சுடச்சுட

  
  BRAHMAPUTRA-RIVER

  புஷ்கரங்கள் பாரததேசத்தின் பன்னிரண்டு நதிகளுக்கு மட்டுமே உரித்தான "நதிகள் விழா' ஆகும். பொதுவாக இவை மக்கள் புனித நீராடி மகிழும் விழாக்கள். ஒவ்வொரு நதிக்கும் 12 ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாப்படும்."புஷ்கரம்' எனும் சொல் நல்ல நேரம் என்பதை குறிக்கும் சொல்.
   பன்னிரண்டு ஆண்டுகள் என்ற கால அளவுக்கும் "புஷ்கரம்' என்று பெயர். நமது பஞ்சாங்களில் இது புஷ்கர காலம் எனப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கும் தொடர்புடைய நதி எது என்பதை குருபகவான் (வியாழன் அல்லது பிரகஸ்பதி) அந்த காலகட்டத்தில் எந்த ராசியில் உள்ளார் என்பதைப் பொறுத்துக் கணக்கிடப்படும்.
   அந்த ராசியில் குரு குறிப்பிட்டப்படி எவ்வளவு காலம் காணப்படுவாரோ (சஞ்சரிப்பாரோ) அந்த கால அளவு வரை புஷ்கரம் உண்டு. இருப்பினும் குருபெயர்ச்சியின் போது பிரம்ம தேவரின் கமண்டலத்திலுள்ள புஷ்கரம் (சகலதீர்த்த அதிபதி) குரு பகவானுடன் இணைந்து முதல் 12 நாள்கள் அந்த நதியில் எழுந்தருளியிருப்பதாகவும், "ஆதிபுஷ்கரம்' எனப்படும் அந்த நாள்களில் பக்தியுடன் நீராடுவதால் சகலபாவங்களும், கிரகதோஷங்களும், பித்ரு தோஷங்களும் அடியோடு நீங்கி விடும் எனவும் சாஸ்திரங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. மேலும் இந்த புஷ்கரபுண்ணிய காலத்தில் மும்மூர்த்திகளும், தேவர்களும், ரிஷிகளும் அந்தந்த தீர்த்தங்களுக்கு வந்து நீராடி மகிழ்வதாகவும் நம்பப்படுகின்றது. எனவே, இந்த புஷ்கர காலங்களில் நீராடுவது என்பது மூன்றரை கோடி தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியத்திற்கு நிகரானது என கருதப்படுகிறது.

   நதிகளும் அதற்குரிய ராசிகளும்
   கங்கை - மேஷம், நர்மதை - ரிஷபம், சரஸ்வதி - மிதுனம், யமுனா - கடகம், கோதாவரி - சிம்மம், கிருஷ்ணா - கன்னி, காவிரி - துலாம், தாமிரபரணி - விருச்சிகம், பிரம்மபுத்திரா - தனுசு, துங்கபத்ரா - மகரம், சிந்து - கும்பம், பரணீதா (ப்ரணஹிதா) - மீனம்.
   தற்போது குருபகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கின்றார். அடுத்து அவர் தனுர் ராசிக்கு பெயர்ச்சியாகும் போது அந்த ராசிக்கு உரிய நதியான பிரம்மபுத்திரா நதிக்கரையில் நிகழும் விகாரி வருடம் ஐப்பசி 19 -ஆம் தேதி (05.11.2019) செவ்வாய்க்கிழமை முதல் ஐப்பசி 30 -ஆம் தேதி (16.11.2019) சனிக்கிழமை வரை ஆதிபுஷ்கரம் கொண்டாடப்படுகிறது.
   பாரத தேசத்தில் தொன்று தொட்டு விளங்கும் புண்ணிய நதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. ஆசியாவில் இருக்கும் பெரிய நதிகளில் ஒன்று. கைலாயமலையில் பிறந்து (உற்பத்தி) திபெத்தில் இமாலய பள்ளத்தாக்குகளில் தவழ்ந்து, அஸ்ஸாமில் "புஷ்கரவாஹினி' என்ற நாமத்துடன் நுழைகின்றது. நதிகளிலேயே ஆண் நதியாக சித்தரிக்கப்படுவது பிரம்மபுத்திரா மட்டுமே (பிரம்மாவின், புத்திரன்) பல புராண வரலாற்றுப் பின்னணியுடன் திகழும் இந்த நதி பாய்ந்து வளப்படுத்தும் கௌஹாத்தியில் (அஸ்ஸாம் மாநிலம்) புஷ்கரவாஹினி புஷ்கரம் நடைபெறுவது மிகவும் சிறப்பானதாகச் சொல்லப்படுகின்றது.
   முன் காலத்தில் இவ்விடத்தை "பாண்டு" (மகாபாரதத்தில் பிரசித்தியான பெயர்) என்ற பெயரிலேயே வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. மேலும் சக்தி பீடங்களிலேயே தலைமையானதும், முதன்மையானதுமாகிய "காமாக்யா' கோயில் இங்குதான் உள்ளது. மஹா விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் தன் தோஷங்களைப் போக்கிக் கொள்ள தவம் மேற்கொண்ட இடம் இதுவே.
   புஷ்கர காலங்களில் சிறப்பு பலன்கள் (காம்யார்த்தம்) வேண்டி ஹோமங்கள், வேத பாராயணங்கள், சகஸ்ரநாம பாராயணங்கள், பரிகார ஹோமங்கள், அர்ச்சனைகள், பூஜைகள் தகுந்த வேதவிற்பன்னர்
   களைக் கொண்டு நடத்த உள்ளதாகவும், நதிக்கரையில் திதி, தர்ப்பணங்கள், தானங்கள் செய்தல் போன்ற நற்காரியங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள், ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள் ஆசிகளுடனும், அஸ்ஸாம் மாநிலத்து ஆளுநர், அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஒத்துழைப்புடன் இந்த புஷ்கரம் எவ்வித குறையுமின்றி நடைபெற உள்ளதாகவும் விழாக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
   இந்த புஷ்கரவிழாவை நமக்கெல்லாம் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதி நாடெங்கிலுமிருந்து வரும் யாத்ரீகர்கள் முன்னதாகவே பயண ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். புஷ்கரவிழாவில் பங்கேற்று புனித நீராடி, பாவங்கள் களைந்து புண்ணிய பலன்கள் பல பெறுவோம்!
   தொடர்புக்கு: மகாலட்சுமி சுப்ரமணியம் - 98400 53289, வளசை கே.ஜெயராமன்- 94442 79696.
   - எஸ்.வெங்கட்ராமன்
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai