Enable Javscript for better performance
மறந்ததை மஹாளயத்தில் செய்!- Dinamani

சுடச்சுட

  

  மறந்ததை மஹாளயத்தில் செய்!

  By DIN  |   Published on : 13th September 2019 01:30 PM  |   அ+அ அ-   |    |  

  RAMANATHASWAMY-RAMESWARAM

  ஓர் இல்லறவாசியானவன் தன் பித்ருக்களுக்கு ஒரு வருடத்தில் 15 நாள்களுக்கு சிரார்த்தம் (சிரத்தையோடு நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள்) செய்ய வேண்டுமென மகரிஷி யாக்ஞவல்கியர் வழி வகுத்து தந்துள்ளார்; இதை மனு மற்றும் பிரம்மாண்ட புராணம் உறுதி செய்துள்ளது.
   தர்ம சாஸ்திரத்தில் சிரார்த்த ப்ரகரணம் என்று ஒன்று உள்ளது. அதில் சிரார்த்தத்தைப் பற்றி கூறும்போது "தம் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்வதைக் காட்டிலும் மனிதனுக்கு நன்மையைக் கொடுக்கக் கூடியது வேறு ஒன்றுமில்லை. ஆகையால் தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் நன்மை தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்று விரும்புபவர்கள்; சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்யவேண்டும்"என்கிறது. இதுபோல் எவனொருவன் செய்கிறானோ கண்டிப்பாக அவன் பாக்கியவான்; அவனுக்கு நற்பயன் நிச்சயம் உண்டு.
   கஜச்சாயை யோகம் என்பது புரட்டாசி மாதத்து கிருஷ்ண பட்சத்தில் வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதுவே பித்ரு பட்சம்’, "மஹாளயம்' என அழைக்கப்படுகிறது. அதற்கு மனுஸ்ம்ருதி, தைத்ரிய ப்ராம்மணம் ஆகியவற்றில் புரட்டாசி மாதத்து கிருஷ்ண பட்சத்தில் வருகிற மக நட்சத்திரத்தில் பித்ருக்களை அழைக்கும் விதி கூறப்பட்டுள்ளது. இது கஜச்சாயையில் கூடும் மக நட்சத்திரத்தையே குறிக்கிறது. இந்த நாள்களில் சிரார்த்தம் செய்தால் பல முறை சிரார்த்தம் செய்த பலன் கிடைக்கும் என கூறுவதால் அவ்வளவு விசேஷம் இந்த மஹாளயத்திற்கு.
   மஹாவிஷ்ணுவிற்கு உகந்த மாதமான புரட்டாசியில் மஹாளய அமாவாசை வருவதால் (மால்+அயம் என்றால் திருமாலுக்கு உரித்தான அயனகாலம் என்று பொருள்); அன்று தர்ப்பணமாவது கட்டாயம் செய்யவேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால் நாம் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அறிந்தோ, அறியாமலோ அல்லது தெரிந்தோ, தெரியாமலோ செய்ய மறந்து விடுகிறோம். இதைத்தான் நம் சனாதன தர்மம் "மறந்ததை மஹாளயத்தில் செய்" என்று கூறுகிறது.
   மஹாளயத்தில் நெருங்கிய அனைத்து முன்னோர்களுக்கும் பிண்ட தானம் செய்யப்படுவதால், மஹாளய சிரார்த்தம் சால சிறந்தது. இதை நாம் செய்வதால் நம் குடும்பத்தில் நம்மைச்சுற்றி காரணமே தெரியாமல் நடக்கும்; நம் கண்களுக்குப் புலப்படாத பல இன்னல்கள்/தடங்கல்கள் நீங்கி வளர்ச்சிக்கு வழி செய்து, நற்பேற்றினை அடையச் செய்யும். இதனையே திருவள்ளுவர் "தென்புலத்தார் வழிபாடு" என சிறப்பித்து கூறியுள்ளார்.
   இறந்தபின் நம் முன்னோர்களின் ஆத்மாவானது ஒரு குறிப்பிட்ட காலம் வரை பூமியில் சுற்றிவிட்டு; பின் விண்ணுலகம் செல்லுமாம். பித்ருக்கள் உலகம் என்று ஒன்று உள்ளது; அது சூரிய, சந்திர மண்டலத்திற்கு அப்பால் சொர்க்க லோகம் என்ற பெயரில் உள்ளது. இங்கு அவர்கள் ஆதி"என்பவரது கட்டுப்பாட்டில் வசிக்கின்றார்கள். அங்கு அனைத்து வசதிகள் இருந்தாலும்; தனக்கான உணவினை தாங்களே அவர்களால் எடுத்துக் கொள்ளமுடியாது.
   அதனால் இந்த உலகத்தின் அதிபதியான எமதர்மராஜனிடம்; தங்கள் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் தாங்கள் சேர்த்து வைத்த சொத்துக்களுக்கு கைமாறாக அவர்களைக்காண செல்ல வேண்டுமென வேண்டினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு 15 நாள்கள் பூலோக வாசம் அளித்து, தங்கள் பிள்ளைகளிடமிருந்து தாங்கள் வேண்டியதை பெற்றுக்கொள்ளும்படி பித்ருக்களை பூமிக்கு அனுப்பி வைக்கிறார் தர்மராஜன். அந்த காலமே மஹாளயபட்சம் ஆகும்.
   இதனை ஏற்று நம் முன்னோர்கள் அவரவர் குழந்தைகளையும், உறவினர்களையும் பார்ப்பதற்காக ஆசையுடன் நம் வீட்டு வாசலில் வந்து நிற்பார்களாம். அப்போது நாமும் மகிழ்ச்சியோடு அவர்களை மந்திரம் மூலம் வரவேற்று அவர்களை திருப்தி செய்ய வேண்டுமென்கிறது நம் புராணம். நாம் செய்யும் தர்ப்பணத்தில் விடுகிற எள்ளும் தண்ணீரும்; எப்படி நாம் அனுப்பும் மணி ஆர்டர் வேறு ஊரிலுள்ள முகவரிக்கு சரியாக போய் சேருமோ அதுபோல்; ஸ்வேதாதேவி" என்பவள் அதை உணவாக மாற்றி நம் மூதாதையருக்கு கொடுப்பதற்கு பாலமாக இருக்கிறாள்.
   சிலர் பிதுர்சாபம் உள்ளது எனக்கூறுகின்றனர்; அது தவறு. பிதுர்கள் தன் குழந்தைகளுக்கு சாபம் கொடுக்கமாட்டார்கள்; மாறாக சற்று வருத்தப்படுவார்கள். இந்த குழந்தைகள் கையில் தானே நம் பசியை போக்கும் சாவி உள்ளது; நாம் வெறும் எள்ளும் தண்ணீரும் தானே இவன் கை வழியாக கேட்கிறோம்? அதனை தருவதற்குகூட இவர்கள் தயங்குகிறார்களே"என வருத்தப்படுகிறார்களாம். அப்படி அவர்களை வருத்தப்பட வைக்கக்கூடாது. அதுவே நமக்கு நற்பேறு கிட்டாமல் செய்துவிடும்.
   புனிதமான நீர்நிலைகளில் இதனைத் தருவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். கயா, காசி, ஹரித்வார், ப்ரயாக்ராஜ், உஜ்ஜைனி, நாசிக் (பஞ்சவடி), புஷ்கர், குருஷேத்ரா, ராமேஸ்வரம், திருமறைக்காடு என்றழைக்கப்படும் வேதாரண்யம், தென்கைலாயம் எனப்போற்றப்படும் திருவையாறு போன்ற புண்ணிய நதிகள் ஓடும் தலங்கள்; மற்றும் மகாபுண்ணிய தலமான கும்பகோணத்திலுள்ள மகாமகக் குளக்கரை போன்ற இந்தத்தலங்களில் முக்கியமாக செய்யலாம். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் "அண்டமி' என்ற கிராமத்தில் ஒரு சிவன் கோயில் உள்ளது. இங்கு பித்ருக்களின் ஆசியை பெறுவதற்காகவே அங்குள்ள "சிவகங்கை' தீர்த்தப்படிதுறையில் பித்ரு ஹோமமோ, பித்ரு தர்ப்பணமோ செய்வது சாலச்சிறந்தது. ஆடல்கலை அறுபத்து நான்கினை; அறுபத்திநான்கு திசைகளாக நிர்ணயித்த சிவனார், தன் அம்சமான, வாஸ்து பகவானாக இங்கு அவதரித்ததாக இத்தல வரலாறு கூறுகிறது.
   இத்தனை பெருமை மிக்க மஹாளயபட்சம், இந்த வருடம் வருகிற செப்டம்பர்- 14, சனிக்கிழமை, பெளர்ணமியில் ஆரம்பித்து செப்டம்பர் - 28 சனிக்கிழமையன்று மஹாளய அமாவாசையுடன் முடிவடைகிறது. இந்த நாள்களில் நம் முன்னோர்களுக்கு "பிதுர் யக்ஞம்' என்று அழைக்கப்படும் நாம் செய்ய வேண்டிய கடமையை ஏதோவொரு நீர்நிலையில் செய்வோம்; மனத்துயர் நீங்கி நிம்மதி பெறுவோம்.
   - எஸ். எஸ். சீதாராமன்
   
   

  kattana sevai