புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 30

புனித பேதுரு மீன்: கலிலேயா கடலில் பிடிக்கப்படும் திலாப்பியா (Tilapia) மீன் தான் புனித பேதுரு மீன் என அழைக்கப்படுகிறது
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 30

புனித பேதுரு மீன்: கலிலேயா கடலில் பிடிக்கப்படும் திலாப்பியா (Tilapia) மீன் தான் புனித பேதுரு மீன் என அழைக்கப்படுகிறது. மத்தேயு 17-ஆம் அதிகாரம் 24 முதல் 27-ஆவது வசனங்கள் வரை: இயேசுவும் அவரது சீடர்களும் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து, "உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா?' என்று கேட்டார்கள். "செலுத்துகிறார்' என்றான். அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி, "சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள்' என்று கேட்டார்.
அதற்குப் பேதுரு, "அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள்' என்றான். இயேசு அவனை நோக்கி, "அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டுவதில்லையே! ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில் போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப்பிடித்து, அதன் வாயைத் திறந்துபார். ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு' என்றார்.
அன்று முதல் இதுவரை கலிலேயா கடலில் பிடிக்கப்படும் இந்த திலாப்பியா மீன் தான் பேதுரு மீன் என அழைக்கப்படுகிறது. புனித பயணம் செய்யும் பயணிகள் கலிலேயா கடற்கரைக்கு செல்லும்போது மதிய உணவில் சுவையான இந்த பேதுரு மீன் பரிமாறப்படுகிறது.
ஆப்பிரிக்காவில் தோன்றி, உலகில் மிதமான மற்றும் வெப்பமான தட்பவெப்ப நிலை நிலவும் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் மீனினமாகும். நன்னீரில் இயற்கையாக வாழும் இம் மீன் உவர் நீரிலும் வாழ வல்லது. திலாப்பியா என்று அழைக்கப்படும் மீன் வேறு விதங்களிலும் தமிழில் அழைக்கப்படுகிறது. திலேப்பியா, சிலேபி, சிலேபிக் கெண்டை முதலானவை இம் மீனின் வேறுபெயர்களாகும்.
திலாப்பியா ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து உலகெங்கும் கொண்டு செல்லப்பட்ட உயிரினமாகும். ஆப்பிரிக்க பழங்குடிகள் ஒன்றில் மீன் என்பதற்கு "தில்' என்ற ஒலிக்குறிப்பு இருந்ததாகவும், அதுவே திலாப்பியா என்ற சொல்லுக்கு மூலம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். ஆப்பிரிக்காவில் 180 கோடி ஆண்டுகள் வயது கொண்ட உயிரினப் படிமங்களில் (fossil) திலாப்பியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய கிழக்குப் பிரதேசங்களில் திலாப்பியா தோன்றி வாழ்ந்தது என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொசாம்பிகு திலாப்பியா என்னும் வகை இந்தோனேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மலேசியாவிற்கும், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- ஜெபலின் ஜான்
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com