பொருநை போற்றுதும்! 62 - டாக்டர் சுதா சேஷய்யன்

பத்மகுளத்தில் சில காலம் தங்கியிருந்த மன்னன் குடும்பம், குடும்ப வாரிசு நலம் பெற்ற பின்னர், காசி நாட்டை அடைந்தது. பேரரசி விசாகி புகழாட்சி நடத்தினாள்
பொருநை போற்றுதும்! 62 - டாக்டர் சுதா சேஷய்யன்

பத்மகுளத்தில் சில காலம் தங்கியிருந்த மன்னன் குடும்பம், குடும்ப வாரிசு நலம் பெற்ற பின்னர், காசி நாட்டை அடைந்தது. பேரரசி விசாகி புகழாட்சி நடத்தினாள். இருள் சூழ்ந்த உள்ளத்திற்கு ஒளிகூட்டும் மாணிக்கமாகவும், பூமியில் மானுடச் சந்ததிகள் தழைத்து ஓங்கும் வகையில் பொலியத் தோன்றினார் என்பதாலும், பகவானுக்கு "தேசமாணிக்கம்' என்னும் திருநாமம் தோன்றியது.
 சுற்றுப் பிரகாரங்களும் மண்டபங்களும் கொண்ட இத்திருக்கோயிலில், மூலவரான தேசமாணிக்கப் பெருமாள், நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவியும் இருபுறம் நிற்க, சங்கு, சக்கரம், கோதண்டம் ஆகியவற்றோடு அபய ஹஸ்தம் தாங்கி சேவை சாதிக்கிறார். உற்சவர், ஸ்ரீதேவி பூதேவி உடனாய ஸ்ரீநிவாசர். தாயார் இருவருக்கும், இங்கு "நம்பிக்கை நாச்சியார்கள்' என்னும் சிறப்புத் திருநாமம் நிலவுகிறது.
 மன்னனுக்கு சுவாமி உரைத்ததைக் கொண்டு, பிள்ளை உண்டாதலின் பல்வேறு நிலைகள் குறித்தும் மகப்பேறு குறித்தும் சிற்பங்கள் அமைக்கப்பட்டனவாம். திருமணத் தடை, மகப்பேறு தடை, திருமண முறிவு போன்ற துன்பங்கள் பீடிக்கப்பட்டோர், ஆவணி துவிதியை விரதம், புரட்டாசி அஷ்டமி மற்றும் ரோகிணி நாள்களில் விரதங்கள், ஏகாதசி விரதங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு தேசமாணிக்கனாரை தரிசித்தால், துன்பங்கள் நீங்கும்.
 சிருஷ்டிகர்த்தாவின் பிரதேசமாக இவ்வூர் கருதப்பட்டதாலேயே பத்மவனம் என்ற பெயரும், உத்யான வனம் போன்ற பெயர்கள் ஏற்பட்டிருக்கக்கூடும்.
 பொதுவாகவே, பொருநையின் தென்கரைக்கும் மனிதப் பிறப்புக்கும் அணுக்கம் இருந்திருக்கவேண்டும். அடிக்கடி கருச்சிதைவுக்கு உள்ளானவர்களும், குழந்தைகளைப் பறிகொடுத்தவர்களும், பிள்ளை தக்கவேண்டுமென்றால், தென்கரை ஊர்களான வீரவநல்லூர், ஹரிகேசநல்லூர், தேசமாணிக்கம் போன்ற பகுதிகளுக்குத் தங்கள் ஜாகைகளை மாற்றிக் கொண்டது, சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்புவரை வழக்கமாக இருந்திருக்கிறது. வனம், நல்லூர் போன்ற சொற்கள் காணாமல் போய், பெருமாளின் பெயரே ஊருக்கும் நிலைத்துவிட்டது.
 கோயில்கள் நிறைந்த கரிசூழ்ந்த மங்கலம்
 தேசமாணிக்கத்திற்கு மேற்காகவும், சேரன் மாதேவி மற்றும் பத்தமடைக்குக் கிழக்கு வடகிழக்காகவும் இருக்கிறது கரி சூழ்ந்த மங்கலம். கலிஜய மங்கலம், கலிசீய மங்கலம், கலிசேகர மங்கலம், குலசேகர மங்கலம் என்றெல்லாம் கல்வெட்டுகளில் பலவிதமாகக் குறிக்கப்பட்டுள்ள சிற்றூர். அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய சுந்தரேச்வரர் திருகோயில், அருள்மிகு காளத்திநாதர் திருக்கோயில், அருள்மிகு சுதர்சன நரசிம்மர் திருக்கோயில், அருள்மிகு அச்சம் தீர்த்த விநாயகர் திருக்கோயில் என்று நிறைய கோயில்களைக் கொண்ட புனிதப் பதி. சொல்லப்போனால், சுற்றிலும் ஏராளமான விநாயகர் கோயில்கள் இருப்பதாலேயே இவ்வூருக்குக் "கரி சூழ்ந்த மங்கலம்' (கரி=யானை, விநாயகர்) பெயர் வந்ததாக உள்ளூர்க்காரர்கள் நம்பிக்கை!
 (தொடரும்...)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com