சுடச்சுட

  
  vm4

  கைகேயி வரத்தால் தம்பி துணையாக வர சீதையுடன் ராமன் வனவாசம் போனான். அனுமன் துணையோடு ராமன், ராவணன் கவர்ந்து சென்ற சீதையை மீட்டு, விபீஷணனை இலங்கை மன்னனாக பட்டாபிஷேகம் சூட்டி அயோத்திக்கு திரும்பிக்கொண்டிருந்த போது வழியில் ஒவ்வொரு தலத்திலும் நாளும் சிவபூஜை செய்யும் பழக்கம் தொடர்ந்தது.
   தசரதனுக்கு எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் செய்ய வேண்டிய அவசிய நாள் வந்தது. கயையில் தரக்கூடிய திதியை அதே தகுதிகளுடன் கூடிய இங்கேயே தரவேண்டிய சந்தர்ப்பம் எழுந்தது. கயாவைப்போல் ஆறும் அட்சய வடமும் இருக்கும் இடத்தைத் தேர்ந்து எடுத்தான். முக்கியமான மூன்றாவது இடமான விஷ்ணு பாதத்தில் பிண்டங்களை வணங்கி சேர்ப்பதற்கு இங்கு விஷ்ணு பாதம் இல்லையே என சஞ்சலப்பட்டான்.
   இலக்குவனை - வேண்டிய பொருட்களை சேகரம் செய்ய அனுப்பிவிட்டு ராமன் அருகில் சிவ பூஜைக்கு உரிய இடத்தை தேடிப் போனார். ஊரின் உட்புறமாய் சற்றுத் தொலைவில் தென்கிழக்கில் மேற்கு நோக்கி கம்பீரமாக காட்சி கொடுக்கும் ஆகிருதிமிக்க லிங்க உருவைக் கண்டு மகிழ்ந்தார். அபிஷேகம் செய்து சிவபூஜை செய்தபின் பிண்ட தானம் செய்ய விரும்பினார். அபிஷேகம் செய்ய லிங்கத்திருமேனிக்குத் தெற்குப்புறம் தன் வில்லின் பாணம் எனப்படும் அம்பு எய்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி அபிஷேகமும் தூமலர் தூவி அர்ச்சனையும் செய்தார் .
   மானிட அவதாரத்திருந்த ஸ்ரீராமபிரான் கயையில் ஸ்ரீ விஷ்ணுபாதத்தில் பிண்டம் சமர்ப்பிப்பது போல் இங்கும் பிண்டம் சமர்ப்பிக்க அருள்புரிய வழிபட்டு சிவபூசை முடித்து ஆற்றங்கரைக்கு சென்றார். அந்த தீர்த்தம் பாண தீர்த்தம் என பின்னாளில் அழைக்கப்பட்டது.
   ஆற்றங்கரையில் இலக்குவன் கொண்டுவந்த பொருட்களைக் கொண்டு சீதை பிண்டப் பிரார்த்தனை உபகாரங்களைச் செய்தாள். அருகில் உள்ள பல்குனி நதியை ஒத்த ஆற்றங்கரைக்குச் சென்று அரசமரத்தடியில் அமர்ந்து இலக்குவன் சற்றுத் தள்ளி நிற்க சீதை உடன் இருக்க பித்ரு வழிபாட்டை ராமன் செய்யத் துவங்கினான். இறுதியில் பிண்டங்களை விஷ்ணு பாதத்தில் சமர்ப்பிக்க கையில் எடுத்தபோது ஒளிக்கீற்றாய் விஸ்வரூபியாய் மேல் கைகளில் தாமரை மற்றும் சக்கரம் தாங்கி கீழ்க்கையில் பத்மம் மற்றும் கதை தாங்கி நின்ற கோலத்தில் மகாவிஷ்ணு கயையில் காட்சிதந்த கதாதரனாகத் தோன்றி முன்னோருக்கு விஷ்ணு பாதத்தில் சமர்ப்பிக்க வைக்கப்பட்டிருந்தவற்றைப் பெற்றுக் கொண்டார். ராமனின் ஆசையும் பூர்த்தியாகியது.
   ராமன் சிவபூஜை செய்து பிதுர்களுக்கு விஷ்ணு பாதத்தில் பிண்ட தானம் செய்த இடம் இன்று கோவிந்தபுரம் எனவும் சிவபூஜை செய்த இடம் பாணபுரம் என்வும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு கோயில்கள் ஒன்றுக்கு ஒன்று வரலாற்றுத் தொடர்பு கொண்டவை. மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கோவிந்தபுரம் அக்ரகாரம் நிறுத்தத்தில் இறங்கினால் இடப்புறம் அரை கி.மீ. தொலைவில் பாணபுரீஸ்வரர் கோயிலும் வலப்புறம் அரை கி.மீ. சென்றால் கதாதர நாராயணன் கோயிலையும் அடையலாம்.
   வீரசோழன் ஆறு ஓடும் கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிஷ்ணுபாதம் மற்றும் கதாதரன் சந்நிதியும் அமைந்துள்ளது. இங்கு உள்ள விஷ்ணு பாதம் ஸ்ரீராமனால் பூஜிக்கப்பட்டது. சந்நிதியில் எழுந்தருளியுள்ள மஹாவிஷ்ணுவான கதாதரன் 4 கரத்துடன் பத்திர பீடத்தில் பக்தர்களின் முன்னோர்களுக்கான பிண்டங்களை ஏற்று முன்னோர்களுக்கு அருள்கிறார். மேலும் கயாவைப்போல காசிவிஸ்வநாதர் கோயில் மற்றும் அன்னபூரணி சந்நிதி கதாதரர் கோயிலுக்கு முன்பாக அமைந்துள்ளன.
   கால்நடையாக தேச சஞ்சாரம் செய்து பகவானைத் தேடி வந்தமகான் ஸ்ரீ போதேந்திர சுவாமிகள் ஸ்ரீராமபிரான் பித்ரு காரியம் செய்து வழிபட்ட ஸ்ரீ கோவிந்தபுரத்தில் தன் இறுதிக்காலம் வரை தங்கி அதிஷ்டானத்தில் (ஞான சமாதி) எழுந்தருளியுள்ளார்.
   முன்னோர்களின் திதி தப்பியோர், திவசம் கொடுக்க முடியாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி உள்ளதாக கூறப்படும் ஜோதிடக் குறிப்பு உள்ளவர்கள், நாடி ஜோதிடத்தில் வரும் குறிப்புகளின்படி இங்குள்ள கதாதரன் சந்நிதியில் 16 தில தீபங்கள் ஏற்றி, விஷ்ணு பாதத்திற்கு அர்ச்சனை செய்து ஸ்ரீ ராம மந்திரம் சொல்லி வழிபாடு செய்வது பழக்கத்தில் உள்ளது.
   அமாவாசை, பெளர்ணமி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அவரவர் தாய் தந்தையரின் திதிகள் ஆகிய நாள்களில் திதி தராதவர்கள் அல்லது தர முடியாதவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். வீரசோழனாற்றங் கரையில் தர்ப்பணம் செய்வதும் உண்டு.
   புரட்டாசி அமாவாசைக்கு முதல் 15 நாள்கள் அதாவது பாதி மாதம் நமது முன்னோர்கள் நம்முடன் பூமியில் வந்து வாழுகின்ற காலம் மகாளயபட்சம் எனப்படுகிறது. இந்நாள்களில் காலஞ்சென்ற முன்னோர்கள் ஆவி ரூபத்தில் கோயில்களின் தீர்த்தங்களில் நீராடி தங்களுடைய சக்திகளைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் சந்ததியினர் வாழிடங்களுக்குச் சென்று தங்களுக்கு அவர்கள் அளிக்கும் உணவினை ஏற்கிறார்கள் எனப்படுகிறது.
   இவ்வாண்டு மஹாளயபட்சம் செப்டம்பர் 14 -ஆம் தேதி, சனிக்கிழமை துவங்கி }செப்டம்பர் 27 -ஆம் தேதி வரை உள்ளது. 28 -ஆம் தேதி மஹாளய அமாவாசை ஆகும்.
   தன் தந்தைக்கு செய்ய வேண்டிய பிதுர்கடனை செய்த இடத்தையும் வரலாற்று நாயகன் ஸ்ரீராமபிரான் குறையைப் போக்க கயையில் இருந்து வந்த கதாதரனையும் ஸ்ரீவிஷ்ணு பாதத்தையும், தட்சிண கயா"ஸ்ரீராம கயா என வட நாட்டவர் அழைக்கும் கோவிந்தபுரத்தில் சென்று தரிசிக்கலாம்.
   தொடர்புக்கு: 94449 19354/
   0435 - 2461212.
   - இரா.இரகுநாதன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai