சுடச்சுட

  
  sudha

  புவிசார் குறியீட்டு எண்ணைப் பெற்றதால், நவீனகால இந்திய வரலாற்றில் பத்தமடைப் பட்டுப் பாய்க்குத் தனியிடம் உண்டு. இதேபோன்று, பத்தமடை குப்புசுவாமியைப் பெற்றுக் கொடுத்ததால், பாரதத்தின் ஆன்மீக, அறிவியல் வரலாற்றிலும் இந்த ஊருக்குத் தனியிடம் உண்டு. 
  ஆனந்தம் காட்டிய ஆன்ம குரு: அதுவொரு வியாழக்கிழமை. அன்றைய அதிகாலை வேளையில், பத்தமடை வெங்கு ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும், அவர்களின் மூன்றாவது குழந்தை பிறந்தான். பரணி நட்சத்திரத்தின் ஏறுமுகத்தில் பிறந்த பிள்ளை. "பரணி பிள்ளை தரணி ஆளும்’ என்பது பண்டையகால சொலவடை. இந்தப் பிள்ளையும் தரணி ஆண்டார்; தரணி என்ன, தரணியை ஆள்வோரையும் ஆண்டார். 
  1887 -ஆம் ஆண்டு செப்டம்பர் 8 -ஆம் தேதி, பொருநைக் கரையின் பத்தமடையில் பிறந்த குப்புசுவாமி, தஞ்சாவூர் மருத்துவப் பள்ளியில் பயின்று, மலாயாவில் மருத்துவப் பணியாற்றிப் பின்னர் ஆன்மீகத் தேடலில் நாடு திரும்பினார். ரிஷி கேசத்தில் சுவாமி விச்வானந்த சரஸ்வதியைச் சந்தித்ததும், சீடராக ஏற்கப்பட்டு சந்நியாச தீட்சை வழங்கப்பெற்று, சுவாமி சிவானந்தர் ஆனதும், பலவகையான ஆன்மீக-சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டதும், தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தை நிறுவியதும் வரலாற்றின் பொன்னேடுகள். 
  பண்டித நேருவின் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையில் பணிபுரிந்து வந்தார் இளைஞர் ஒருவர். அவ்வளவாகக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். தன்னுடைய 20 -ஆவது வயதில், திருவண்ணாமலை ரமண மஹரிஷியை ஒருமுறை சந்தித்திருந்தாலும், ரமணர் தன்னிடம் தோற்றுவித்த இனம்புரியாத உணர்வை, மாயவித்தை என்றும் ஆழ் உறக்கம் என்றும் புறந்தள்ளியவர். பத்திரிகைப் பணியின் பகுதியாக, சாமியார்கள் என்னதான் புளுகுகிறார்கள் பார்ப்போமே என்னும் எண்ணத்துடன், 1947 -ஆம் ஆண்டு ரிஷிகேசம் சென்றார். 
  தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தில் கிட்டிய அனுபவங்களும் சுவாமி சிவானந்தர் காட்டிய பரிவும் சேர்ந்து ஏதோ செய்ய, தன்னுடைய 31-ஆவது வயதில், ஹிந்து ஆன்மீக, தர்ம நூல்களுக்குள் தீவிரமாக மூழ்கினார். 1949 -ஆம் ஆண்டு, பிப்ரவரி 25 -ஆம் தேதி, மஹாசிவராத்திரித் திருநாளில், இவருக்கு சந்நியாச தீட்சை கொடுத்த சுவாமி சிவானந்தர், சின்மயானந்தர் என்று தீட்சா நாமம் சூட்டியபோது, பத்தமடை ஆலமரம், மற்றுமொரு பிரபஞ்ச ஆலமரத்தை நாட்டிய அற்புதம் நிகழ்ந்தது. 
  தூய வெள்ளாடையும் மரப் பாதுகைகளும் அணிந்து கூர்மையான கருவிழிகளும் குழந்தைப் புன்னகையும் கொண்ட சிவானந்தர் தன்னை எவ்வாறு ஆற்றுப்படுத்தினார் என்பதையும் தனக்கு எவ்வாறு குருவானார் என்பதையும் உணர்வுபொங்க விவரிப்பார் மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள். 
  பத்தமடையை விட்டு வெளியே வந்து, பொருநையாளின் கையைப் பற்றிக்கொண்டு, அக்கரைக்குச் செல்வோம். அங்கேதான், கோடகநல்லூர்!
  ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி. . . 
  அதென்ன கோடகநல்லூர்? கார்க்கோடக நல்லூர் என்பதே இவ்வூரின் பழைய பெயர். அதாவது, கார்க்கோடகன் என்னும் விஷப்பாம்பு வழிபட்டு உய்ந்த ஊர். கார்க்கோடகநல்லூர் என்னும் பெயரே காலப்போக்கில் கோடகநல்லூர் என்றும், கோடகனூர் என்றும் மருவிவிட்டது. 
  பாம்பு தீண்டி இறந்து போகவேண்டும் என்பது பரீக்ஷித் மஹாராஜாவுக்கு (இவர்தான், அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு, போரில் அபிமன்யு இறந்த பின்னர் பிறந்த மகன்; பஞ்ச பாண்டவர்களின் ஏக வாரிசு) விதி என்றும், தன்னுடைய மரணம் இன்னும் ஒருவார காலத்தில் சம்பவிக்கும் என்பதை அறிந்த ராஜா, சூதபுராணிகர்களைக் கொண்டு பாகவத புராணம் கூறக் கேட்டு நற்கதி அடைந்தார் என்றும் சில குறிப்புகள் நம்முடைய புராணங்களில் காணக்கிடைக்கின்றன. 
  இந்தத் தகவல்களின் பிறிதொரு பக்கம், கோடகநல்லூர் கதையில் பொதிந்திருக்கிறது. நெல்லைச் சீமையின் பாட்டிமார்கள், "விதி வலிது' என்பதை வலியுறுத்த இந்தக் கதையைத்தான் அடிக்கடி உரைப்பார்கள். 
  அந்தக் கதையையும் தெரிந்து கொள்ளலாமா?
  - தொடரும்...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai