Enable Javscript for better performance
பாவ மீட்சி பரிகாரம்- Dinamani

சுடச்சுட

  
  vm2

  ஏவுகணையால் வேவு பார்த்து மேவும் உலகில் மேலாண்மையை நிலை நிறுத்தி ஈவு இரக்கமின்றி ஓவாது ஒல்லும் வகையெல்லாம் வென்று வாகை சூடும் வெறியில் நெறி பிறழ்ந்து தறி கெட்டு வாழும் இக்காலத்தில் அறம் தவறி புறவழியில் பொருளீட்டும் நோக்கத்தின் தாக்கத்தால் புரியும் தகாத பாவங்களிலிருந்து மீட்சி பெற்று மீண்டும் தூண்டில்புழுவாய் கவரப்பட்டு, துடிக்கும் மீனைப்போல் பாவ படுகுழியில் விழாது விழுமிய வாழ்வு வாழ வான்மறை குரான் வழங்கும் அறிவுரைகளை நடைமுறையில் கடைபிடிப்போம். கிடைத்தற்கரிய அல்லாஹ்வின் பாவமன்னிப்பால் கடைத்தேற்றம் பெறுவோம்.
   எவரேனும் (பிறர் இழைத்த இன்னலை) பொறுத்து மன்னிப்பது வீர செயல் என்று எழில்மறை குர்ஆனின் 42-43 ஆவது வசனத்திற்கு வள்ளல் நபி (ஸல்) அவர்கள் ""யார் மன்னிக்க வில்லையோ அவர் மன்னிக்கப்பட மாட்டார்'' என்றுரைத்த விளக்கம் அஹ்மது நூலில் உள்ளது. 24 -18 ஆவது வசனமும் ""அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதில்லையா?'' என்று வினா எழுப்புகிறது. மகள் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அபாண்ட பழி சுமத்திய மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு வழக்கமாக செய்த உதவியை நிறுத்தி விட்டார்கள் அபூபக்கர் (ரலி). அப்பொழுது இந்த வசனம் இறக்கப்பட்டதாக இறைமறை குர்ஆனுக்கு விளக்கம் எழுதுவோர் குறிப்பிடுகின்றனர்.
   ""எவரேனும் பாவத்தைச் செய்து அல்லது தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொண்டு பின்னர் திருந்தி வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் அல்லாஹ்வை மிக மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் காண்பர்'' என்று 4-110 ஆவது வசனம் கூறுகிறது. பாவம் புரிந்தவன் பாவத்திற்காக வருந்த வேண்டும். திருந்த வேண்டும். அப்பாவத்தைச் செய்துவிட்டு பிறர்மீது வீண்பழி சுமத்தி இருந்தால் பழிக்கு ஆளானவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
   பாவ மீட்சி பெற அவசியமான அம்சங்கள்:
   * பாவத்தை பாவம் என்று உணர்ந்து உள்ளம் உருக வருந்த வேண்டும்.
   * செய்த செய்கிற பாவங்களை உடனடியாக விட்டு விலக வேண்டும்.
   * இனி இப்பாவ செயல்களைச் செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டு அவ்வுறுதியை இறுதிவரை நிறைவேற்றுவதாக இறைவனிடம் உறுதி செய்ய வேண்டும்.
   * பாவ செயலால் பாதிக்கப் பட்டவரிடம் முதலில் மன்னிப்பு பெற வேண்டும்.
   509 ஆவது வசனம் எவர் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறாரோ அவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களிக்கிறான் என்றுரைக்க 29-7 ஆவது வசனம் எவர் நம்பிக்கையோடு நற்செயல் புரிகிறாரோ அவர்களின் பாவத்திற்கு அவற்றைப் பரிகாரமாக்கி அவர்கள் செய்ததினும் அழகிய நற்கூலியை நிச்சயம் கொடுப்போம் என்று விரித்துரைக்கிறது.
   முறையாக உளு செய்து தொழுகையை குறித்த நேரத்தில் பேணுதலோடு சரிவர நிறைவேற்றுவது முதலிய வணக்க வழிபாடுகள் இறைவனிடம் மிக அதிக நெருக்கத்தைப் பெற்று தரும். இதனால் பாவத்தில் வீழாது இறைவன் தடுத்து விடுவான். ஒரு மனிதர் அழகிய முறையில் அங்கத் தூய்மைக்குரிய உளு செய்து பின்னர் தொழுகையை நிறைவேற்றுவராயின் அவருக்கு அடுத்த தொழுகைக்கும் இடைவெளியிலான பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற மா நபி (ஸல்) அவர்களின் மணிமொழியை முஸ்லிம் நூலில் காணலாம். ஒரு தொழுகையாளி தொழுகையை நிறைவேற்றிய பிறகு அதே இடத்தில் அமர்ந்திருக்கும்பொழுது கண்ணியம் நிறைந்த வானவர்கள் அவரை மன்னிக்கும்படி இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள்.
   ஒருவர் வார கூட்டு ஜும்மா தொழுகைக்கு முன்னுள்ள அனைத்து சுன்னத்துகளையும் (நபி வழி) நிறைவேற்றும் பொழுதும் அல்லாஹ்வின் மன்னிப்பிற்குத் தகுதி பெற முடியும். எவர் ஜும்மா தொழுகைக்கு உளு செய்து பள்ளிக்கு வந்து ஜும்மா உரையை உற்று கேட்கிறாரோ அவருடைய அந்த ஜும்மாவிலிருந்து அடுத்த ஜும்மா வரை உள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் அல்லாஹ் அதிகபடியான மூன்று நாள்களின் பாவத்தையும் மன்னிக்கிறான் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததை முஸ்லிம், இப்னு மாஜா நூல்களில் காணலாம்.
   அல்லாஹ்விற்காக அழகிய கடன் கொடுத்தால் அதனை உங்களுக்கு இரு மடங்காக்குவதோடு உங்கள் குற்றங்களையும் மன்னிக்கிறான் என்று 64- 17 ஆவது வசனம் இயம்புகிறது. மனம் உவந்து நன்மைகள் பயக்கும் வறுமை ஒழிப்பு, மருத்துவ, கல்வி, உற்றுழி உதவும், அநாதைகளை ஆதரிக்கும் செலவுகள் அல்லாஹ்விற்கு அளிக்கும் அழகிய கடன்கள். இப்படி செலவு செய்பவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். அவர்களுக்குக் கூலியைப் பன்மடங்காக பெருக்கி தருகிறான். தான தர்மங்கள் தவறுகளை அழித்து விடும்; பாவங்களைக் கரைத்து இல்லாமல் ஆக்கிவிடும் என்று பத்ஹுல் பாரி நூலில் விளக்கம் உளளது.
   தொழுகை தான தர்மங்கள் நற்செயல்களை முறையாக நிறைவேற்றி கறைபடியும் பாவங்கள் களையப் பெற்று இறைவனிடம் மன்னிப்பைப் பெறுவோம். மாண்புடன் வாழ்வோம்.
   - மு.அ. அபுல் அமீன்
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai