Enable Javscript for better performance
தோஷங்கள் நீக்கி அருள்புரியும் அர்ச்சுனேஸ்வரர்!- Dinamani

சுடச்சுட

  
  vm5

  புராணச்சிறப்பு:
   சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போலவே கொங்குநாடும் தனிப்பட்ட சிறப்புடையதாகும். அக்காலத்தில் கொங்குநாடு மூன்று பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்தது. அதாவது மேல்கொங்கு, வடகொங்கு, தென் கொங்கு என்பன. பழனி, திருவாவினங்குடி, திருமூர்த்திமலை முதலிய சிறந்த தலங்கள் தென் கொங்கில் உள்ளவையே. அமராவதி நதிக்கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் உடுமலை வட்டத்தில் ஏழு சிவாலயங்கள் உள்ளன. அவ்வகையில் கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோயில் மூர்த்திப் பெருமையும், தீர்த்தப் பெருமையும், அதனால் தலப்பெருமையும் உடையது.
   கடத்தூர் என்ற பெயர் சில தகவல்களை பின்னணியாக கொண்டுள்ளது. பஞ்ச பாண்டவர்கள் தங்களது வனவாச காலத்தில் இங்கு வந்து மறைந்து வாழ்ந்து வந்ததாகவும், அவர்களைக் கண்டுப்பிடிக்கவும் இந்த ஊரில் உள்ள மாடுகளை கடத்திச் சென்று ஆற்றின் மறுகரையில் அடைத்து வைத்ததாகவும், அதனால் அந்த இடம் காரைத்தொழுவு என்றும் மாடுகளை கடத்திய இடம் பின்னால் கடத்தூர் என அழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
   பண்டைக்காலத்தில் அடுத்த நாட்டுடன் போருக்கு சென்று திரும்பும்போது கால்நடைகளை கவர்ந்து செல்வதுண்டு கடத்தூர் அருகில் படை வீடுகளும், கோட்டையும் இருந்துள்ளது. எனவே பகையரசன் ஒருவன் மன்னரின் பட்டிமாடுகளையும், கால்நடைகளையும் கடத்திச் சென்று காரைத்தொழுவு என்ற ஊரில் வைத்திருக்கலாம் என்று ஓரு தகவல் கூறுகிறது. இது ஓரு தகவலாக இருந்தாலும் மறுபுறம் கல்வெட்டுச் செய்தி ஒன்றில் இவ்வூர் இராசராச நல்லூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவனுக்கு ஆளுடையார் திருமருதுடையார், மருதீசர், மருந்தீசர் என்ற திருநாமங்களும் உண்டு. இது போன்ற பல திருநாமங்கள் இருந்தாலும் அர்ச்சுனேஸ்வரர் என்றுதான் அழைக்கப்படுகிறார்.
   அதிகாலையில் சூரிய பகவான் இவ்விறைவனை வழிபட அமராவதி ஆற்று நீரில் மூழ்கி எழுந்து தன் கிரணங்களை மாசு மறுவற்ற சோதி பிழம்பாய், அருட்பெரும் சோதியாய், சுயம்பாய் ஒளிரும் அர்ச்சுனேஸ்வரர் மீது செலுத்தி பிரதிபலிப்பதால் இவ்விறைவனை வழிபடுவோர்க்கு நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் கால சர்ப்ப தோஷமும் நீங்கப்பெறும். சுயம்புலிங்கம் எனும் உத்ரபாகம் இரண்டறை அடி கொண்டது. விஷ்ணுபாகம் பிரம்மபாகம் எனும் ஆவுடையார் 3 அடி உயரமும், 16 அடி சுற்றளவும் கொண்ட வடிவிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
   கோமதி அம்மன்:

   கோமதி என்பதற்கு தன்னொளியுடைய அழகிய சந்திரனின் முகத்தையுடையவள் என்று பொருள். இத்திருக்கோயில் கல்வெட்டு திருக்காமக் கோட்டத்து மங்கையர்க்கரசி நாச்சியார் எனக் குறிப்பிடப்படுகின்றது. கோமதியம்மன் நின்ற கோலத்தில் நான்கு அடி உயர திருமேனி கொண்டு, இரண்டு திருக்கரங்களுடன் தனிக்கோட்டத்தில் தனி சந்நிதி கொண்டு, தனித் திருச்சுற்று, திருமதில், வாயில் சுதந்திரதேவியாக இருந்து அருள்பாலிக்கின்றாள். சிவன் ஆலயத்திற்கு இடது பக்கம் அம்மன் கோயில் அமைவது மரபு, ஆனால் இங்கு வலது பக்கம் அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
   அம்மன் சந்நிதிக்கு அருகில் இடது பாகம் பூத்துக்குலுங்கும் அரளிச் செடியோடு ஒரு புற்றுலிங்கம் இருக்கிறது. இது 300 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த புற்றுலிங்கத்திற்கு பெண்கள் தங்களுடைய நேர்த்திக்கடன்களை வைத்து பலன்அடைகின்றனர்.
   கட்டட அமைப்பு:
   சிவன் சந்நிதியும், அம்மன் சந்நிதியும் கிழக்கு பார்த்தவாறு உள்ளது. சிவன் சந்நிதி முற்றத்தில் கிழக்கு குடவரையுடன் கூடிய அழகிய 3 நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. நான்கு மண்டபங்கள் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன.
   சிவன் சந்நிதி முன்பு நந்தி மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தில் உட்புறம் வடபாகத்தில் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கம் கிழக்கே ஆற்றைக் கடந்து தாராபுரம் செல்வதாக கூறப்படுகிறது. சூரியனின் திசை மாறும் காலங்களாக உத்திராயணம், தட்சிணாயணம் எனும் இரு காலங்களிலும் கோயில் மண்டபத்தில் சூரிய ஒளிபடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
   அம்மன் சந்நிதி முற்றத்தில் அழகிய விமானத்துடன் கூடிய அதிகார நந்தி வீற்றிருக்கிறார். கிழக்கு வாயிலில் குடவரையுடன் கூடிய தாங்கு மண்டபத்தின் மேல் தளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக்காட்சி நன்கு அமைந்துள்ளது. திருக்கோயில் திருச்சுற்றில் வலம்புரி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. சுவாமி சந்நிதியின் கருவறையின் தெற்கு தேவகோட்டத்தில் தென்திசைக் கடவுளான தட்சிணாமூர்த்தியின் திருமேனி வெள்ளைப் பளிங்குக் கல்லால் ஆனது. இது காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றனர்.
   வழித்தடம்:
   உடுமலைப்பேட்டையில் இருந்து நகரப்பேருந்துகளில் கடத்தூர் பேருந்து நிறுத்தம் சென்று, அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
   தொடர்புக்கு: 86086 03279/ 97151 34275.
   - பொ.ஜெயச்சந்திரன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai