பொருநை போற்றுதும்! 59

ஆதியில், இந்தப் பகுதியில், மாமுனிவர் ஒருவர் தவம் செய்துகொண்டிருந்தார். தவம் செய்துகொண்டிருந்தவருக்கு உதவியாக யாகம் செய்தார்,
பொருநை போற்றுதும்! 59

ஆதியில், இந்தப் பகுதியில், மாமுனிவர் ஒருவர் தவம் செய்துகொண்டிருந்தார். தவம் செய்துகொண்டிருந்தவருக்கு உதவியாக யாகம் செய்தார், முனிவரின் மகன். அடர்ந்த வனம் என்பதால், வனத்தில் வேட்டையாட வந்தார் பரீக்ஷித் மஹாராஜாவின் புதல்வர். வந்தவருக்கு வழி தொலைந்து போக, தட்டுத் தடுமாறி, முனிவர் தவம் செய்த இடத்தை அடைந்துவிட்டார். முனிவரின் மகனோ, சமித்துக் கட்டுகளைச் சேகரிக்கச் சென்றுவிட்டார்.
 முனிவர் ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கண்ட ராஜகுமாரன், குரல் எழுப்பியும் கைகளைத் தட்டியும் முனிவரின் கவனத்தை ஈர்க்க முயன்றார். ஆழ்தவத்தில் இருந்த முனிவரை எப்படியும் எழுப்பக் கூடவில்லை. காத்துக் காத்து எரிச்சலடைந்த ராஜகுமாரன், சுற்றுமுற்றும் பார்த்து, செத்துக் கிடந்த சிறிய பாம்பு ஒன்றை எடுத்து, முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டார்.
 சமித்துக் கட்டுகளோடு திரும்பிய முனிகுமாரனுக்குச் சினம் கொப்பளித்தது. தன்னுடைய தந்தையின் கழுத்தில் சர்ப்பத்தைப் போட்டவன் எவனோ, அவனுடைய தந்தை ‘சர்ப்பம் தீண்டி இறந்து போகட்டும்' என்று சாபம் இட்டுவிட்டார்.
 இதற்கிடையில் ராஜகுமாரன் எப்படியோ அரண்மனைக்குத் திரும்பிவிட்டான். முனிகுமாரன் இட்ட சாபமும் பரிவாரங்கள் வழியாக அரசரின் செவிகளை அடைந்தது. அரண்மனை ஜோதிடர்கள், அரசரின் ஜாதகத்தை அவசர அவசரமாக ஆய்ந்தனர். இத்தனை நாள் புலப்படாத சர்ப்ப தோஷம், இப்போது புலப்பட்டது. ‘இன்னும் ஏழு நாட்களே அரசரின் ஆயுள்' என்று ஜோதிடர்கள் கணித்தார்கள். அரசரின் ஆயுளை நீட்டுவிக்கவும், பாம்பு அவரைத் தீண்டாமல் பாதுகாக்கவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
 நடுக்கடலில், நிலம் தொடாத நிலையில், கப்பலில் அனைத்து வசதிகளையும் செய்துகொண்டு பரீக்ஷித் மஹாராஜா வாழத் தொடங்கினார். சுற்றிலும் பாதுகாவலர்கள். எந்தப் பக்கத்திலிருந்து மறந்து தப்பிக்கூட எந்தப் பாம்பும் வந்து விடக்கூடாது என்பதற்காகக் கப்பலின் பக்கவாட்டுச் சுவர்களிலெல்லாம் எண்ணெய் பூசி, பாம்பை விரட்டும் வகையில் தூபங்கள் இட்டு, இத்தனை பாதுகாப்புக்கும் அமர்க்களத்துக்கும் இடையில், கடல்வாசத்தைப் போக்கிக்கொள்ள, அருகிலிருந்த பழத்தட்டிலிருந்து எலுமிச்சைப் பழம் ஒன்றை எடுத்து முகர்ந்தாராம் மஹாராஜா.
 சின்னஞ் சிறிய எலுமிச்சை; அதற்குள்... அதற்குள்... கண்ணுக்கே தெரியாத துவாரத்திற்குள்ளிருந்து கன்னங்கரேலென்ற பூநாகம் (சிறியதிலும் சிறியதாக மலர்களுக்கு நடுவில் காணப்படுகிற விஷப் பாம்புக்கு இப்பெயர்) ஒன்று புறப்பட்டது. பாதுகாவலர்களை மீறி... பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி... வாசனாதி திரவியங்களை மீறி... மஹாராஜாவின் மூக்கை நேரடியாகப் பதம் பார்த்தது.
 வரவேண்டிய விதி வந்துதான் தீரும்; எத்தனை கடல், எத்தனை மலை தாண்டி ஓடினாலும் தப்பமுடியாது என்பதை உணர்த்துவதற்காகத் திருநெல்வேலி மங்கையர் கூறும் வழக்கமான நீதிக்கதை இது.
 எலுமிச்சைக்குள் தஞ்சம் புகுந்திருந்தவன் கார்கோடகன். அரசரைத் தீண்டியதாலும், அரசர் இறந்ததாலும் தன்னைப் பீடித்த பாவத்தைத் தொலைக்க வழி தேடினான். இறைவனை வேண்ட... பொருநைக் கரையிலுள்ள சதுர்வேத கைலாயநாதரையும் பிரஹன் மாதவரையும் வழிபட்டு வணங்கும்படி இறைவனாரும் வாக்கருளினார். இதன்படியே கார்க்கோடகனும் செய்ய, இத்தலமே கார்க்கோடகநல்லூர் என்னும் பெயர் பெற்றது.
 தாமிரவருணியின் வடகிழக்குக் கரையில் அமைந்துள்ள கோடகநல்லூரில், பொருநையையொட்டிய மேற்குப் பகுதியில் அருள்மிகு பிரஹன் மாதவப் பெருமாள் கோயிலும், நேர்கிழக்கே அருள்மிகு கைலாயநாதர் திருக்கோயிலும் உள்ளன. தவிரவும் சற்றே தெற்கில், அருள்மிகு அபிமுக்தேச்வரர் திருக்கோயில்.
 நாளும் தாலிகட்டிக் கொள்ளும் நந்திதேவர்!
 அருள்மிகு சிவகாமி அம்மை உடனாய அருள்மிகு கைலாயநாதர் திருக்கோயில், நவகைலாயத் தலங்களில் ஒன்று. உரோமச முனிவர் அமைத்த ஒன்பது கைலாயத் திருக்கோயில்களில், இது செவ்வாய்க்கானது. சிவன் கோயில் என்றாலும் சற்றே மாறுபட்டது. கொடிமரம், பலிபீடம் போன்றவை இங்கில்லை. பரிவார மூர்த்திகள்கூட இல்லை. சுவாமியான கைலாயநாதரே பிரதானம். சாக்ஷôத் பரமாத்மாவான சுவாமியின் காலில் விழுந்து பணிந்து, அகங்காரத்தையும் மமகாரத்தையும் விடவேண்டும்.
 நஞ்சு கொண்டிருப்பதும், தீண்டுவதும் பாம்பின் குணம்; இயல்பு. அதுவும், குட்டி எலுமிச்சையில் அடைபட்டுக் கிடந்த பூநாகம், வாய்ப்புக் கிட்டியவுடன் வெளிப்பட்டதும், வெளிப்பட்டவுடன் தீண்டியதும் அதன் குற்றமல்ல. ஆனாலும், விஷத்தைக் கக்கியதற்காக வருந்திப் பரிகாரம் தேடிய பாங்கு... பாம்பு சிந்தித்ததா? பேசியதா? பாம்புக்கு இப்படியெல்லாம் எண்ணத் தெரியுமா? இந்த வினாக்கள் அநாவசியம். எந்தப் பாம்பும் இந்தக் கதையைப் படிக்கப் போவதில்லை. படித்துவிட்டுத் தன்னுடைய சுதந்திரத்திற்காகப் போராடப் போவதில்லை. தன் இனத்தைத் திருந்திக் கொள்ளச் சொல்லப்போவதும் இல்லை. அப்படியானால்... இத்தகைய கதைகள், மனிதர்களுக்காகவும், மனித மேம்பாடுகளுக்காகவும் மட்டுமே! நச்சியல்பு கொண்ட பாம்புக்கே, நச்சை மாற்றிக்கொண்டு நயம் காணவேண்டும் என்கிற நாகரிகம் இருக்குமானால், மனிதர்களுக்கு இது எத்தனை அவசியம்!
 தொடரும்...
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com