Enable Javscript for better performance
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 24- Dinamani

சுடச்சுட

  
  vm2

  இயேசு, லாசருவை உயிரோடு எழுப்பிய கல்லறை (பாலஸ்தீனம்)
   பாலஸ்தீன நாட்டில் சர்ச்சைக்குரிய பகுதியான மேற்குக்கரையில் உள்ளது பெத்தானியா. பெத்தானியா (Bethany) என்பது புதிய ஏற்பாட்டில் மரியா, மார்த்தா, லாசர் ஆகியோரின் வீடும், "தொழுநோயாளர் சீமோன்" என்பவரின் வீடும் இருந்த நகரமாகக் குறிப்பிடப்படும் இடம் ஆகும்.
   இயேசுவின் காலத்தில் பேச்சு மொழியாக வழங்கிய அரமேய மொழியில் இது (பெத் ஆனியா) என்று வரும். இதற்கு "துன்பத்தின் வீடு' என்பது பொருள். ஏழைகளின் வீடு என்ற மற்றொரு பெயரும் இதற்கு உண்டு. இயேசு எருசலேம் நகருக்குள் அரசர் போல நுழைந்த பிறகு இந்த ஊரில் தங்கியிருந்தார் என்றும், தமது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இவ்வூரிலிருந்து விண்ணகம் சென்றார் என்றும் புதிய ஏற்பாட்டுக் குறிப்புகள் உள்ளன.
   பெத்தானியா எருசலேமிலிருந்து கிழக்காக 3 கி.மீ. தொலையில் ஒலிவ மலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. அங்கு அடையாளம் காட்டப்படுகின்ற மிகப் பழைய வீடு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது. அதுவே விவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் வருகின்ற மரியா, மார்த்தா, லாசர் என்போரின் வீடு என்று கூறப்படுகிறது. இங்கே பெருந்திரளான மக்கள் திருப்பயணிகளாகச் செல்கின்றனர்.
   அல்-எய்சரியாவில் உள்ள கல்லறை லாசர் அடக்கம் செய்யப்பட்ட இடமாக கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்தே கருதப்பட்டு வந்துள்ளது.
   கும்ரான் அருகே அமைந்த குகைகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட "திருக்கோயில் சுருளேடு" என்னும் ஆதாரத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, நோயுற்றவர்களையும் தொழுநோயால் வாடியவர்களையும் கவனிப்பதற்காக எருசலேமின் கிழக்குப் பகுதியில் மூன்று இல்லங்கள் அமைய வேண்டும். "தூய்மையற்ற எதுவும் எருசலேம் திருநகருக்கு மூவாயிரம் முழம் தூரம் வரை காணப்படல் ஆகாது' என்று அந்த ஏட்டில் கூறப்படுகிறது.
   பெத்தானியா என்ற ஊர் எருசலேமிலிருந்து பதினைந்து ஸ்தாதியம் தொலைவில் இருந்ததாக யோவான் கூறுகிறார் (யோவான் 11:18). இது ஏறக்குறைய 3 கி.மீ. தூரத்தைக் குறிக்கிறது. எனவே, தூய்மையற்றவர்களாகக் கருதப்பட்ட தொழுநோயாளர்கள் போன்றோர் எருசலேமிலிருந்து சரியான தொலையில், பெத்தானியாவில் இருந்தார்கள் என்று தெரிகிறது.
   
   ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் ஆதரவான இல்லம் பெத்தானியாவில் இருந்த பின்னணியில் தான் இயேசு, "ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள்" (மத்தேயு 26:11; மாற்கு 14:7) என்று கூறியிருப்பார் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
   பெத்தானியா பற்றிய புதிய ஏற்பாட்டு குறிப்புகள்:
   புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் பெத்தானியாவோடு தொடர்புடைய ஐந்து நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் பெத்தானியா என்னும் பெயர் பதினொரு முறை வருகிறது. பெத்தானியாவில் வாழ்ந்த லாசர் என்பவர் இறந்துபோக, இயேசு அவருக்கு மீண்டும் உயிர்கொடுத்த நிகழ்ச்சி (யோவான் 11:1-46), இயேசு ஆடம்பரமாக எருசலேமுக்குள் நுழைந்தபோது அருகிலிருந்த பெத்தானியாவிலிருந்து அங்கு புறப்பட்டுச் சென்ற நிகழ்ச்சி (மாற்கு 11:1; லூக்கா 19:29), அந்நிகழ்ச்சியை அடுத்துவந்த வாரத்தில் இயேசு பெத்தானியாவில் தங்கியிருந்த நிகழ்ச்சி (மத்தேயு 21:17; மாற்கு 11:11-12), பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் என்பவரின் வீட்டில் இயேசு உணவருந்தியபோது மரியா இயேசுவின் பாதத்தில் நறுமணத் தைலத்தால் பூசிய நிகழ்ச்சி (மத்தேயு 26:6-13; மாற்கு 14:3-9; யோவான் 12:1-8),
   இயேசு பெத்தானியாவிலிருந்து விண்ணகம் சென்ற நிகழ்ச்சி (லூக்கா 24:50).
   இது தவிர, இன்னொரு தடவை இயேசு, மரியா, மார்த்தா ஆகியோரின் இல்லத்திற்குச் சென்றார் என்று லூக்கா 10:38-42 குறிப்பிடுகிறது. ஆனால் அங்கு "பெத்தானியா" என்னும் சொல் இல்லை. இத்தகைய விவிலிய அற்புதங்கள் நடைபெற்ற நகரம் தான் பெத்தானியா.
   லாசருவை உயிரோடு எழுப்பிய இயேசு:
   பெத்தானியாவில் வாழ்ந்து வந்த லாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். இயேசுவின் நெருங்கிய நண்பர் அவர். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர். மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் லாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். லாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று கூறினார். இயேசு அங்கு வந்தபோது லாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள்கள் ஆகியிருந்தது.
   - ஜெபலின் ஜான்
   (தொடரும்...)
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai