சித்தர் சபையில் சபேசன்!
By -எஸ்.வெங்கட்ராமன் | Published On : 25th December 2020 04:42 PM | Last Updated : 25th December 2020 04:42 PM | அ+அ அ- |

மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நாளில் திருக்கோயில்களில் "ஆருத்ரா தரிசனம்' விமரிசையான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சிவபெருமானின் ரூபங்களில் ஒன்றான நடராஜருக்கே உரியதாகும்.
ஸ்ரீநடராஜப்பெருமானின் பஞ்ச சபை நடனங்கள் விசேஷமாகச் சொல்லப்படுகின்றன. அவை, கனகசபை (சிதம்பரம்), வெள்ளியம்பலம் (மதுரை), தாமிர சபை (திருநெல்வேலி), சித்திரசபை (திருக்குற்றாலம்), ரத்தின சபை (திருவாலங்காடு) ஆகியவையாகும். இதில் வெள்ளியம்பலத்தில் மட்டும் பாண்டிய மன்னனுக்காக கால் மாற்றி ஆடும் (வலது பாதம் தூக்கி) நடராஜரை தரிசிக்கலாம்.
இதேபோன்று, கால் மாற்றி ஆடும் கோலத்தில் உள்ள நடராஜ உற்சவ மூர்த்தங்களை கீழ்வேளுர் ஸ்ரீஅட்சய லிங்கேஸ்வரர், வன்னியன் சுரக்குடி ஸ்ரீ சொக்கநாத சுவாமி, திருவக்கரை ஸ்ரீசந்திரசேகரேஸ்வரர், குரோம்பேட்டை குமரன் குன்றம் போன்ற ஆலயங்களில் காணலாம். இதைத்தவிர, திருப்பூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கண்டியன்கோவில் என்னும் இடத்தில் உள்ள திருவடிபீடம் சித்திவளாகம் ஸ்ரீ ஆதிஅம்பலம் சித்தர் சபையில் கால் மாற்றி ஆடும் நடராஜப் பெருமானைக் காணமுடியும்.
பக்தி, யோகம், வைத்தியம், ஞானம் என இறைமார்க்கத்தை படிப்படியாகக் கொடுத்து, இறைவனை அடையும் சத்திய சன்மார்க்கமாகத் திகழும் இந்த திருவடி பீடம் அகத்தியப்பெருமான் அருளாசியுடன் சித்தர்தாசன் என்ற அடியாரால் உருவாக்கப்பட்டது.
இவ்வளாகத்தில் முன்புறம் உள்ள மண்டபத்தில் 33 அடி உயர விஸ்வரூப அமிர்த கலசத்தை ஏந்திய நிலையில் உள்ள அகத்தியப் பெருமான் திருவுருவையும், ஒளவைக்கு உபதேசித்து அருளும் ஞான விநாயகரையும், பிரணவ தத்துவத்தை ஓதும் ஞான முருகன் சிலையையும், ஒரே கருவறையில் பதினெட்டு சித்தர்களின் விக்ரகத் திருமேனிகளையும், காகபுஜண்டர் சமேத பகுளாதேவி உடனமர் ஞானவாலாம்பியையும், ஸ்ரீஞானாம்பிகை சமேத சதாசிவநாதர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படும் சிவகாமி அம்பிகையுடன் கூடிய, வலது காலை தூக்கி ஆடும் கோலத்தில் உள்ள நடராஜப் பெருமானையும், அமர்ந்த கோலத்தில் உள்ள மாணிக்கவாசகரின் ஐம்பொன் சிலைகளையும் காணலாம்.
ஆண்டுக்கு ஒரு முறை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கருவறைத் திறக்கப்படுகிறது. அனைத்து மூர்த்தங்களையும் அன்று தரிசிக்கலாம். வரும் டிச. 30-ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் நடராஜப்பெருமான் மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.
பின்னர் பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். பக்தர்கள் தங்கள் கைகளினால் நடராஜப்பெருமானுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அனைத்து நிகழ்ச்சிகளும், கரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றியே நடைபெறும் என்று திருவடிபீட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு: 9488031433 / 9080755533.