதல்வன் பலி நீதிமானாக இருந்து திருக்கடல்மல்லை திருவிடந்தை ஆகிய பகுதிகளை ஆண்டு வந்தான். மாலி, மால்யவான், ஸுமாலி என்னும் மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் யுத்தம் செய்ய பலியின் உதவியை நாடினர். பலி மறுத்தான். அரக்கர்கள் தேவர்களோடு யுத்தம் செய்து தோற்றுப் போனார்கள். மீண்டும் பலியிடமே தஞ்சம் அடைந்தனர். அந்நேரம், அசுரர்களுக்கு ஆதரவாக யுத்தம் செய்து வென்றான் பலி. தேவர்களைக் கொன்றதால் தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் போவதற்காக திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தான். விஷ்ணு, வராக புஷ்கரணியில் வராக உருவில் காட்சிகொடுத்து "இன்னும் சிறிதுகாலம் இவ்வுலக இன்பங்களைத் துய்த்து கொண்டிரு; என் பக்தனின் விருப்பப்படி ஓர் ஆலயம் அமைக்க, உனக்கு முக்தி சித்திக்கும்' என அருளினார்.
 அதே நேரம், சரஸ்வதி நதிக்கரையில் குனி என்னும் ஒரு ரிஷி தவஞ்செய்து சுவர்க்கம் பெற்றார். குனியின் மகளும் அவ்விதமே சுவர்க்கம் செல்ல எண்ணி தவம் செய்தாள். நாரதர் அங்கு வந்து, "நீ மணமாகாதவள். மணஞ்செய்தாலன்றி சுவர்க்கம் சித்திக்காது' என்று சொல்லி, அங்கு தவஞ்செய்துகொண்டிருந்த மற்ற ரிஷிகளிடம் இப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு நாரதர் வேண்டினார். அம்முனிவர்களுள் பெருமாளின் பரம பக்தனான செளனக மகரிஷியிடம் பயின்ற காலவரிஷி என்பார் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அதனால் பிறந்த 360 கன்னிகளை, பெருமாள் தினம் ஒரு கன்னிகையாக மணம் புரிந்து இறுதிநாளில், அனைத்துக் கன்னிகைகளையும் ஒன்றாக்கி பெரியபிராட்டியாக வராக உருவெடுத்து இடப்புறம் தாங்கியவாறு காட்சி தந்தார். "திரு'வை இடப்புறத்திலே கொண்டதால் அவ்வூர், "திருவிடவெந்தை' எனப்பட்டது.
 செளனக மகரிஷி பலி மற்றும் மேகநாதனின் அழைப்பை ஏற்று அவனைக் காண வந்தார். வரும் வழியில் அழகிய நீரோடைகள், வயல்வெளிகள், தோப்புகளும் நிறைந்த செம்மண் நிறைந்த ஒரு பகுதியை கடந்தார். தினம் திருமாலை வணங்கும் பழக்கம் உடைய செளனக மகரிஷி அன்றைக்கு திருமாலை வணங்கும் நேரம் வந்ததால் தான் வணங்குவதற்கு பெருமாள் குடிகொண்டுள்ள கோயில் எங்கு இருக்கிறது என்று கேட்டார். அப்பகுதியில் பெருமாளுக்கு கோயில் எதுவும் இல்லை என்பதை அறிந்து வருத்தமுற்ற செளனக மகரிஷி, அங்கிருந்த மாஞ்சோலைக்குள் சென்று மகாவிஷ்ணுவுக்காக கடும் தவமிருந்தார். மகிழ்ந்த மகாவிஷ்ணு நேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தோன்றினார்.
 ரிஷியின் தவத்தை மெச்சி வரம் அளிக்க விரும்பினார் திருமால். "இப்பகுதி செழிப்பான முல்லை நிலமாக இருந்தும் மக்களும் மற்றவர்களும் இல்லாமல் வனப்பகுதியாக இருக்கிறது. என் மன்னரும் நண்பருக்காவும் உலக நலன் வேண்டி பூஜை செய்ய நான் செல்வதால் தவம் செய்வதற்கு ஓர் ஆசிரமம் அமைப்பதுடன் ஆலயம் ஒன்று எடுக்கப் போகின்றேன். இங்கு வந்து விட்ட நீங்கள் இங்கேயே இருந்து அருளவேண்டும்' என்று ரிஷி வேண்டினார். திருமாலும் அனுக்கிரகித்தார். மகரிஷியும் மன்னன் மேகநாதன் மூலம் ஆசிரமும் கோயிலும் எடுத்து தவம் செய்து வந்தார். அதுமுதல், அங்கிருக்கும் பெருமாளை வணங்கியவர்களுக்கு விரும்பியது கிடைத்தது; வேண்டியது நடந்தது. சீர் மனம் சேர்க்கும் பகுதியாக அமைந்ததால் சீர் மனம் சேரி, சேருமனஞ்சேரி என்றாகி, செம்மஞ்சேரி என வழங்கப்படுகிறது.
 திருக்கடல்மல்லை மற்றும் திருவிடந்தையை அபிமானத் தலமாகக்கொண்ட இத்தலப்பெருமாள், ஸ்ரீநிவாசப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். கருவறையில் சொர்ண விமானத்தின்கீழ் ஸ்ரீதேவி }பூதேவியுடன் நடுவே நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி, உற்சவருடன் நின்றருளுகிறார்.
 கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம், பலிபீடம், கொடி மரம், கருடன் சந்நிதி ஒரே நேர்க்கோட்டில் கருவறை நோக்கி அமைந்துள்ளன. தாயார் அலர்மேல்மங்கை, படிதாண்டாப் பத்தினி. சக்கரத்தாழ்வார், காளிங்க நர்த்தன கிருஷ்ணர், ஆண்டாள், ஸ்ரீ ராமர், லட்சுமணர், சீதை, அனுமார் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.
 குழந்தை பாக்கியம் அருளும் தலமாகவும், கல்யாணநிவர்த்தி தலமாகவும், செல்வமும் தாலிபாக்கியமும் தந்தருளும் தலமாகவும் விளங்குகிறது.
 வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை, மாத திருவோணம் என்று வருடம் முழுவதும் திருநாள்கள் நடந்தாலும் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை ஸ்ரீநிவாசப்பெருமாளின் அபூர்வ வீதி புறப்பாடு நடைபெறுகிறது. வருடத்தில் இந்நாளில் மட்டும் தான் வீதியில் பெருமாள் புறப்பாடாகி ஊர் முழுக்க சென்று அனுக்கிரகம் செய்து வருவார். அன்றும் மறுநாளும் பெருமாளை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால் அல்லல்கள் அகலும் என்பது ஐதீகம்! இவ்வாண்டு புரட்டாசி 3 -ஆம் சனிக்கிழமை புறப்பாடு: அக்டோபர் 5 -ஆம் தேதி நடைபெறுகிறது. பக்தர்கள் பெருமளவில் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு பெருமாளின் பேரருளைப் பெறலாம்.
 சென்னை- பழைய மகாபலிபுரம் சாலையில் சோழிங்கநல்லூர்- நாவலூருக்கு இடையே செம்மஞ்சேரி ஆலமர பேருந்து நிறுத்தத்திற்கு சற்று அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
 தொடர்புக்கு: 97909 20744/ 97908 79760.
 - செங்கை பி. அமுதா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com