Enable Javscript for better performance
நன்றி நவிலும் நிறைபணி- Dinamani

சுடச்சுட

  
  vm4

  நவதானியங்களில் மனித உடலுக்குத் தேவையான அனைத்து ஆற்றலையும் பெருக்கித்தரக்கூடிய சக்தி அடங்கியுள்ளது. இவை அனைத்தும் விவசாயியின் விளைநிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடை செய்து பக்குவமாக மக்களுக்கு சென்றடைகிறது. நம் இந்திய திருநாட்டின் வீடுகளில் நவதானியமின்றி சமையல் சாப்பாடு கிடையாது. இதன் மேன்மையை வரும் சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில்; நம் முன்னோர்கள் பல பாரம்பரிய விழாக்கள் செய்து வந்தனர் அதில் நவராத்திரியும் முக்கியமான திருவிழாவாகும்.
   நவராத்திரி கொண்டாடப்படும் புரட்டாசி மாதத்தில் மழை பெய்து தட்ப வெப்பநிலை காரணமாக நம் உடல்நிலை மந்தமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு மந்தகதியை சரிசெய்ய; காவிரி பாய்ந்தோடும் தஞ்சைத்தரணி வாழ் மக்கள், இந்த நவதானியத்தில் சுண்டலை செய்து தானும் உண்டு அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.
   இதன் தொடர்ச்சியாக, ஊர்மக்கள் கூடுமிடமான, மாமன்னர்களால் கட்டப்பட்ட கலைக்கோயில்களுக்கு தினமும் சென்று வணங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கோயிலிலும் கொலு வைக்கும் பழக்கம் உருவானது. அந்த கொலுவில் ஒழுக்கத்தையும், தர்மசிந்தனையையும் தூண்டும் நள-தமயந்தி, சத்யவான்-சாவித்திரி, தேவாசுரர்கள் அமிர்தம் கடைந்தவிதம், ராமாயண, மகாபாரத இதிகாச புராணங்களில் வரும் பிம்பங்களை கொலுவில் வைத்து பொதுவில் மக்களின் நல்லசிந்தனைக்கு வித்திட்டனர். பத்தாம் நாள் விஜயதசமியன்று நற்காரியங்கள் செய்தால் நன்மையே நடைபெறும் என்ற செய்தியைக் கூறி, அன்றைய தினம் அடுத்த தலைமுறை படிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கும் நாளாக தேர்ந்தெடுத்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
   இப்படி கொண்டாடப்படும் நவராத்திரி விழா நடக்கும் இடமான காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் விளையும் காய்கறிகளான, மருத்துவ குணம் அதிகமுள்ள வாழை, வெண்டை, கத்திரி, புடலை, பூசணி, பரங்கி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றைத் தந்தருளிய இறைவனுக்கு நன்றி பாராட்டும் விழாவினை இந்த நவராத்திரி முடிந்தபின் அடுத்து வரும் பெளர்ணமி நாளில் "நிறைபணி' என்ற உற்சவம் கொண்டாடி வருகின்றனர்.
   அநேகமாக தஞ்சை மாவட்ட அனைத்துக் கோயில்களிலும் செய்து வந்த இந்த உற்சவம் தற்போது நின்றுபோய்; திருவையாறு ஐயாரப்பன் கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயில், வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயில்களில் மட்டுமே நடைபெறுகிறது.
   மக்களுக்கு இறைவன் தந்த இந்த கொடையை அவனுக்கு தன் விளைநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் காய்கறிகளால் மாலையில் சுவாமி சந்நிதிகளில் அலங்கரித்து இரவு அர்த்தஜாமம் முடிந்தபின் அதனை அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கிறார்கள். அதனை நம் வீட்டிற்கு எடுத்துச்சென்று நம் சமையலில் கலந்து உண்டு மகிழ்ந்தால் அந்த மகிழ்ச்சி நம் வாழ்நாளில் தொடரும் என்பது ஐதீகம். விட்டுப்போன ஆலயங்களில் இந்த விழா மீண்டும் தொடருமானால் இயற்கை வளம் பெருகி, மக்களின் வாழ்வு வளம்பெறும்.
   இந்த ஆண்டு, அக்டோபர் 13 -ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, நவதானியங்களையும், காய்கறிகளையும் நமக்கு தந்தருளிய அந்த இறைவனுக்கு நாம் நன்றி கூறும் நிறைபணிவிழா நடைபெறுகிறது.
   - எஸ். எஸ். சீதாராமன்
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai