அண்டத்தோர் அண்ட வேண்டிய அண்டமி!

மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாக தரிசிப்போர்க்கு அனைத்து நலன்களும் பெருகும் என்பது நாம் அறிந்ததே. பொதுவாக, ஒரு தலத்தின் பெயர் அங்கு கோயில் கொண்டுள்ள இறைவன்,
அண்டத்தோர் அண்ட வேண்டிய அண்டமி!

மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாக தரிசிப்போர்க்கு அனைத்து நலன்களும் பெருகும் என்பது நாம் அறிந்ததே. பொதுவாக, ஒரு தலத்தின் பெயர் அங்கு கோயில் கொண்டுள்ள இறைவன், இறைவி பெயருடனோ அல்லது அத்தலவரலாற்றுப் பின்னணியில் தொடர்புடைய பெயர்களில் ஒன்றாகவோ சம்மந்தப்பட்டிருக்கும். ஆனால் விதிவிலக்காக, ஒரு திருத்தலத்தின் நாமம் அங்கு அமைந்துள்ள தீர்த்தத்தின் பெயரை விளக்குவதாக அமைந்திருப்பது என்பது ஓர் அரிய செய்தி அல்லவா? ஊரே கோயில், ஊரே தீர்த்தம், ஊரே இறைவன் என பெருமிதத்துடன் திகழும் அந்த தலம் தான் "அண்டமி' "அண்டமி திருத்தலமகிமை' என்ற தலவரலாற்று நூலிலிருந்தும், செவிவழிச் செய்திகளாகவும் பல்வேறு தகவல்கள் அறியப்படுகின்றன.
 தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையிலிருந்து மதுக்கூர் வழியாக மன்னார்குடி செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது அண்டமி கிராமம். அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் சுருக்கி ஒரே ஒரு நீர்த்துளியாக மாறிய இறை சக்தியின் வெளிப்பாடாக அமையும் அந்த GOD PARTICLE (சிறு அணுத்துளிக்கே) சித்தர்கள் கொடுத்த பெயரே அண்டமிகு தீர்த்தம் என்பதாகும். இந்த பெயரே தற்போது அண்டமி என அழைக்கப்படுகிறது. எம்பெருமான் அசரீரியாகவும், நீர்த்துளி வடிவிலும் தன்னுடைய ரூபத்தை வெளிப்படுத்துவதாக ஐதீகம்.
 சைவ சித்தாந்தத்தில் கூறப்படும் பதி, பசு, பாசம் எனும் இந்த மூன்று அடிப்படை சக்திகளை உஜ்ஜீவ சக்திகள் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். இந்த அடிப்படை சக்திகள் அடங்கியது முக்கோண வடிவமாகும். அதுவே மூன்று சக்திகளின் பரிமாணம். இறைவன் ஆதியில் இந்த பிரபஞ்சத்தில் உஜ்ஜீவ சக்தியாக கொண்ட தோற்றமே அண்டமி திருத்தலத்தில் சிவகங்கை தீர்த்தம் என்னும் பெயர் கொண்டு விளங்குகிறது. சிவபெருமான் சடையிலிருந்து கீழே விழும் கங்காதாரையை தாங்கும் பொருட்டு, வாமதேவரிஷி பொங்கி வழிந்த கங்கையை தன் கமண்டலத்தில் ஏற்று அதை அண்டமி திருத்தலத்தில் சிவகங்கைத் தீர்த்தமாக நிலை நிறுத்தியதாகவும், அதனால் இதற்கு சிவகங்கை எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது. ஆலயத்தை விட திருக்குளத்தின் பரப்பளவு அதிகம். இரண்டு படித்துறைகள் உள்ளன.
 சிவகங்கை தீர்த்தக்குளத்தில் பூக்கும் தாமரை மலர்களே எந்த அளவிற்கு நாம் இந்த தீர்த்தத்தை தெய்வீகமாக வழிபடுகிறோம் என்பதைக் குறிக்கும் அளவுகோலாக அமைகின்றன. இத்தல தாமரைகளை வெறுமனே தரிசனம் செய்து வந்தால் கூட போதும். கண் நோய்கள் கனவிலும் அண்டாது என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
 பித்ரு தேவர்களின் அனுக்கிரகத்தைப் பெற செய்யப்படும் ஹோமங்கள், தர்ப்பணங்கள் போன்றவற்றிற்கு உகந்த தலம் அண்டமி ஆகும். அவரவர்கள், பித்ருக்கள் இறந்த திதி நாட்களிலும், நட்சத்திர நாட்களிலும், அமாவாசைகளிலும் முக்கியமாக, மகாளயஅமாவாசையிலும் அண்டமி சிவகங்கை தீர்த்தக் கரையிலோ, படித்துறைகளிலோ அல்லது திருத்தலத்தின் எப்பகுதியில் வேண்டுமானாலும் பித்ரு கடன்களை ஆற்றி அபரிமித பலன்களைப் பெறலாம்.
 இதைத்தவிர மற்றும் மூன்று சிறப்புகள் இத்தலத்தை தொடர்புபடுத்தி பேசப்படுகின்றன. ஒன்று: வாஸ்து பகவான் தோன்றிய திருத்தலம் அண்டமியாகும். எம்பெருமான் ஆடல் கோலங்கள் அறுபத்து நான்கையும் தன்னுடைய அம்சங்களாக ஏற்றுக்கொண்டு 64 திசைகளுடைய வாஸ்து மூர்த்தியாக தோற்றம் கொண்டது இந்த அண்டமி தலத்தில் தான். எம்பெருமானிடமிருந்து நாகர வடிவ அனுகிரகத்தைப் பெற்ற மயன் முதன் முதலில் எழுப்பிய திருத்தலம் அண்டமி எனவும், அக்கால ஸ்தபதிகளும், சிற்பிகளும் அண்டமி திருத்தலத்திற்கு வந்து இங்குள்ள திசையை அடிப்படையாக வைத்து தங்கள் ஊரில் உள்ள திருக்கோயில்களை நிர்மாணிப்பது வழக்கம் எனவும் கூறப்படுகின்றது. இரண்டாவது: இத்தலத்தில் உள்ள அகமர்ஷண விநாயகர் சந்நிதி அமைந்த இடத்தில் ஈசனே தன்னுடைய திருக்கரங்களால் தரையில் ஒரு வட்டத்தை வரைந்தார். அந்த வட்டத்தை அகழ்ந்தெடுக்க அதுவே சக்கராயுதமாக மாறி ஜலந்தராசுரனின் கழுத்தை அறுத்து அவனை சம்ஹாரம் செய்தது. அதன் காரணமாக இந்த பூமியில் முதன் முதலில் வட்டம் என்ற வடிவம் தோன்றிய இடம் அண்டமி திருத்தலத்தில் தான் என்று கூற்றும் சொல்லப்படுகிறது. மூன்றாவதாக: மஹாவிஷ்ணு செந்தாமரைக்கண்ணன் என்ற நாமத்தைப் பெற்றதும் இத்தலத்தில் தானாம்.
 ஊரின் மையத்தில் உள்ளது சிவாலயம். கோயிலின் பின்புறம் உள்ளது சிவகங்கைத்தீர்த்தம். இறைவன் அருணாச்சலேஸ்வரர் சதுர பீடம் கொண்டு காட்சியளிக்கிறார். இறைவி உண்ணாமுலையம்மை என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கி காட்சியளிக்கின்றாள். கோயிலின் தென் மேற்கில் விநாயகப் பெருமான் சந்நிதியும், முருகப் பெருமான் சந்நிதியும் அமைந்துள்ளது. கூர்ம பீடத்தின் மேல் உலக உருண்டை வடிவம் அமைக்கப்பட்டு அதன் மேல் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை ஆகி இருப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு.
 பிரபஞ்சத்தின் ஆதி தலம் என்பதால் இங்கு எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்தி கல்லாலமரமின்றி, சனகாதி முனிவர்கள் இன்றி இரண்டு கரங்களுடனே அருளாட்சி செய்கிறார். வேறெங்கும் காண முடியாத மிக எளிமையான கோலம். அண்டமி தலத்தின் தலமரம் கல்லால மரம் என்று கூறப்படுகின்றது.
 இவ்வாறு, அரிய பல பெருமைகளுடன் திகழும் அண்டமி திருத்தலத்தில் குடமுழுக்கு என்ற வைபவம் நடந்தேறி பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. காலப் போக்கில் சிதிலமடைந்த ஆலயத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும், அவணியிலுள்ளோர் இங்கு வந்து வழிபட்டு பலன்கள் பெற வேண்டியும் கிராம மக்கள், சிவனடியார்கள் ஒருங்கிணைந்து, "அண்டமி அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் சாரிடபிள் டிரஸ்ட்' என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு திருப்பணி வேலைகளை மேற்கொண்டுள்ளனர். அது முழுமையாக நிறைவேறும் தருவாயில், வரும் டிசம்பர் மாதம் குடமுழுக்கு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் பக்தர்களின் பங்களிப்பு அவசியமாக உள்ளது.
 தொடர்புக்கு: 98653 09503 / 93612 74368.
 - கடம்பூர் விஜயன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com