புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 28

இயேசுவின் மலைப்பிரசங்கம் காந்தி, டால்ஸ்டாய் போன்ற உலகத் தலைவர்களை எல்லாம் ஈர்த்துள்ளது. கலிலேயா கடற்கரை பகுதியில் தான் இயேசு மலைப்பிரசங்கம் செய்த இடம் உள்ளது
இயேசு மலைப் பிரசங்கம் செய்த இடம்
இயேசு மலைப் பிரசங்கம் செய்த இடம்

மலைப் பிரசங்க இடம் (இஸ்ரேல்)
 இயேசுவின் மலைப்பிரசங்கம் காந்தி, டால்ஸ்டாய் போன்ற உலகத் தலைவர்களை எல்லாம் ஈர்த்துள்ளது. கலிலேயா கடற்கரை பகுதியில் தான் இயேசு மலைப்பிரசங்கம் செய்த இடம் உள்ளது. இன்றைய வடக்கு இஸ்ரேலின் மலைப்பாங்கான பகுதியில் தமது சீடருக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்ட சொற்பொழிவாகும். இப்பிரசங்கத்தின் ஆரம்பம் ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது இயேசு கற்பித்த ஜெபத்தையும் அகிம்சை, "அடுத்த கன்னத்தையும் காட்டு'' போன்ற இயேசுவின் முக்கிய படிப்பினைகளைக் கொண்டுள்ளது. பல கிறித்தவர்கள் மலைபிரசங்கத்தை பத்து கட்டளைகளிற்கான இயேசுவின் விளக்கமெனக் கருதுகின்றனர். மலைப்பிரசங்கம் கிறித்தவத்தின் மையக் கருத்துகளைக் கொண்டிருக்கிறது.
 மலைப்பிரசங்கத்தின் முக்கிய அம்சங்கள்:
 மத்தேயு 5-ஆம் அதிகாரத்தின்படி, அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
 சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள். நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. நியாயப்
 பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார் என்றார்.
 மலைப்பிரசங்கத்தின்போது பழைய யூத அல்லது கிறிஸ்தவ மதத்தில் இருந்த பல சடங்குகளை மாற்றி புரட்சிகரமான கருத்துக்களை இயேசு போதனை செய்த இடம் தான் இந்த மலைப்பிரசங்க இடம். இயேசு அமர்ந்து பிரசங்கம் செய்த இடத்தில் இப்போது ஓர் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. மலைப்பிரசங்கம் முடிந்து அவர் கீழே இறங்கியபோது அங்கு வந்த ஒரு குஷ்டரோகியை அவர் கையால் தொட்டு குணப்படுத்தினார் (மத்தேயு 8: 1 முதல் 3-ஆம் வசனங்கள். பின்னர் அவர் அங்கிருந்து கப்பர்நகூமுக்கு புறப்பட்டுச் சென்றார் (மத்தேயு 8:5).
 - ஜெபலின் ஜான்
 (தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com