பெருமை சேர்க்கும் பெருந்தலையூர் ஸ்ரீமகிழீஸ்வரர்!

கொங்கு நாட்டில் ஆற்றங்கரையில் பரந்த கிளைகளுடன் கூடிய வானளாவிய மரங்களின் சூழலில் பெரிய மதில்கள் கொண்டதாக அமைந்துள்ள ஆலயமே பெருந்தலையூர் மகிழீசநாதர் கோயிலாகும். 1924-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும்
பெருமை சேர்க்கும் பெருந்தலையூர் ஸ்ரீமகிழீஸ்வரர்!

கொங்கு நாட்டில் ஆற்றங்கரையில் பரந்த கிளைகளுடன் கூடிய வானளாவிய மரங்களின் சூழலில் பெரிய மதில்கள் கொண்டதாக அமைந்துள்ள ஆலயமே பெருந்தலையூர் மகிழீசநாதர் கோயிலாகும். 1924-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் இவ்வாலயம் மூன்று நாள்கள் மூழ்கிக் கிடந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாலயத்தில் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருமகிழீசர், ஸ்ரீமகிழீஸ்வரர், திருமகிழ வனமுடைய நாயனார் என்ற நாமங்களுடன் போற்றப்படுகிறார். அம்பாளின் திருநாமம் பிரகன்நாயகி, பெரியநாயகி எனும் திருநாமங்களுடன் அழைக்கப்படுகிறது. 

அக்காலத்தில் இங்கு மகிழமரங்கள் அடர்ந்து வளர்ந்து இருந்ததால் அவ்வனத்திடையில் எழுந்த லிங்கமானதால் மகிழ வனமுடையார், மகிழ வனமுடைய நாயனார் எனக் காரணப் பெயரிட்டு பெருமானை வணங்கி வந்துள்ளனர். வாணி நதிக்கரையில் அமைந்துள்ள ஐந்து ஆலயங்களில் சிவலிங்க மூர்த்திகளைக் துர்வாச முனிவரே பிரதிஷ்டை செய்து தினந்தோறும் காலையிலிருந்து தொடங்கி மாலை முடிவதற்குள் ஐந்து ஆலயங்களுக்கும் சென்று வணங்கி வந்தார் எனக் செவிவழிச் செய்தி தெரிவிக்கிறது. துர்வாச முனிவர் கிணற்றை வெட்டி அதிலிருந்து பூசைக்காக நீரெடுத்துக் கொண்டார். கோடையில் கிணறு வற்றிப் போனதால் வருந்திய முனிவர் வடக்கு முகமாகத் திரும்பி நீரை வேண்டி, "நீ இங்கே வா!" எனப் பொருள்படும்படி, "வா நீ' என்று கூப்பிட்டதாகவும் உடனே நீர் பெருக்கெடுத்து ஒரு நதியாக ஓடி வந்ததாகவும் "வாநீ' என்று அழைத்ததால் "வானி நதி' எனப்பட்டு, பின்னர் மருவிப் பிற்காலத்தில் பவானி என ஆயிற்று என்பர்.  
 இக்கோயிலில் குகை காணப்படுகிறது. கோயில் சிலைகளும், பொன்னாபரணங்களும் இங்கு நிறைந்திருப்பதாகவும் ஆதிசேடன் என்ற பாம்பு பாதுகாத்து வருவதாகவும் வாய்மொழி வழக்காறு உண்டு. உண்மையில் போர்க்காலங்களில் அரசக் குடும்ப மகளிரை ஊரின் அப்பால் காட்டுப் பகுதியில் சென்று விடுவதற்கான ரகசியமான சுரங்கங்கள் இருந்தன. அதுபோன்று இக்கோயிலிலும் அமைந்திருக்கலாம்.  
இக்கோயிலின் திருப்பணிக்காகப் பல நிவந்தங்கள் வழங்கப் பெற்றமையைக் கல்வெட்டுக்களாலும், செப்பேடுகளாலும் அறியலாம். இன்று, செப்புப் பட்டயங்கள் கிடைக்காத காரணத்தால் கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு பல செய்திகளை அறியலாம். இங்குச் சிவன் கோயிலும், சற்றுத் தொலைவில் பெருமாள் கோயிலும் அமைந்திருப்பதே பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் இக்கோயில்களில் திருப்பணிகளைச் செய்துள்ளனர் என்ற செய்தியை மெய்ப்பிக்கும். பாண்டிய மன்னருள் பலரும் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள். ஆகவே அவர்கள் இச்சிவன் கோயிலைப் பெரிய அளவில் அமைத்தனர். பாண்டியருக்குப் பின் ஆட்சிக்கு வந்த நாயக்க மன்னர்கள் சிவன் கோயிலைப் போற்றியதுடன் பெருமாளுக்கும் கோயில் அமைத்தனர். கோயில் காரியங்கள் சிறப்புற நடைபெற வேண்டிய பல நிவந்தங்கள் வழங்கியுள்ளனர். அவற்றைக் கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் பதிவு செய்தனர். இக்கல்வெட்டுக்களைக் கொண்டே ஓரளவு செய்திகளை நாம் அறிய முடிகிறது.   
நாயன்மார்களில் காலத்தினால் முற்பட்டவரான கண்ணப்ப நாயனார் திருவுருவ சிலை இங்குள்ளது. கண்ணப்பருக்கு சுவாமியின் வலது பாகத்தே தனி சந்நிதி உள்ளது. அர்த்த மண்டபத்தின் சுற்று சுவரில் பாண்டிய மன்னரால் திருப்பணி செய்ய பெற்ற ஆதாரமாக பாண்டிய மன்னரின் மீன் கொடி செதுக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்தில் சிற்பக்கலை வேலைப்பாடுகளுடன் கூடிய நான்கு தூண்கள் உள்ளது. முதல் தூணில் சரபமும் யானையும் கூடிய திருவுருவம் உள்ளது. பிரகார மண்டபத்தில் கலை நயத்துடன் கூடிய பிரதோஷ நந்தியும், அதன் பின்புறம் நான்கு யுகங்களைக் குறிக்கும் வண்ணமாக பலி பீடமும் கொடிமரமும் உள்ளன. தீப ஸ்தம்பத்தில் திருவுருவம் சிவனை வணங்கும் காட்சியாக செதுக்கப்பட்டு உள்ளது. வெளி மதில் சுவற்றில் ஐந்து துவாரங்கள் காணப்படுகின்றன. அதன் வழியாக நித்திய சூரிய உதய ஒளிக்கதிர்கள் இறைவன்பால் படும் வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது. 
பிரகாரத்தை சுற்றி சிவபெருமானின் கோஷ்டமூர்த்திகள் அமைந்துள்ளன. கோயிலின் தென்மேற்கு பகுதியில் ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி சந்நிதியும், கோயிலின் வடமேற்கு பாகத்தில் வள்ளி தெய்வானையுடன் கூடிய சிவசுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. அடுத்து மண்டபத்துடன் கூடிய பெரியநாயகி எனப்படும் பிரகன்நாயகி சந்நிதி உள்ளது. அம்பாளின் திருவுருவம் சோழர்கால சிற்ப வடிவை ஒட்டியுள்ளது. அம்பாளின் திருவுருவத்தில் பிரபாவளையம் யாளியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்பாளின் மகுடம் ஜடா மகுடம் (வரிவரியாக சடை முடிய பெற்றது) அபய வரத ஹஸ்தம் உடன் அம்பிகை யோக பீடம் என்னும் சதுர் பீடத்தில் எழுந்தருளி உள்ளார். இந்த பீடத்தில் நான்கு வேதங்களை குறிக்கும்படியான வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.   
வழித்தடம்: ஈரோடு-கோபி மார்க்கத்தில் கவுந்தப்
பாடியிலிருந்து ஆப்பக்கூடல் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் பெருந்தலையூர் உள்ளது.                       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com