Enable Javscript for better performance
தேவியின் திருத்தலங்கள்: காஞ்சி காமாட்சி - 1- Dinamani

சுடச்சுட

  தேவியின் திருத்தலங்கள்: காஞ்சி காமாட்சி - 1

  By ஜி.ஏ.பிரபா  |   Published on : 11th December 2020 04:56 PM  |   அ+அ அ-   |    |  

  vm8


  சிவா: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
  ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பன்திதுமாபி

  (செளந்தர்ய லஹரி)

  இந்தப் பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருப்பது பராசக்தியே! செயலற்று இருக்கும் பிரம்மத்திற்கு அசைவு கொடுப்பதும் சக்தியே. பிரம்மத்தையும், பிரம்ம சக்தியையும் பிரிக்க முடியாது. அந்த சக்தியே நமக்குள் நிறைந்து நாம் வாழ ஆதாரமாகிறது.

  மலர்களில் நிறைந்துள்ள மணம், பாலில் உள்ள வெண்மை, ஒளியில் உள்ள பிரகாசம் போல், அனைத்திற்கும் சக்தியே ஆதாரம். இதையே ஆதிசங்கரர் தன் செளந்தர்ய லஹரியில் "தாயே! பிரம்மம் தனக்கென்று எந்த வர்ணமும் இல்லாமல் சுத்த ஸ்படிகமாக இருந்தது. உன்னுடன் கூடியதாலேயே மகாதேவன் உலகைப் படைக்கும் திறன் பெற்றார். மும்மூர்த்திகளும் பூஜிக்கும் உன்னை புண்ணியம் செய்தவன் மட்டுமே துதிக்க முடியும்!' என்கிறார். 

  இந்த உலகுக்கே தாயாக இருப்பவள் அன்னை காமாட்சி. ஞான சாகரமாக இருந்த ஈஸ்வரனை கருணா சாகரமாக மாற்றவே அன்னை காமாட்சி காஞ்சியில் குடி கொண்டாள். 

  சர்வலோக நாயகியான அம்பாள் காஞ்சியில் விசேஷ சாந்நித்யத்துடன் எழுந்தருளி இருக்கிறாள். பூமியை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தினால் அவளின் இடுப்பு ஒட்டியாணமாக காஞ்சி இருக்கிறது! 

  அன்னையை வேதவியாசர் ஸ்தாபிதம் செய்தார் என்று அறிகிறோம். அன்னை பூமிக்கு வந்தது எப்படி?

  பந்தகாசுரன் என்ற அரக்கன் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடமிருந்து அதிக வரங்கள் பெற்று, அதன் சக்தியாலும், ஆணவத்தாலும் மூவுலகங்களையும் கைப்பற்றி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல துன்பங்கள் கொடுத்து வந்தான். அதைத் தாங்க முடியாத அவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட "பராசக்தியால் மட்டும்தான் அவனை அழிக்க முடியும்' என்றார் ஈசன்.

  தேவி அப்போது காஞ்சியில் தவத்தில் ஈடுபட்டிருந்தாள். மீண்டும் ஈசனை அடைய உக்கிரமான ஊசிமுனை தவம். எதற்காக...?

  ஒருமுறை அம்பிகை விளையாட்டாய் ஈசனின் கண்களைப் பொத்தி விட உலகங்கள் இருண்டு ஜீவராசிகள் எல்லாம் அலறிக் கலங்கினர். தேவியையும் அந்தக் கருமை பற்றியது. அப்போது ஈசன் "நீ செய்த தவறுக்கு பரிகாரமாக பூமியில் பத்ரிகாசிரமத்தில் உன்னைக் குழந்தையாக அடைய வேண்டுமென்று தவம் இருக்கும் காத்யாயன மகரிஷியிடம் செல்' என்று உத்தரவு இடுகிறார்.

  "நான் மீண்டும் தங்களை அடைவது எப்படி?'- அன்னை வேண்டுகிறாள்.

  "நீ மகரிஷியிடம் செல். அவர் உன்னை குழந்தையாகப் பெற்று, தக்க பருவத்தில் என் கட்டளைக்கிணங்க  உனக்கு யோக தண்டம், ஜபமாலை, தீப ஸ்தம்பம், இரண்டு குடம், விசிறி, இரண்டு சாமரம், புத்தகம், புலித்தோல், வறுத்த பயறு, கங்கை மணல், கங்கா தீர்த்தம், குடை இவற்றைத் தருவார். அவற்றுடன் நீ காசி சென்று, பசிப்பிணி போக்கி, தெற்கு நோக்கிப் பயணப்படு. எங்கு இந்தப் பொருள்கள் உருமாறுகிறதோ அதுவே நீ என்னை அடையும் தலம்!' என்கிறார் ஈசன்.

  காஞ்சியில் இவை உருமாறுகின்றன. மணல் லிங்க வடிவமாகிறது. குடை நாகாபரணமாகியது. யோக தண்டம் திரிசூலமாகியது. விசிறி கிளியானது. புத்தகம் காமதேனு வடிவமானது. லிங்க வடிவமான ஈசனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பிக்கிறாள் அன்னை!

  தவம் செய்தாலும் கருணைத் தெய்வமான காமாட்சி தன்னை அண்டி வந்தவர்களை ஆதரிக்காமல் இருப்பாளா? அன்பு நிறைந்தவள் அல்லவா அவள்...?

  அவள்தான் மன்மதன் கையில் கரும்பு வில்லும், மலர் அம்பும் கொடுத்து ஜீவராசிகள் உருவாக அவர்களிடம் காமத்தை உண்டாக்கச் செய்தவள். அவன் ஈஸ்வரனால் எரிக்கப்பட்ட பின்,  தேவி கரும்பு மலரம்புகளை தன் கையில் எடுத்துக் கொண்டு, "அதிகாரத்தினாலோ, ஆணவத்தாலோ இறைவனை வசப்படுத்த முடியாது' என்று தன் இரண்டு கண்களாலும் அன்பொழுக ஈசனைப் பார்க்கிறாள். அதில்தான் காமேஸ்வரனை வசப்படுத்துகிறாள். அன்பு மயமாக, அன்பு பொங்கப் பார்த்ததால் அவள் "காமாக்ஷி' என்று அழைக்கப்படுகிறாள்.

  காம- அன்பு, அக்ஷி - கண் எனவேதான் காமாக்ஷி. அன்பு மயமானவள். காம எனும் ஐம்பத்தொரு அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அம்பிகை. "கா' என்றால் சரஸ்வதி, "மா' என்றால் மகேஸ்வரி, "க்ஷி' என்றால் லட்சுமி. எனவே காமாக்ஷியை வணங்கினால் மூன்று சக்திகளையும் வணங்கிய பலன் கிடைக்கும்!

  அங்கு காமக்கோட்டத்தில் கிளி வடிவில் செண்பக மரத்தில் தவம் இருந்த அன்னையின் மனம் தேவர்களின் அபயக் குரல் கேட்டு இரங்கியது. 

  தேவர்களின் துன்பத்தைக் கேள்விப்பட்ட அன்னை பந்தகாசுரனை அழிப்பதாக உறுதி அளித்தாள். கைலாயத்தில் ஓர் இருண்ட குகையில் அவன் இருப்பதை அறிந்த தேவி அங்கு சென்று பதினெட்டு கரங்களில் பதினெட்டு வகையான ஆயுதம் தாங்கி அவனை வதம் செய்கிறாள்.

  உக்கிர ரூபத்தில் பந்தகாசுரனின் தலையுடன் வந்த அன்னையைக் கண்டு பயந்த தன் குழந்தைகளுக்கு சிறுமி வடிவில் காட்சி அளித்த அன்னை, அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டி, அதில் அசுரனைப் புதைத்து அதன் மேல் வெற்றித் தூண் ஒன்றை நிறுவுமாறு கூறுகிறாள். 

  தேவர்கள் அந்த இடத்தில் இருபத்து நான்கு தூண்களை நிறுவி அதன்மேல் ஒரு காயத்ரி மண்டபம், அதனுள்ளே அன்னையின் அழகிய உருவம் ஒன்றை அமைத்து வணங்கினர். 

  கதவை மூடிவிட்டு வெளியில் அமர்ந்து அன்னையைப் போற்றித் துதித்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்  அந்தக் கதவை பக்தியுடன் திறந்தவர்கள் மகிழ்ந்து சிலிர்த்துப் போனார்கள். அவர்கள் நிறுவிய சிலைக்குப் பதிலாக அன்னை காமாட்சியே அங்கு வீற்றிருந்தாள்.

  காமாக்ஷி தோன்றியது ஸ்வயம்பு மனுவந்திரத்தில், கிருத யுகத்தில் ஸ்ரீமுக வருஷம், பங்குனி மாதம், பிரதமை திதியும், பூர நட்சத்திரமும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை ஆகும். 

  காயத்ரி மண்டபத்தின் நடுவில், தென்கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள். அவளின் நான்கு கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் முதலானவற்றுடன் காட்சி அளிக்கிறாள் அம்மை.

  தேவர்களின் பிரார்த்தனைக்கு மகிழ்ந்து அந்த காயத்ரி மண்டபத்தில் ராஜ ராஜேஸ்வரியாக, எல்லையில்லாத கருணை வடிவமாக, அழகுக்கு உவமை இல்லாதவளாக வீற்றிருந்து அரசாட்சி செய்கிறாள் அம்பிகை.

  காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சக்திக்கான தனிப்பட்ட கோயில் இது. ஐம்பத்தோர் சக்தி பீடங்களில் முக்கிய இடம் வகிப்பது காஞ்சி. அன்னையின் முதுகுப்பகுதி விழுந்த இடம். 

  அன்னை காமாட்சியின் இரு கண்களாக கலைமகளும், திருமகளும் விளங்குகிறார்கள். எல்லா சக்தி கோட்டங்களில் உள்ள ஜீவகலைகள் அனைத்தும் காமகோட்டத்திற்கு வந்து அவள் சக்தியைப் பெற்று  அதனதன் ஷேத்திரங்களுக்குச் செல்கின்றன. சக்தி அதிர்வுகள் நிறைந்த இடம் என்பதால் தசரதச் சக்கரவர்த்தி இங்குதான் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.

  ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தின் மூலமாக விளங்குபவள் காமாக்ஷி. ஸ்ரீசக்கரமே அவளின் இருப்பிடமாகும்.  இந்த ஸ்ரீசக்கரம் பரமேஸ்வரனால் நிர்மாணிக்கப் பட்டது. கிருத யுகத்தில் துர்வாசரும், திரேதாயுகத்தில் பரசுராமரும், த்வாபர யுகத்தில் தெளம்ய மகரிஷியும் இதைப் புதுப்பித்தார்கள். இந்தக் கலியுகத்தில் சாக்ஷôத் ஈஸ்வர சொரூபமான நமது ஆதி சங்கரர் வந்தார்...

  காஞ்சிபுரத்தில் மட்டும் எந்த சிவாலயத்திலும் அம்மன் சந்நிதி கிடையாது. அது காமகோடி பீடமாக இருக்கிறது. அவள் ஞானப் பால் தருவாள். அன்னபூரணியாய் அகிலத்துக்கே உணவு அளிப்பவள். நம் ஆசைகளை எல்லாம் தன் கருணா கடாக்ஷத்தால் நிறைவேற்றுபவள் அவள். அவளைச் சரணடைந்து விட்டால் நமது துர்குணங்களை எல்லாம் அழித்து பரிசுத்தம் ஆக்கி விடுவாள்.

  எனவேதான் அவளை "கடாக்ஷ கிங்கரி பூத கமலா கோடி சேவிதா!' என்கிறோம்.
  மாயைக்குக் காரணமான பிரம்ம சக்தி அம்பிகை. அவளே ஞானம் அருளி அனைத்துக்கும் காரணம் ஆகிறாள். மாயையிலிருந்து நம்மை விடுவிக்கும் கருணை மழையும் அவளே. அவளை வணங்கினால் வாழ்வின் சகல பேறுகளையும் அளித்து  தன் தாமரைப் பாதங்களில் நம்மை அடைக்கலம் ஆக அருளுவாள். அவளின் அருள் இன்றி எதுவும் நடக்காது இந்த பிரபஞ்சத்தில்...!

  காயத்ரி மண்டபத்தில் "ஜய ஜய சங்கர..!' என்ற கோஷம் எழும்பியது. ஸ்ரீசங்கரர் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து விட்டார். ""தாயே! உன் உக்கிரத்தைத் தணித்து, சாந்த ஸ்வரூபமாக இருக்க வேண்டும்!'' என்ற அவரின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து அன்னை கருணா சாகரமாக மாறிவிட்டாள்.  பூரண மங்கள ஸ்வரூபமாய் ஆச்சார்யாள் வெளியில் வந்தார். அம்பிகையின் சொரூபமாய் ஜ்வலித்த அவரின் பின் அன்னை காமாக்ஷி தன் கருணை கடாக்ஷத்தை மழையாகப் பொழிவித்தாள். ஸ்ரீசங்கரர் நடக்கும் வழி எங்கும் பூமழை தூவியது.
  "ஜய, ஜய சங்கர...!' என்ற கோஷம் அவரைப் பின் தொடர்ந்தது.

  (தொடரும்)


  சிறப்புச் செய்திகள்: "ஆயிரம் கோயில்கள் உள்ள நகரம்' எனப்படும் காஞ்சியின் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. ஆறாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது இக்கோயில். மாசி மாத உற்சவம், நவராத்திரி, ஆடி ஐப்பசி பூசம், வெள்ளிக்கிழமை பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

  இருப்பிடம்: காஞ்சிபுரம் மாவட்டம். சென்னையிலிருந்து 72 கி.மீ. தொலைவு.

  அருகில் உள்ள கோயில்கள்: ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், ஆதி காமாட்சி கோயில், குமரக்கோட்டம் முருகன் கோயில் உள்ளிட்டவை.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp