Enable Javscript for better performance
தென்னாட்டைத் தெரிவு செய்த திருமாலே போற்றி! நீதிபதி இரா.சுரேஷ்குமார்- Dinamani

சுடச்சுட

  

  தென்னாட்டைத் தெரிவு செய்த திருமாலே போற்றி! நீதிபதி இரா.சுரேஷ்குமார்

  By DIN  |   Published on : 14th February 2020 03:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vm7

  தொல்காப்பியம் தொடங்கி இதுநாள் வரை தமிழ் மகள் நடந்து வந்த பாதை நெடியது. கடந்து வந்த தூரம் பெரியது. எங்கு தொடங்கியது யார் தோற்றுவித்தார் என் தமிழை என்று ஆராய்ந்தால் முடிவில்லா தொடக்கமாக அது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நாம் அறிந்திருக்கிற தமிழ் மொழி வரலாற்றின் இலக்கண, இலக்கியத் தொடக்கமாக அமைந்திருப்பது தொல்காப்பியம்"என்கிற காரணத்தால், "தொல்காப்பியம் தொடங்கி' என்று சொல்கிறோம்.
   கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை இறையருளின் உதவியால் ஏற்றம் பெற்றது தமிழ். ஞானப்பால் உண்ட சம்பந்தரில் துவங்கி சமயக் குரவர்கள்; அவரோடு இணைந்த நாயன்மார்கள் இறையைப் போற்றிப் பாடிய பாடல்கள் அழியா வரம் பெற்று அணி சேர்க்கின்றன தமிழுக்கு. அதே காலவெளியில் எம்பெருமான் பெருமாள் இம்மண்ணிற்கும் மொழிக்கும் அருளிய அதிசயத்தைக் கண்டு வியக்காமல் இருப்பவர்கள் எவரும் இலர்.
   வேண்டும் பொழுதெல்லாம் தானே அவதாரபுருஷராக அவதரித்த எம்பெருமான், தன்னுடைய அம்சங்களாக (கூறுகளாக) ஆழ்வார்களைப் படைத்ததன் நோக்கமென்ன? அதிலும் பிராட்டியின் அவதாரமாக ஆண்டாளை அவதரிக்கச் செய்ததன் நோக்கமென்ன?
   பன்னிரெண்டு ஆழ்வார்களும் வாழ்ந்த காலம் 7 முதல் 9 நூற்றாண்டுகள் என்று அறியப்படுகிறது. ஏறத்தாழ சமயக் குரவர்களும் நாயன்மார்களும் வாழ்ந்த காலம் அது.
   பொய்கையாழ்வாரில் தொடங்கி ஆழ்வார்கள் பன்னிருவரும் எம்பெருமானைப் பாடி திருவாய் மொழிந்தது எம் செந்தமிழில் என்பது சிறப்பிற்கெல்லாம் சிகரம். அவ்வாழ்வார்களால் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் எம்பெருமான் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கிறார் என்பது நாம் கொண்டிருக்கிற பெருநம்பிக்கை.
   108-இல் 106 திவ்யதேசங்களைக் கொண்டது இந்தப் புண்ணிய பூமியான பரதக் கண்டம். பரமபதமும், திருப்பாற்கடலும் மோட்சம் எய்துவோர்கள் கண்டு எம்பெருமானைச் சேவிப்பது, மிகுதி 106 திவ்ய தேசங்கள் இப்பாரத மண்ணில் நிலைபெற்றிருக்கின்றன.
   106 திவ்ய தேசங்களில் 93 தமிழ் கூறும் நல் உலகில் அமைந்திருப்பதும் அவற்றை மதுரகவியாழ்வார் தவிர ஏனைய ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருப்பதும் அங்கெல்லாம் எம்பெருமான் குடிகொண்டு அருள்பாலித்து வருவதும் வியப்பு கலந்த பேருண்மை.
   இந்த விஷயத்தை ஆராய முற்படும்போது நமக்கு ஒரு காரணத்தைச் சொல்லி இருப்பவர் "திருநரையூர் ஸ்தல வரலாறு' நூலை எழுதிய தஞ்சை ஸ்ரீ உ.வே.தாத்தாச்சாரியார். அவரை மேற்கோள் காட்டி அறிஞர்கள் அறிந்த ஆழ்ந்த கருத்தொன்று சொல்லப்படுகிறது.
   இங்கு ஓர் எடுத்துக்காட்டாக, நம்முடைய உயிரைப் பற்றிய தேடலில் இறங்கினோம் என்றால் "உயிரே கடவுள்' என்று சொல்லும் சித்தாந்தங்களும், சித்தரின் கூற்றுக்களும் நம்மை திகைப்பில் ஆழ்த்தும். அதனில் மனிதனின் எண்ஜாண் உடம்பில் அவனை இயக்கும் உயிர் எங்கு இருக்கிறது என்றால், வள்ளலார் ராமலிங்க அடிகள் "இதய அம்புயனே' என்று பாடி இதயமாகிய தாமரையில் உயிர் இருப்பதாகச் சொல்கிறார்.
   அவ்வுயிர் எங்கு இருக்கிறது என்ற தேடலில் திருமூலர் சொல்வது "எருஇடும் வாசர்க்கு இருவிரல் மேலே, கருஇடும் வாசர்க்கு இருவிரல் கீழே'" என்று பாடுகிறார்.

  மனித உடம்பில் உயிர் எங்கு இருக்கிறது என்ற தேடலுக்கு ஞானிகள் இப்படித் தாங்கள் கண்டுணர்ந்ததை விளக்கி இருக்கிறார்கள்.
   அது போல, இந்த உலக உருண்டையில் மனித ஜீவாதார சக்திக்குத் தேவையான ஒரு நரம்பு ஓர் இடத்திலோ அல்லது ஒரு பகுதியிலோ குறுக்காக ஓடிக் கொண்டிருக்குமாம். அதற்கு "தரீத்ரிசாரம்' என்று பெயர். இது அறிவியல் மேதை சர் ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு சக்தியின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
   அப்படிப்பட்ட "தரீத்ரிசாரம்' என்று சொல்லக்கூடிய மனித ஜீவாதாரத்திற்கான பகுதிகள் இந்தப் பூமிப் பந்தில் நிறைய அமையப் பெற்றிருப்பது நம் இந்திய தேசத்தில் அதிலும் குறிப்பாகத் தென்னாட்டில் இன்னும் குறிப்பாகத் தமிழ் கூறும் நல் உலகில். ஆகவேதான் எம்பெருமான் நிரந்தரமாகக் குடி கொண்டு அருள்பாலிக்கின்ற திவ்யதேசங்கள் 106-இல் 93 தென்னாட்டில் நமது தமிழ் கூறும் நல் உலகில் அமையப்பெற்றிருக்கிறது.
   திவ்யதேசங்கள் 93-உம் அமையப்பெற்றிருக்கிற நிலப்பரப்பையும், பன்னிரெண்டு ஆழ்வார்களும் தோன்றிய நிலப்பரப்பையும் நாம் நோக்குங்கால் ஒரு நிதர்சனமான உண்மையாகப்படுவது யாதெனில் எம்பெருமான் தன்னுடைய அம்சங்களாக ஆழ்வார்களைப் படைத்தது ஒருபுறம் வைணவம் செழிப்பதற்கு என்கின்ற காரணகாரியம் இருந்தாலும், மறுபுறம் அந்தப் படைப்பின் நோக்கத்திலே மேலும் ஒரு சிறந்த நோக்கமாக இருக்க வல்லது "தமிழ் தழைக்கவும்' என்பதே.
   ஏன் எம்பெருமான் தமிழ் தழைக்கும் நோக்கத்தையும் ஆழ்வார்கள் படைப்பினுள்ளே வைத்தார் என்பதற்கான காரணம், திருமழிசை ஆழ்வார் என்கிற திருமழிசைப் பிரானின் வரலாற்றில் அமைந்திருக்கிறது.
   ஆதி ஆழ்வார்கள் மூவரையும் கண்டு பேசி தெளிந்து பின் பொய்கை ஆழ்வார் தோன்றிய கச்சி (காஞ்சி மாநகர்) திருவெஃகா திருத்தலத்திலே எழுந்தருளியிருக்கிற பெருமானை திருமழிசை பிரான் சேவித்து வருகிறார். அங்கு, தான் உண்ட மிச்சப் பாலை அருந்தும் பேரு பெற்று அவர்கள் மூலமாக உருவான குழந்தை கணிகண்ணன் வந்து சேர்ந்து திருமழிசை பிரானோடு அவரின் தூய தொண்டனாகத் தன்னை இணைத்துக் கொள்கிறான்.
   அங்கே வயது முதிர்ந்த கிழவி ஒருத்தி திருமழிசை பிரான் தங்கியிருந்த இடத்தைத் தூய்மைப்படுத்திச் சேவை செய்கிறார். அந்தக் கிழவி திருமழிசை பிரானின் நல்வாக்குப் பெற்று இளமைப் பொலிவோடு திகழ்கிறாள். அவளைக் கண்ட தொண்டை நாட்டுப் பல்லவ மன்னன் மணமுடித்து அரசியாக்கிக் கொள்கிறான்.
   பின்னாளிலே அரசனுடைய இளமை போய் முதுமை வருகிறது. ஆனால், அரசியின் இளமை சிரஞ்சீவியாகத் தொடர்கிறது. அது அறிந்த அரசன் காரணம் வினவ, திருமழிசை பிரானின் கைங்கர்யத்தால் தான் இளமை பெற்ற வரலாற்றை அரசி எடுத்துரைக்கிறார்.
