Enable Javscript for better performance
கோடீச்சரம் உறையும் கோமான்!- Dinamani

சுடச்சுட

  
  vm2

  கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை மார்க்கத்தில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வரர் ஆலயம். மகாமகம் சம்பந்தப்பட்ட 12 திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் சப்தஸ்தான கோயில்களிலும் ஒன்றாகும்.
   ஆத்ரேயர் என்ற பெயர் கொண்ட அத்ரிமரபில் தோன்றிய முனிவர் ஒருவர் மணலால் லிங்கம் செய்து, கொட்டை (ஆமணக்கு) மரத்தடியில் அமுத கிணற்று நீரை சுவாமிக்கு தினமும் பூஜை செய்து மகிழ்பவர். ஒரு சமயம் திருவலஞ்சுழியில் ஆதிசேஷனால் பூமி பிளவுபட்டு பாதாளம் உண்டானது. காவிரி நீர் அதில் புகுந்து தடைபட்டது. அப்போது ஆட்சிபுரிந்த அரித்துவ சோழன் பெரிதும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டான். அப்போது வானில் "இப்பாதாளத்தில் ஓர் அரசர் அல்லது முனிவர் இறங்கினால் பள்ளம் சரிப்படும் என அசரீரி கேட்டது. மன்னரோ திகைத்தார். முனிவர் சிறிதும் தாமதியாது இறங்கியதும் பள்ளம் மூடியது. காவிரி விரைந்து பாய்ந்தது. திருவலஞ்சுழியில் இறங்கிய முனிவர் கொட்டையூரில் எழுந்து வந்து இறைவனை வழிபட்டார். இவரின் திருவுருவம் கோயிலில் உள்ளது. இவர் நன்கு சிறப்பிக்கப்படுகின்றார். இவரின் காயங்களை இறைவனே ஆற்றினார் என்று கூறப்படுகின்றது. பிற்காலத்தில் இவரே ஏரண்ட முனிவர் என அழைக்கப்பட்டார்.
   மற்றொரு தல வரலாற்றின்படி, பத்ரயோகி என்ற மகா முனிவர் இமயமலையில் தவம் இயற்றியபோது சத்தியரதி என்ற அரசன் அவ்விடம் வந்தான். முனிவர் தன்னை மதிக்கவில்லை என்று கருதிய மன்னன் அவரை சோதிக்க எண்ணி புலியால் இறந்த சடலம் ஒன்றை அவர் முன்பு வைத்து உயிர்ப்பிக்க வேண்டினான். தன் ஞான சிருஷ்டியால் நடந்ததை அறிந்த முனிவர் அரசனை பேயாய்க் காட்டில் திரியக்கடவது என சினம் பொங்க சாபமிட்டார். தனது கோபம் தணியவேண்டி முனிவர், கோடி சிவ ஆலய தரிசனம் செய்ய மனதில் சங்கல்பித்து, பல தலங்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்தவாறு கடைசியில் கொட்டையூரை அடைந்தார். ஏரண்ட முனிவரின் பூசை முறைகளால் மனம் கவரப்பட்டு அவரை வணங்கினார்.
   ஏரண்டர் பூசையாலும், பத்ரயோகிக்காகவும் இறைவன் அசரீரியாய் "இத்தலத்தை தரிசித்தது கோடித் தலங்களை தரிசனம் செய்ததற்கு ஒப்பாகும்" என மொழிந்து, அவர்களுக்கு கோடி விநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் அருவுருவாகக் காட்சியளித்தார். இக்காரணம் பொருட்டு இத்தல இறைவன் (சுயம்பு மூர்த்தி) கோடீஸ்வரர் என்று திருநாமம் கொண்டு அருள்புரிகின்றார். லிங்கத் திருமேனியில் பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்காய்த்த மாதிரி காணப்படுவது சிறப்பு அம்சமாகும். சிரசில் கங்கையை தாங்கியுள்ளவராய் ஆகர்ஷண சக்தியுடன் காணப்படுகின்றார். இவரது தரிசனம் காண்போரை மெய்ச்சிலிர்க்க வைக்கும் என்பதை பக்தர்கள் அனுபவ பூர்வமாக உணரலாம். இத்தல விநாயகர் "கோடி விநாயகர்" என்றும் முருகன் "கோடி முருகன்' என்றும் அழைக்கப்படுகிறார். அவர்களுடைய கற்திருமேனிகளையும் வித்தியாசமான தோற்றத்தில் தரிசிக்கலாம்.
   இத்தலத்தில் புண்ணியம் செய்தாலும் பாவஞ் செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் தான் இவ்வூரில் பாவஞ் செய்தால் அதற்கு விமோசனம் கிடையாது என்பர். "கொட்டையூரில் செய்த பாவம் கட்டையோடே' என்ற பழமொழி நிலவி வருகின்றது.
   இங்கு அருள் வழங்கும் அம்பிகை கோடியம்மை, பந்தாடு நாயகி போன்ற திருநாமங்களை தாங்கிக்கொண்டு அருள்புரிகின்றாள். ஒரு சமயம் பத்திரயோகிக்கு பந்தாடும் பாவையாய் காட்சி தந்ததினால் பந்தாடு நாயகி வடமொழியில் கந்துக கிரீடாம்பாள் என்ற பெயர் ஏற்படலாயிற்று.
   இவளை வழிபட, நமது பாவங்களை பந்தை காலால் உதைத்து தள்ளுவது போல் நீக்கி அருள்கின்றாள் என்று கூறப்படுகின்றது. இவ்வாலயத்தில் வழிபடப்
   படும் அஷ்டபுஜ துர்க்கை மற்றும் இதர தெய்வ மூர்த்தங்களின் சந்நிதிகளும் குறிப்பாக வாகனங்கள், எந்திரங்களுடன் கூடிய நவக்கிரக சந்நிதியும் காண வேண்டிய ஒன்று. ஆலய சிற்ப வேலைப்பாடுகள் பிரமிப்பூட்டுகின்றன. கல்வெட்டுகளும் காணப்படுகின்றது.
   திருக்கொட்டையூர்க் கோடீச்சரம், ஏரண்டபுரம், வில்வாரண்யம் எனப் பல பெயர்களைக்கொண்டு தேவாரத்திருப்பதிகம் பெற்ற காவிரிக்கு வடகரையில் இப்பதி 44 -ஆவது தலமாகத் திகழ்கின்றது. திருநாவுக்கரசர் திருவலஞ்சுழி, கொட்டையூர் இரண்டு தலங்களையும் இணைத்துத் திருத்தாண்டகத் திருப்பதிகம் ஒன்று அருளிச் செய்துள்ளார். அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ் பெற்ற தலம். சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய கோடீச்சுரக்கோவை இத்தலத்திற்குரியது.
   ஒரு முறை இவ்வாலயத்திற்குச் சென்று பெருமானை வழிபட்டால், ஒரு கோடி சிவன் கோயில்களுக்குச் சென்று வந்த புண்ணியம் நம்மை வந்தடையும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. அதிலும், எதிர்வரும் சிவராத்திரி நந்நாளில் இவ்வாலயத்திற்குச் சென்று தரிசிப்பது மிக மிக சிறப்பாகும்.
   - வசந்தா சுரேஷ்குமார்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai