Enable Javscript for better performance
தாயாய் வந்து உதவிய வைத்தியநாதசுவாமி!- Dinamani

சுடச்சுட

  
  vm1

  ஓர் ஏழைத் தம்பதியினர் குழந்தை வேண்டுமென சிவனிடம் வேண்ட, அவர்கள் மீது கருணைகொண்ட சிவபெருமானின் அருளால் அப்பெண் கருவுற்றாள். மகப்பேறு காலம் நெருங்கியது. உதவிக்கு வருவதாக இருந்த அவளது தாய் வரமுடியாததால் அப்பெண் தன் தாயின் இருப்பிடம் நோக்கித் தனியே சென்றாள். சிறிது தொலைவு சென்றதும் அவளுக்கு வலி கண்டது. உதவி செய்ய யாரும் அருகில் இல்லை. தன்னைக் காக்கும்படி அவள் ஈசனை வேண்ட, ஈசன் அவளது தாயின் உருவில் வந்து அவளுக்கு உதவினார். குழந்தையும் சுகமாகப் பிறந்தது.
   விரலால் பூமியில் கீறி நீரை வரவழைத்து அவளை அருந்தச் செய்து, அந்நீரே அவளுக்கு மருந்து என்றும் கூறினார். நீரை அருந்தியவள் நிமிர்ந்து பார்த்தபோது அங்கு யாரும் இருக்கவில்லை. அப்போது அவளது தாய் ஓடோடி வந்தாள். யாருமே இல்லாத அந்த இடத்தில் தனது பெண் சுகமாக குழந்தையைப் பெற்றெடுத்ததைக் கண்டு வியந்தாள்.
   ஈசன் சிவகாமி அம்மையுடன் காளை வாகனத்தில் தோன்றி, அவள் தன்னிடம் கொண்ட பக்தியின் காரணமாகத் தான் வந்து அவளுக்கு உதவியதாகவும், அவளது தாகத்திற்கும் காயத்திற்கும் மருந்தாக அமைந்த அவ்விடத்துத் தீர்த்தம் காயக்குடி ஆறு என அழைக்கப்படும் எனவும், அவ்வாற்றில் முழுகி எழுந்து ஈசனை வழிபடுவோரின் நோய்கள் விலகும் எனவும் கூறி மறைந்தார். இந்த திருவிளையாடல் நிகழ்த்தப்பட்ட இடம், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயிலாகும். இத்தலம் இம் மாவட்டத்தின் மிகப் பெரிய சைவத்தலமாக விளங்குகிறது எனலாம்.
   ஆடல் பாடல்களில் சிறந்த இரு பெண்கள் (மடவார்) இத்தலத்தில் தங்களது ஆடல், பாடல் மூலம் இறைவனுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தனர். அவர்களுக்குப் பொருளும் இருக்க வீடும் கிடைக்கச் செய்து அருளிய திருவிளையாடல் நிகழ்த்திய தலம் (வளாகம்) இது என்பதால் மடவார்வளாகம் என அழைக்கப்படுகிறது என்ற வரலாறும் உண்டு.

  வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் கர்ப்பம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்க்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. இத் தலத்தில் அருளும் சிவனையும் சக்தியையும் வணங்கிட சுகப்பிரசவம் நிச்சயமாக நடக்கும் என்பது அனுபவமாகும்.
   ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் மற்றும் பங்குனி மாதத்தில் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் மீது பட்டு சூரிய பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.
   ஒருமுறை, மன்னர் திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி உண்டானது. வயிற்று வலி தீர்க்கும் இறைவன் வைத்தியநாதன் என்பதை கேள்விப்பட்டு, மதுரையில் இருந்து தந்தத்தினால் செய்த பல்லக்கில் வந்து சுமார் 48 நாள்கள் தங்கி, இறைவன் அருளால் வயிற்று வலி நீங்கக்கண்டார். அதனால் அவர் வந்த தந்தத்தினால் ஆன பல்லக்கை இத்தல இறைவனுக்கு கொடுத்து விட்டு, மதுரைக்கு நடந்தே சென்றதாக தலவரலாறு கூறுகிறது. அது போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள திருமண மண்டபம் போலவே, பெரிய நாடகசாலை என்ற மண்டபமும் அமைத்தார்.
   வைத்தியநாதரை பிரிய மனமில்லாத திருமலை நாயக்கர், மதுரையில் இருந்தாலும் தினமும் வைத்தியநாதரின் உச்சிகால பூஜைகள் முடிந்த பிறகே, தினமும் உணவை உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டதாக தல வரலாறு கூறுகிறது.
   அந்த உச்சிகால பூஜைகள் தனக்குத் தெரிவதற்காக, ஸ்ரீ வில்லிப்புத்தூரில் இருந்து மதுரை வரையில் ஆங்காங்கே கல் மண்டபங்கள் அமைத்து, அவற்றில் பூஜை நேரத்தில் முரசுகள் (நகரா) முழங்கச்செய்து, அந்த ஒலி மதுரையை எட்டியவுடன் மனதில் வைத்தியநாதரை வழிபட்ட பிறகே! உணவை உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டதாகக் கூறுவர். இதற்கு சான்றாக இன்றும் வில்லிபுத்தூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல கல்மண்டபங்கள் இருப்பதைக் காணலாம்.
   ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 1கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
   - களக்காடு வ. மாரிசுப்பிரமணியன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai