Enable Javscript for better performance
திருச்சுழி தந்த தீர்க்கதரிசி!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திருச்சுழி தந்த தீர்க்கதரிசி!

    By - எஸ். எஸ். சீதாராமன்  |   Published On : 17th April 2020 06:50 PM  |   Last Updated : 17th April 2020 06:50 PM  |  அ+அ அ-  |  

    vm7

    "நான் யார்'? என உன்னை கேட்டுக்கொள்; நீ செல்ல வேண்டிய இலக்கை நீயே சென்றடைவாய்' என்று உபதேசித்த மகாபுருஷர் ரமண மகரிஷி ஆவர். அருப்புக்கோட்டையிலிருந்து 15 கி. மீ. தொலைவில் திருச்சுழி என்ற கிராமத்தில் 1879 -ஆம் ஆண்டு, டிசம்பர் 30 -ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் வேங்கடராமன்.

    ஒருமுறை திருவண்ணாமலையிலிருந்து வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளியிடம் திருஅண்ணாமலை பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார். அருணாசலத்தைப் பற்றியே ஆழ்ந்த சிந்தனையில் உறைந்தார். எண்ணங்கள் முழுவதும் அருணாசலத்தை காண வேண்டுமென்ற அவா எழுந்தது. புறப்பட்டு விட்டார் அருணாசலத்தைக் காண்பதற்கு.

    "தன் உள்ளே எழும் கேள்விகளுக்கான விடை மெளனமே!' என்று தன் 16 -ஆவது வயதில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலம் உணர்ந்தார். பின் அவர் நாடிய இடம் தான் அருணாசலம். "நான் யார்' என்று உன் உள்ளே சென்று பார் என்றார். அதையே தன்னை நாடி வருபவருக்கும் உபதேசித்தார். ஒப்பற்ற குருவானார். யோக நிலையிலிருந்த அவரை ஆரம்பகாலத்தில் சிலர் துன்புறுத்தினர். அண்ணாமலையார் கோயில் பாதாள லிங்க சுரங்கத்தில் இருந்த ரமணரை வெளிக்கொணர்ந்து, அவர் ஒரு வணங்கத்தக்க குரு என உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சேஷாத்ரி சுவாமிகள் ஆவர். ஆன்மிக உலகில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளை அம்பிகை காமாட்சியின் அம்சமாகவும், ரமண மகரிஷியை முருகனின் அம்சமாகவும் பாவித்தார்கள்.

    பக்தர்களை, யோக நிலையிலேயே பல சமயங்களில் ஆசிர்வதித்தார். கூட்டம் கூடியது; ஆஸ்ரமம் உருவானது. அண்ணாமலையாரை தரிசிக்க வந்த பல வெளிநாட்டினர் தன் ஆன்மீகத் தேடலுக்கு விடை பெறுவதற்கு ரமணரை அணுகினர். ரமணர் கூறிய "மெளன பதில்' அவர்களுக்கு ஏற்புடைய விடையாகக் கிடைத்ததால், அவரது புகழ் மேலைநாடுகளில் பரவி பெரும் பக்தர்களின் வட்டம் உருவானது. தன் தாயாருக்கு, தன் ஆஸ்ரமத்தில் கோயில் எழுப்பினார். அக்கோயிலை தரிசித்த பின் தான் மகரிஷியின் அதிஷ்டானத்தை வழிபடமுடியும். அவரது படைப்புகளில் மிகமுக்கியமானது "அருணாசல அட்சரமணிமாலை" ஆகும். 1950 -ஆம் ஆண்டு ரமணர் மகாநிர்வாணம் எய்தினார்.

    அவர் காலத்தில் வாழ்ந்த ஒரு பக்தரின் அனுபவம்: ஒருமுறை ரமணரின் தீவிர பக்தரான சுவாமிமலை சாம்பமூர்த்தி என்னும் அன்பர் தன் இருபத்தி இரண்டாவது வயதில் தன் குடும்பத்தை துறந்து, புவனேஸ்வரியின் மகிமையையும் அவளது இருப்பிடத்தையும் காணவேண்டுமென்ற பக்தி தேடலில் கிளம்பிவிட்டார். அப்படி கிளம்பியவர், ரமணாஸ்ரமம் வந்து அமர்ந்துவிட்டார். நாள்கள் சென்று கொண்டிருந்தன. ரமணரும் தினமும் அந்த பக்தரை பார்த்துவிட்டு சென்றுவிடுவார். ஒருநாள் திடீரென ரமணர் தன்போக்கில் செல்லும்போது இவரிடம் வந்து "நீ செல்லப்போவது உறுதி தானா" என கேட்க அந்த பக்தரும் "ஆம் என் நிலைப்பாட்டில் எந்த தயக்கமும் இல்லை" என்றார்."உன்னை யாராலும் தடுக்க முடியாது, உடனே கிளம்பு" என ஆசி கூறி அவரை அனுப்பினார்.

    ஸ்ரீராமரின் வனவாசத்தைப்போல் பதினான்கு வருடம் கால்நடைப் பயணமாகவே வடதேசம் முழுக்க சென்று; சாதுக்களுடன் சங்கமித்து கடைசியில் அசாம் மாநிலத்திலுள்ள "காமாக்யா' சென்று அங்கேயே இருந்துள்ளார் அந்த அன்பர். அங்கு அவரை அம்பிகைக்கு நரபலி கொடுக்க நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்கள் பண்டாக்கள். பின்னர் இவர் காது சற்று கேட்காது இருந்ததால் ஊனமுற்றோரை பலி கொடுக்க இயலாது என முடிவு செய்து ரத்த திலகம் இட்டு அனுப்பியுள்ளார்கள். பின் ஊர் திரும்பிய அவர் "தேவி உபாசகர்' ஆனார். அந்நாளில் தலைசிறந்த உபன்யாசகரும் ஆனார்.

    புலிக்குட்டியிடம் காட்டிய பரிவு : ஒரு முறை ரமண மகரிஷி தியானத்தில் அமர்ந்திருந்த போது ஒரு புலிக்குட்டி அங்கும் இங்கும் தாவித்தாவி இவர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்துவிட்டது. உடனே அவர் அதனை அருகில் வா என அழைத்து ஒரு கயிறு கொண்டுவரச்சொல்லி தன் அருகில் கட்டிப் போட்டாராம். பின் அதற்கு தாமே பால், பழம் போன்றவைகளை; நம் குழந்தைகளுக்கு எப்படி ஊட்டுவோமோ அப்படி கவனமாகக் கொடுத்து வந்தாராம். இரண்டு மூன்று நாள்கள் இது நிகழ்ந்தது. பின் இருவரையும் காணவில்லை. ஒரு நாள் சென்று ரமணர் மட்டும் திரும்பியுள்ளார். திரும்பிய அவரிடம் அவரது சீடர்கள் "அந்த புலிக்குட்டி எங்கே சுவாமி' என்று கேட்க; அதற்கு ரமணர், "தான் இங்கு வருவதற்கு முன் காட்டில் தனித்திருந்தபோது, இதன் தாய்ப்புலி தமக்கு நண்பனாய் இருந்தது. தாயுடன் விளையாடிக் கொண்டிருந்த அதன் குட்டி தடம் (வழி) தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி இங்கு வந்து என்னிடம் சேர்ந்துவிட்டது. பின் அது என்னிடம் தான் வந்துள்ளது என்பதை அதன் தாய்ப்புலிக்கு தெரியப்படுத்தி; தானே சென்று பத்திரமாக சேர்ப்பித்து விட்டு வந்ததாக', அவரது வாழ்க்கை சம்பவம் சொல்கிறது.

    நம்மைப்போல் தான் விலங்கினங்களும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் தன் ஆஸ்ரமத்தில் நாய், பசு, குரங்கு, மயில், அணில் என பல ஜீவராசிகளையும் வளர்த்து அதனுடன் அதன் மொழியில் பேசி தன் நேரத்தை பல மணி நேரங்களை அவைகளுக்கு ஒதுக்கியுள்ளார்.

    பால்யத்திலேயே ஆத்மஞானம் பெற்ற "திருச்சுழி தந்த தீர்க்கதரிசி' ரமண மகரிஷியின் ஆராதனை நாள், ஏப்ரல் 20 -ஆம் தேதி அமைகின்றது. திருவண்ணாமலையில் அவரது ஆஸ்ரமத்திலும்; அவரது அணுக்கத்தொண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட பல ரமணாலயங்களிலும் ஆராதனை வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp