சுடச்சுட

  
  SIDDHAR

  சென்னை - நகரில் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் சேக்காடு என்னும் ஊர் அமைந்துள்ளது. பசுமை நிறைந்த வயல்கள், ஏரிகள் அமைந்து இயற்கை வளம் நிரம்பிய இவ்வூரில் ஏரிக்கரையின் அருகாமையில் அருள்மிகு வேதநாயகி உடனாய சோமநாதீச்சுரர் ஆலயம் உள்ளது. முன்பு இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தது. பின்னர், இக்கோயில் கட்டப்பட்டு சிறப்பாக வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அழகாக பராமரிக்கப்பட்டு வரும் இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கஜ பிருஷ்ட கருவறையில் சிவபெருமான் கம்பீரமாக எழுந்தருளி காட்சி தருகின்றார்.
   திருச்சுற்றில் விநாயகர், முருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. தெற்கு நோக்கி அம்பாள் வேதநாயகி, அங்குசம் - பாசம் தாங்கி கருணை மழை பொழிகிறாள். அற்புத வடிவம். கருவறைக்கு எதிரில் நந்திபெருமான் கம்பீரமாகக் காட்சி தருகிறார். வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது. நவக்கிரகங்கள் தங்கள் தேவிமார்களுடன் காட்சி தருவது சிறப்பானது. இக்கோயிலில் "சேக்காடு சித்தர்' என்கின்ற சித்தர் பெருமான்’ வழிபட்டதாகக் கூறுகின்றனர். அவருக்கு ஆலயத்தில் தனி சந்நிதி உண்டு. எனவே இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு இறை அருளோடு, சித்தர் அருளும் சேர்ந்து கிடைக்கும்.
   இவ்வூரில் "சேராத்தம்மன்" எனப்படும் கிராம தேவதையின் கோயில் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. அக்கோயிலுக்கு முன்பாக நடப்பட்ட கல்லில் காணப்படும் கல்வெட்டில் இவ்வூர் "சேர்க்காடு’ எனவும், திரு அகத்தீசுவரமுடைய நாயனார் கோயிலும் குறிப்பிடப்படுகின்றது. தெலுங்கு சோழர் விஜயகண்ட கோபாலன் (13 -ஆம் நூற்றாண்டு) காலத்து கல்வெட்டு இது. கல்வெட்டில் குறிக்கப்படும் கோயில், மேலே சொன்ன சிவன் கோயிலாக இருக்கவேண்டும்.
   தொன்மைப் புகழ் வாய்ந்த இந்த சிவனாலயத்தில் பிரதி பௌர்ணமி தோறும் இரவு சேக்காடு சித்தர் வழிபாடும் மற்றும் பட்ச பிரதோஷ வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. எதிர்வரும் செப்டம்பர் 15 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் "அப்பர் கயிலை வாத்திய இறை இசை முழங்கும் சிவனடியார் திருக்கூட்டம்’ சார்பில் அடியார் பெருமக்கள் கலந்து கொண்டு சோமநாதீச்சுர பெருமானுக்கு பத்து லட்சம் உருத்திராக்கம் அணிவித்து கயிலை வாத்திய இறை இசையோடு அபிஷேக, ஆராதனையுடன் பெரும் பேரொளி வழிபாடு நடத்துகின்றனர்.
   காண்பதற்கு மிகவும் அரியவாய்ப்பு! மேலும் "ஓம் நமசிவாய’ என்ற படிவத்தில் 324 முறை "ஓம் நமசிவாய என்று எழுதித்தரும் அன்பர்களுக்கு சிவபெருமான் மீது அபிஷேகம் செய்த கண்டமணி வழங்கப்படும் என்றும், அபிஷேகத்திற்கு விபூதி, பன்னீர் கொண்டு வரலாம் என்றும் ஆலயத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.
   சேக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது இவ்வூர். ரயில் மார்க்கம்: இந்து கல்லூரி, பேருந்து எண்கள்: ஆ70, 27ஏ, 565, 71உ. இறங்குமிடம்: சேக்காடு.


   தொடர்புக்கு: 98400 43569 /
   98419 35012.
   - கி.ஸ்ரீதரன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai