சுடச்சுட

  
  vm2

  ஏதிலார் குற்றங்களை ஏதமாக எண்ணாது விளைந்த பாதகத்தின் வேதனையால் சோதனையை வென்று சாதனை படைத்து நோவினை செய்தாரை நோகடிக்காது சோகத்தையும் யோகமாக்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தி பகைவரையும் பண்போடு மன்னிப்பது மனிதநேயம். அம்மனித நேயமே புனிதன் அல்லாஹ்வின் மகத்தான மன்னிப்பைப் பெற்று தரும். திருநபி (ஸல்) அவர்கள் தீங்குக்குத் தீங்கைக் கொண்டு பழிவாங்க மாட்டார்கள். அந்த தீமையை பொருட்படுத்தாது மன்னித்து விடுவார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பது திர்மிதீ நூலில் உள்ளது.
   இறைவன் மன்னிப்பதில் மிக தாராளமானவன் என்று 53-32 ஆவது வசனம் கூறுகிறது. அல்லாஹ்விற்கு அஞ்சி பெரும் பாவங்களைச் செய்யாது தவிர்த்து விடுவோர் அறியாமல் செய்த சிறு பாவங்களை மன்னிப்பதில் தாராளமானவன் அல்லாஹ் என்று அறிவிக்கிறது இந்த வசனம்.
   பகலில் தவறு செய்தவர் இரவில் மன்னிப்பு கேட்பதற்காகவும்; இரவில் தவறு செய்தவர் பகலில் மன்னிப்பு கேட்பதற்காகவும் கைகளை விரித்தே வைத்திருக்கிறான் வள்ளல் அல்லாஹ். நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறீர்கள். நான் அனைத்து பாவங்களையும் மறைத்து கொண்டிருக்கிறேன். ஆகவே, என்னிடம் பாவமன்னிப்பு கோருங்கள். நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன் என்கிறான் என்றும் அடியார்களுக்கு அருள்புரியும் அல்லாஹ்.
   அல்லாஹ்தான் அடியார்களின் பாவமன்னிப்பு கோரலை ஏற்று குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும் நீங்கள் செய்ததை அவன் நன்கறிவான் என்று கூறுகிறது 42- 25 ஆவது வசனம். எவர் மன்னிப்பைக்கோரி நம்பிக்கையோடு நற்செயல்களைச் செய்தாரோ அத்தகையோரின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதோடு அவர் செய்த தீமைகளை நன்மைகளாக மாற்றி விடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் மாபெரும் கிருபை உடையவனாகவும் இருக்கிறான்.
   உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சொர்க்கத்திற்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள் பூமியின் விசாலத்தைப் போன்றது. இறையச்சம் உடையவர்களுக்காகவே தயார்ப்படுத்தப் பட்டுள்ளது என்று 3-133 ஆவது வசனம் கூற, 57- 21 ஆவது வசனம் ஆகவே நீங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும் சொர்க்கத்தை நோக்கியும் முந்த செல்லுங்கள். அச்சொர்க்கத்தின் விசாலம் வானம் பூமியின் பரப்பைப் போல் உள்ளது. அது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காகவே தயார்ப்படுத்தப் பட்டது. இது அல்லாஹ்வின் அருளாகும். இதனை, அல்லாஹ் விரும்பியவர்களுக்கே கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான் அருளாளன் என்று கூறுகிறது.
   மேலும் மன்னிப்பு கோர ஊக்கப்படுத்துகிறது 39 -53 ஆவது வசனம். ""என் அடியார்களே எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்து கொண்ட போதிலும் அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். நிச்சயமாக அவன் மன்னிப்பவனும் கிருபை உடையவனாகவும் இருக்கிறான்''.
   இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைவழியில் முறையாக வாழ அறிவுறுத்திய பொழுது நெறிகெட்டு வழிப்பறி, கொடூர கொலை, கொடிய விபச்சாரம் முதலிய பெரும் பாவங்களைச் செய்த பெரும் பாவிகளான அரபிகள் திருந்தி இறைவனுக்குப் பொருந்த வாழ்ந்தால் பழைய பாவங்கள் மன்னிக்கப்படுமா? என்ற ஐயத்தை எழுப்பிய பொழுது அவர்களின் ஐயம் போக்கவே இந்த வசனம் இறக்கப்பட்டதாக அல்வலீத் என்ற நூலில் குர்ஆனின் விரிவுரையாளர்கள் அளித்த விளக்கம் குறிப்பிடப்படுகிறது. இந்த வசனம் வழங்கப்பட்ட பின்னரே, உஹது போரில் உத்தம நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஜா (ரலி) அவர்களைக் கொடூரமாக கொலை செய்த வஹ்ஸி மனம் திருந்தி மாநபி (ஸல்) அவர்களின் மார்க்கத்தை ஏற்றான்.
   ஆதம் அல்லாஹ்விடமிருந்து சில வாக்கியங்களைப் பெற்றார்கள். எனவே, அவருக்கு மன்னிப்பு அளித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன் என்று 2-37 ஆவது வசனம் கூறுகிறது. சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பூமிக்கு வந்த ஆதம் நபி நீண்ட காலம் பாவம் புரிந்தது (தின்ன தடுக்கப்பட்ட பழத்தைத் தின்றது) குறித்து வருந்தி அழுது கொண்டிருந்தார்கள். "" அல்லாஹ்வே! எங்கள் ஆன்மாக்களுக்கு நாங்கள் அநீதம் புரிந்தோம். நீ எங்களுக்குக் கிருபையும் மன்னிப்பும் வழங்காவிடில் நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்'' என்ற இறைவேட்டலை இதயம் உருக இறைவனிடம் சமர்ப்பித்தார்கள். குற்றம் மன்னிக்கப்பட்டு தூய்மை பெற்றார்கள்.
   மன்னிப்பு வேண்ட ஆதம் நபி கஃபாவின் முன்நின்று இரு ரக் அத்கள் தொழுது இதயத்தில் உதயமான மேற்குறித்த இறைவேட்டலை நிறைவாய் முறையிட்டார்கள். உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு உங்களின் பாவம் மன்னிக்கப்பட்டது. உங்களின் சந்ததிகளும் இவ்வாறு இறைஞ்சினால் அவர்களின் முறையீடும் நிறைவேறும் என்று அல்லாஹ் அங்கீகரித்ததைச் சங்கை மிகு நபி (ஸல்) அவர்கள் சாற்றியதை அறிவிக்கிறார் அன்னை ஆயிஷா (ரலி) நூல்- தப்ரானீ.
   ஆதம் நபி வழித்தோன்றல்களான நாமும் அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகள், தவறுகள், குற்றங்கள், பாவங்கள், மன்னிக்கப்பட மாநபி (ஸல்) அவர்கள் அறிவித்தவாறு மனமொன்றி உள்ளம் உருகி வல்ல அல்லாஹ்விடம் முறையிட்டு கறை களைந்து குறை நீங்கி நிறைவடையும் வண்ணம் மன்னிக்கப்படுவோம்.
   - மு.அ.அபுல் அமீன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai