பழவங்காடி மகாகணபதி கோயில்!

திருவிதாங்கூர் சமஸ்தானத்து  ராணுவ வீரர்கள் உருவாக்கிய ஆலயம்,  இந்திய ராணுவம்  நிர்வகிக்கும்  கோயில்,  திருவனந்தபுரத்தின் புகழ்பெற்ற விநாயகர் ஆலயம் , பக்தர்களின் குறை  தீர்க்கும் கோயில், நாள்தோறும் எண்
பழவங்காடி மகாகணபதி கோயில்!

திருவிதாங்கூர் சமஸ்தானத்து ராணுவ வீரர்கள் உருவாக்கிய ஆலயம், இந்திய ராணுவம் நிர்வகிக்கும் கோயில், திருவனந்தபுரத்தின் புகழ்பெற்ற விநாயகர் ஆலயம் , பக்தர்களின் குறை தீர்க்கும் கோயில், நாள்தோறும் எண்ணற்ற சிதறு தேங்காய்களை ஏற்கும் கோயில் என பல்வேறு சிறப்புக்கள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மகாகணபதி ஆலயம் ஆகும்.

வேனாட்டின் தலைநகரான பத்மநாபபுரத்தில் அமைந்த அரண்மனை மற்றும் கோட்டைகளைப் பாதுகாக்க அனைத்துப் பகுதிகளிலும் நாயர் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அதன் ஒருபுறத்தில் யக்ஷியின் கோயில் இருந்தது, ( இந்த யக்ஷி, பெரும்பாலும் நன்மையளிப்பவள் என்றாலும், சில யக்ஷிகள் தீமை புரியும் வகையிலும் அமைந்திருந்தன.) இந்த கோயில் அருகே காவல் புரிபவர் அடுத்தநாளில் சுயநினைவு இழந்தவராக இருந்தார். இது தொடர்கதையான நிலையில், ஒரு சமயம் காவல் புரிந்த வீரர், அருகே ஓடிய வள்ளியூர் ஆற்றில் குளித்தபோது, அவரின் அருகே ஆறு அங்குல உயரம் கொண்ட சுயம்பு கணபதி சிலை கிடைத்தது. அதை மகிழ்வோடு கையில் எடுத்துக்கொண்டு அன்றைய காவல் பணியை மேற்கொண்டார். அவருக்கு அன்று எந்த அச்சமும், துன்பமும் நிகழவில்லை. இதையறிந்த மற்ற வீரர்கள் காரணத்தைக் கேட்டபோது, இந்த கணபதியின் அருள் சத்தியே தம்மை இடையூறுகளில் இருந்து காத்ததாக தெரிவிக்க, கணபதியின் புகழ் பரவத் தொடங்கியது. இதனால் அவர்களின் காவல் தெய்வமாகப் போற்றப்பட்ட கணபதி, ராணுவ வளாகத்தில் சிறிய கோயிலில் குடியேறினார். இந்த நிகழ்வு கி.பி. 1950 - இல் நடந்தது.

கி.பி. 1760 -இல் தலைநகரான பத்மநாபபுரம், திருவனந்தபுரத்திற்கு மாற்றலான போது, ராணுவவீரர்கள் தங்களுடனேயே கணபதியையும் அழைத்துக் கொண்டு, திருவனந்தபுரம் கோட்டைப் பகுதியில் உள்ள பழைய ஸ்ரீகண்டீஸ்வரர் கோயில் அரச மரத்தடியில் வைத்து வழிபட்டனர். மகாராஜாவின் வீதியுலாவில் மழை குறுக்கிடாமல் இருக்க, இந்த கணபதிக்கு 300 சிதறு தேங்காய்கள் உடைத்தனர். கி.பி. 1771- ஆம் ஆண்டு மதிலகோம் ஆவணங்களின் 13 -ஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 1768-இல் கிழக்கு கோட்டைப்பகுதியில் உள்ள பழவங்காடி பகுதியில் சிறு கணபதி ஆலயம் எழுப்பி, அதில் கணபதியை வைத்து வழிபடலாயினர். இதன்பின் துர்க்கை பகவதி, வேட்டைத் திருமகன், நாகர்கள் உள்ளிட்ட சிலை வடிவங்கள் நிறுவப்பட்டன.

இவ்வாலய நிர்வாகத்தை நாயர் ராணுவத்தினர் நிர்வகித்து வந்தனர். கி.பி. 1951 -ஆம் ஆண்டு இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்ட பிறகு, 1956 -ஆம் ஆண்டு, நவம்பர் 13 முதல் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவப் பிரிவு நிர்வாகம் செய்து வருகின்றது. இதன்பிறகு திருப்பணிகள் பல நடந்து வந்த நிலையில், 2011- ஆம் ஆண்டு கணபதி வடிவில் சிறு விரிசல் ஏற்பட, அது முதல் கணபதி, தங்கக் கவசத்தால் மூடப்பட்டு, வெள்ளி பீடத்தில் நிறுவப்பட்டது. இதன் பிறகு வாஸ்து குறைகள் நீக்கப்பட்டு, தற்போது விசாலமான இடத்தில், கணபதி வீற்றிருக்கின்றார். இதன் குடமுழுக்கு விழா கடந்த ஜூலை மாதம் சிறப்பாக நடந்தேறியது.

கிழக்கு முகமாய், சாலைகளின் சந்திப்பில் திருக்கோயில் அமைந்துள்ளது. நடுநாயகமாக மகாகணபதி அமர்ந்த கோலத்தில் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்ட நிலையில், எழிலாகக் காட்சி தருகின்றார். காலடியில் வாகனமான பெருச்சாளி அமர்ந்துள்ளது. இக்கோயிலில் கணபதியின் 32 சிலா வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர, தர்மசாஸ்தா, துர்க்கை, நாகராஜர் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

இக்கோயிலின் முக்கிய விழா, விநாயகர் சதுர்த்தியாகும். மேலும், கணேஷ் ஜயந்தி, சதுர்த்தி, திருவோணம், விஜயதசமி விஷு, மகா சிவராத்திரி முதலான விழாக்களும் கொண்டாடப் படுகின்றன. இந்த ஆலயத்தில் முக்கிய வழிபாடே சிதறு தேங்காய் உடைத்தல் ஆகும். இதனால் தங்கள் பிரச்னைகள் சிதறி ஓடி, வெற்றி தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதன் நிர்வாகத்தை நீலகிரியில் வெலிங்டன்னில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ மையம் தலைமையிலான குழு பராமரித்து வருகின்றது. இக்கோயிலில் பங்கோடு அனுமன் ஆலயம் மற்றும் எலிப்போடு ஸ்ரீ மகாகணபதி சேவாஸ்ரமமும் இணைந்துள்ளன.

கேரள மாநிலம், திருவனந்தபுரம், அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயிலை அடுத்து கிழக்கு கோட்டை பேருந்து நிறுத்தத்தின் அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com