வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!

தமிழ் புத்தாண்டு என்பது வானியல் மற்றும் அறிவியல் ரீதியாக மிகச்சரியாக அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது.
வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!


தமிழ் புத்தாண்டு என்பது வானியல் மற்றும் அறிவியல் ரீதியாக மிகச்சரியாக அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் ஆண்டின் கால அளவாகும். சூரியன் 12 ராசிகளில் முதலாம் ராசியான மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, கடைசி ராசியான மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ்  ஆண்டின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. 

இதன் அடிப்படையிலேயே தமிழ்ப்புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. அநேகமாக ஆங்கில ஏப்ரல் மாதம், 14 -ஆம் தேதி தமிழ் ஆண்டு தொடங்கும். நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப்புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே அந்த ஆண்டின் காலம் நிர்ணயிக்கப்பட்டு கணிக்கப்படுகிறது. 

தமிழ்ப்புத்தாண்டுக்கு முந்தைய நாளில் வீட்டு வாசலை சுத்தம் செய்து, வீட்டின் நுழைவாயிலிலுள்ள ராஜ நிலைக்கு மாவிலை தோரணம் கட்டி, வீட்டை துடைத்து, பின் புத்தாண்டன்று அதிகாலையில் கோலமிட்டு, பூஜை அறையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் வைத்து காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று நீராடி, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். 

வேம்பு அல்லது வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது கிருமிகளை அணுகவிடா தன்மை கொண்ட கிருமிநாசினி என்று கருதப்படுகின்றது. வேல் போன்ற கூரிய இலைகள் உடைய மரம் வேல்பு. வேல்பு என்ற சொல் மருவி வேம்பு என்றானது. “பு’ என்ற வல்லினம் “ல்’ என்ற மெல்லினத்தை திரித்து “ம்’ என்ற இணக்கமான மெல்லினமாக மாற்றமடைந்து வேல்புவாகி பின் அது  வேம்பு’ ஆகியுள்ளது.

மலைவேம்புக்கு தனி மகத்துவம் உண்டு. உடலில் உள்ள நீர் கட்டிகள், நீர் கொப்பளங்கள் ஏற்படக்காரணம், உடலில் தேங்கியுள்ள கழிவுகளாலும், உஷ்ணத்தினாலும் ஏற்படுகிறது. மலைவேம்பை சாப்பிடுவதால் கர்ப்பப்பையில் உள்ள கிருமிகளை நீக்கி கர்ப்பம் தரிக்க உதவுகிறது. வேப்பஇலை, குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும். வேப்பம் பூ, குடல் புழுக்களைக் கொல்லும். வேம்பு விதை, நஞ்சு நீக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும். வேம்பு பட்டை காய்ச்சலைக் குணமாக்கும்; உடல் பலத்தை அதிகரிக்கும்.

தமிழ் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் தென்படும். இதனை தடுக்கவும், வந்தால் காக்கவும் நம் முன்னோர்கள் வேப்பிலை மற்றும் மஞ்சள் தண்ணீரே பிரதானமாக கையாண்டார்கள். 

மாரியம்மன் வழிபாட்டில் வேப்பிலையும் மஞ்சளும்  பிரதான இடம் வகிக்கின்றன. அம்மை நோய் வந்தால் வேறு மருந்தே இல்லாமல் தனிமை படுத்தப்பட்டு வேப்பிலை படுக்கையில், குளிர்ச்சியான இயற்கை பானங்கள் கொடுக்கப்பட்டு விரைவில் வேப்பிலைக்காரியின் உதவியுடன் குணமடைவார்கள். அதேபோன்று,  நம் இந்திய வேதங்களில் மா, பலா, வாழை என்ற முக்கனிகள் கடவுளுக்கு உகந்த பழமாக குறிப்பிடப்படுகிறது.  

நம் வாழ்க்கையில் இனிப்பும் கசப்பும் சரிபாதியாக கலந்திருந்தால் தான் சமநோக்கோடு இயல்பாக அதனை எதிர் கொள்ள முடியும் என்ற தத்துவத்தின் சாரமாக, ஆண்டின் முதல் நாளில் வேப்பம்பூவினைக் கொண்டு வெல்லம் போட்டு பச்சடியும், மாங்காய் பச்சடியும் ஒருவித கசப்பு, புளிப்பு, துவர்ப்பு மற்றும் இனிப்புடன் அன்று உண்பதற்காக செய்வார்கள். 

சித்திரையில் வசந்தம் வருவதால் வசந்தோற்சவம் அனைத்து கோயில்களிலும் நடைபெறுவது வழக்கம். வசந்தத்தை வரவேற்போம் கசக்கும் வேம்பினை இனிப்பாய் மாற்றி உட்கொண்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com