பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் 

பகவானிடம் ஆழ்ந்த அன்பு உண்டாகாமல் பிரேமபக்தி ஏற்படாது. மேலும், "பகவான் என்னுடையவர்' என்ற ஞானமும் வேண்டும். இறைவனே நம்மை நடத்துபவர்.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் 

* பகவானிடம் ஆழ்ந்த அன்பு உண்டாகாமல் பிரேமபக்தி ஏற்படாது. மேலும், "பகவான் என்னுடையவர்' என்ற ஞானமும் வேண்டும். இறைவனே நம்மை நடத்துபவர். அவர் விருப்பப்படியே அனைத்தும் நடைபெறுகின்றன. 
- ஸ்ரீ ராமகிருஷ்ணர்
* தாமரைக்கு நிலவு யமனாக அமைகிறது. அதுபோல் மனிதனின் ஆயுள் என்ற தாமரைக்குக் காலம் யமனாக அமைந்திருக்கிறது. 
- ஸ்ரீ ராமபிரான்
* தீயில் புடம் போடப்பட்ட பொன் அழுக்கு நீங்கி இயற்கையான ஒளிவடிவத்தை அடைகிறது. அதுபோல், மனிதன் என்னிடம் பக்தியோகத்தால் கர்ம வாசனையைவிட்டு என் சொரூபத்தை அடைகிறான். 
- ஸ்ரீ கிருஷ்ணன்(உத்தவ கீதை)
* உலகியல் போகத்தால் அல்ல, அறிவினால் அல்ல, கர்மத்தால் அல்ல, கல்வியால் அல்ல; "பிரம்மமும் தானும் ஒன்று' என்ற ஆன்மிக விழிப்பால்தான் முக்தி சித்திக்கிறது.
- ஆதிசங்கரர்
* நல்லதோ கெட்டதோ எந்தக் காரியம் செய்யத் தொடங்கினாலும், முதலில் அதன் விளைவைப்பற்றிப் புத்திசாலியால் முயற்சியுடன் ஆராயப்பட வேண்டும். மிகுந்த அவசரத்துடன் செய்யப்படும் காரியங்களின் விளைவு, சாகும் வரையில் இதயத்தைச் சுடும் அம்பு போலாகும்.
- பர்துருஹரியின் நீதி சதகம்
* நல்ல கருத்துகளையே கேள், நல்ல கருத்துகளையே சொல், உன்னிடம் இருக்கும் குற்றங்களை நீக்கிக்கொள், உனது புண்ணியத்தில் ஒரு பகுதியை மற்றவர்களுக்குக் கொடு, பிறர் தரும் புண்ணியங்களை ஏற்றுக்கொள். 
- புத்தர்
* அழைக்காமல் ஓர் இடத்திற்குச் செல்வதும், கேட்காமல் பேசுவதும் தவறாகும். 
- மகாபாரதம்
* எப்பொழுதும் பெரியோர்களை வணங்கும் குணம் படைத்தவனுக்கு ஆயுள், வித்யை, புகழ், பலம் ஆகிய நான்கும் விருத்தியடையும்.
- மனுஸ்மிருதி 
* நீங்கள் ஞானத்துடன் இணைந்த பக்தியால் இறைவனை வழிபடுங்கள்; பக்தியுடன் எப்போதும் விவேகத்தையும் இணைத்துக்கொள்ளுங்கள். அப்போது தடையில்லாத ஆன்மிகப் பாதையில் நீங்கள் பயணம் செய்ய முடியும்.
- சுவாமி விவேகானந்தர்
* தனி இடத்தில் அமர்ந்து, தெளிவாக ஆராய்ந்து, "என்னுடையது' என்பவை எல்லாம் தள்ளியபிறகு, எதைத் தள்ள முடியவில்லையோ அதுவே ஆத்மாவாகும். 
- திரிபுர ரகஸ்யம்
* காற்று மேகத்தைக் கலைத்து, அடித்துச் செல்கிறது. அது போன்று இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்வது, மனதைச் சூழ்ந்திருக்கும் உலகப்பற்றாகிய மேகத்தை ஓட்டிவிடுகிறது. 
- ஸ்ரீ சாரதாதேவியார்
* விடியற்காலையில் (பிரம்ம முகூர்த்தத்தில்) எழுந்து இறைவனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அறம், நியாயமான ஆசைகளைப் பூர்த்தி செய்வது, தன் வாழ்க்கைக்காகப் பொருள் சேர்ப்பது போன்ற செயல்களை அதற்குரிய நேரத்தில் செய்ய வேண்டும். 
- யாக்ஞவல்க்ய ஸ்மிருதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com