நானிலத்தோர் கொண்டாடும் நரகசதுர்த்தசி!

ஒருவரின் இறப்பு தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது உலகில் இங்கு மட்டுமே. பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன்

ஒருவரின் இறப்பு தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது உலகில் இங்கு மட்டுமே. பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன். இவனது உண்மையான பெயர் பெளமன். இவன் பிறப்பால் மனிதனாக இருந்தாலும், அசுரர்களின் துர்குணங்கள் அதிகம் இவனிடம் இருந்ததால் நரக அசுரன் என பெயர் பெற்றான். இதன் தொடர்ச்சியாகவே நரகாசுரன் என்றழைக்கப்பட்டான். பிரம்மாவை நோக்கி கடும்தவம் புரிந்து தன் தாயைத்தவிர தனக்கு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்ற அபூர்வ வரத்தினை பெற்றிருந்தான்.
 நல்லோரை காக்கவும், தீயோரை அழிக்கவும் நாராயணர் மண்ணுலகில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார். அவரைத் தொடர்ந்து ஸ்ரீதேவி ருக்மணியாகவும், பூதேவி சத்யபாமாவாகவும் அவதரித்தனர். ஸ்யமந்தக மணிக்கு உடைமையாளரான யாதவகுல அரசன் சத்ரஜித்திற்கு மகளாக துவாரகையில் சத்யபாமா பிறந்தாள். ஸ்யமந்தக மணி யாரிடம் உள்ளதோ அவர்களை யாராலும் வெல்லமுடியாது என்பதால் அதனை கவருவதற்கு பலர் முயன்றனர். சத்ரஜித்தின் தம்பியான பிரசேனன் இந்த ஸ்யமந்தக மணியை தன் அண்ணனிடம் கேட்டுப்பெற்றான். ஜாம்பவானுக்கு எதிர்பாராத விதமாக அந்த மணி கிடைத்தது. அந்த மணியை எடுத்து தன் மகளான ஜாம்பவதியிடம் கொடுத்தான்.
 சத்ரஜித்திற்கு இது தெரியாமல், கண்ணன் தான் பிரசேனனை கொன்று ஸ்யமந்தக மணியை களவாடியிருப்பான் என தவறாக நினைத்தான். ஸ்ரீகிருஷ்ணருக்கு இது தெரியவந்து நேரே ஜாம்பவானிடம் சென்று கேட்டவுடன்; அவதார புருஷர் கிருஷ்ணர் என்பதை உணர்ந்த ஜாம்பவான் உடனே அந்த ஸ்யமந்தக மணியை தந்ததோடல்லாமல் தன் அருமை மகளான ஜாம்பவதியையும் அவருக்கு திருமணம் செய்து வைத்தனுப்பினார். மணி மற்றும் ஜாம்பவதியுடன் துவாரகா வந்த ஸ்ரீகிருஷ்ணரை பார்த்து தன் தவறை உணர்ந்த மன்னன் சத்ரஜித் தன்னுடைய மூன்று மகள்களான சத்யபாமா, விரதினி மற்றும் பிரஸ்வபினி ஆகியோரை திருமணம் செய்து வைத்து கண்ணனை மாப்பிள்ளையாக்கிக் கொண்டார்.
 நரகாசுரன் பிரக்ஜோதிஷ்யா (தற்போதைய அஸ்ஸாம்) என்ற நாட்டின் மன்னனாக கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தான். இந்திரன் கண்ணனிடம் நரகாசுரன் செய்யும் கொடுமைகளைக் கூறி விடுதலை வேண்டினான். கருடனுடன் தன் மனைவியான சத்யபாமாவையும் அழைத்துக் கொண்டு போர் தொடுக்க நரகாசுரனை நோக்கிச்சென்றான் கிருஷ்ணன். மாயக்கண்ணனுக்குத் தெரியும் இந்த நரகாசுரனின் தாய் சத்யபாமாவே என்று.
 நரகாசுரனை கண்ணன் போருக்கு அழைத்து கடும் போர் புரிந்தான். ஒரு கட்டத்தில் மாயக்கண்ணன் வீழும் நிலைக்கு ஆளானது போல் ரதத்தில் மயங்கி அமர்ந்தான். கோபமுற்ற பூதேவியான சத்யபாமா களத்தில் இறங்கி தானே அம்பினை நரகாசுரன் மீது தொடுத்து அவனை கொன்றாள். பின்னரே அவன் தன் மகன் என்று ஸ்ரீகிருஷ்ணரின் மூலம் சத்யபாமாவுக்கு தெரியவந்தது. தன் இறப்பு நாளான இந்த தினத்தை அனைவரும் சந்தோஷமாக கொண்டாட வேண்டுமென தன் தாயிடமும், ஸ்ரீகிருஷ்ணரிடமும் வேண்டினான் நரகாசுரன். அந்த நாளே தீபாவளித் திருநாள் ஆனது.
 கந்தபுராணத்தில் சக்தியானவள் 21 நாள் கேதாரகெளரி விரதமிருந்து ஈசனை அடைந்ததும் இன்னாளே. இந்த நாளில் தான் சிவன் தன்னுள் பாதியை சக்தியிடம் கொடுத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என்று கூறுகிறார்கள்.
 1577 -ஆம் ஆண்டு சீக்கியர்களின் பொற்கோயில் கட்ட ஆரம்பித்த நாள் தீபாவளி ஆகையால் அந்த தினத்தை தங்களின் புனிதமான நாளாக கொண்டாடுகிறார்கள். இந்த நாள் சமணர்களின் குருவான மஹாவீரர் முக்தி அடைந்த நாளாகும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீஷிதர், தயானந்த சரஸ்வதி (ஆர்ய சமாஜ்) போன்ற மஹான்கள் தீபாவளியன்று முக்தி பெற்றார்கள்.
 மஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு நம் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மஹாளய அமாவாசை அன்று நாம் திதி கொடுத்து அவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி இருப்போம். அவர்கள் தொடர்ந்து தீபாவளிக்கு முந்தைய நாள் திரயோதசி அன்று வரை நம்மோடு இருப்பதற்குள்ள அனுமதியை உபயோகப்படுத்திக்கொண்டு, அன்று மீண்டும் தன் உலகிற்கு திரும்பிச் செல்வார்கள். அவர்கள் செல்லும் வழிக்கு வெளிச்சம் காட்டுவதே "யம தீபம்" ஆகும். அத்தீபத்தை நாம் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியில் ஏற்றினால் நம் குடும்பம் விருத்தியாகும், தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.
 துர்மரணம் அடைந்தவர்களுக்கு யம தீபம் ஏற்றுவது மிகவும் முக்கியமானது. அவர்கள் தான் செய்யும் சேட்டைகளை நிறுத்திவிட்டு, தன் குடும்பத்தாருக்கு நலன்களைச் செய்வார்கள். நம் வீட்டின் உயரமான பகுதியில் தெற்கு திசை நோக்கி அலங்காரம் செய்த விளக்கினை ஏற்றி நம் முன்னோர்களை மனதால் அன்போடு நினைத்து வழிபடவேண்டும்.
 சுருங்கக்கூறின் நமக்கு ஞான ஒளியை, ஞானபிரகாசத்தை அளிக்கும் விழா என்பதே தீபாவளியின் தத்துவ பொருளாகும். தீபாவளித் திருநாள், இவ்வாண்டு அக்டோபர் 27 -ஆம் தேதி (ஐப்பசி 10) வருகிறது.
 - எஸ். எஸ். சீதாராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com