   அதுபோல் தனக்கும் இளமை வரவேண்டுமென்று எண்ணி, அங்கு வழக்கமாக யாசகம் கேட்டு வரும் கணிகண்ணனிடம் தன்னுடைய விருப்பத்தை அரசன் சொல்கிறார். கணிகண்ணன் மறுக்க, கோபம் கொண்ட பல்லவ மன்னன் கணிகண்ணனைக் கச்சி நகரை விட்டு வெளியேறப் பணிக்கிறான்.
   கணிகண்ணன் அரசனின் இச்செயலை திருமழிசை பிரானிடம் சொல்ல, அவரும், "அப்படியானால் நானும் உன்னுடன் வருகிறேன் எம்பெருமானையும் கூட்டிக் கொண்டு போகலாம்' என்று சொல்லி பெருமானுடைய திருத்தலத்தில்,
   கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
   மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
   செந்நாப்புலவன் யான்போகின்றேன் நீயுமுன்றன்
   பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்
   என்ற வெண்பா பாடி வேண்டி நிற்கிறார்.
   அன்றிரவு எம்பெருமான், திருமழிசை பிரான், கணிகண்ணன் மூவரும் காஞ்சி நகர் விட்டுச் செல்ல, அந்நகரில் மூதேவி குடிகொண்டு நகர் பொலிவிழந்து எல்லாம் எதிர்மறையாய் நடக்கத் தொடங்குகிறது. காரணத்தை அறிந்த பல்லவ மன்னன், தன் தவறுக்கு வருந்தி ஊருக்கு வெளியிலே இருக்கின்ற கணிகண்ணனையும் திருமழிசை பிரானையும் சந்தித்து மண்டியிட்டு வேண்டி, அவர்களை மீண்டும் கச்சி நகருக்கு அழைக்கிறார். அந்த வேண்டுகோளை ஏற்று கச்சி நகர் திரும்புவதற்கு முன் எம்பெருமானைப் பார்த்து,
   கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
   மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
   செந்நாப்புலவன் செலவொழிந்தேன் நீயுமுன்றன்
   பைநாகப் பாய்படுத்துக்கொள்
   என்று மீண்டும் வெண்பா பாடி, கச்சி நகர் வந்து திருவெஃகாவில் மீண்டும் எழுந்தருளச் சொல்கிறார் திருமழிசையார். பெருமானும் அவ்வாறே செய்ய, "யதோத்காரி' என்கின்ற "சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக' அவர் அன்றைக்குக் காட்சி தருகிறார்.
   இப்படி, "நாங்கள் போகின்றோம் கச்சி நகரை விட்டு நீயும் உந்தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு எங்களோடு வந்து விடு' என்று திருமழிசை பிரான் பாட, எம்பெருமான் அவர்களோடு வந்ததும், "மீண்டும் நாங்கள் கச்சி நகர் செல்கிறோம்; நீயும் உந்தன் பைந்நாகப் பாயில் படுத்துக் கொள்; மீண்டும் திருவெஃகாவிலே எழுந்தருள் செய்' என்று வெண்பா பாட, அவர் சொன்னவற்றை எல்லாம் சொன்ன வண்ணம் செய்து "யதோத்காரியாக'"எம்பெருமான் வீற்றிருக்கிறார் என்ற செய்தி திருமழிசை ஆழ்வாரின் வரலாற்றில் பதிவு பெற்றிருக்கிறது.
   இதிலிருந்து நாம் அறிவது திருமழிசை பிரான் வெண்பா பாடி திருமாலோடு பேசிய மொழி தமிழ் மொழி; அதன்படி எம்பெருமான் சொன்ன வண்ணம் செய்ததனால் தமிழ் மொழியை இறைமொழி என்று சொல்வதிலே என்ன தடை இருக்க முடியும்?
   இவ்வாறாக, எப்பொழுது தமிழ் தழைப்பது தடைபடுகிறதோ, அப்போதெல்லாம் இறைவழி தமிழ் தழைத்திருக்கிறது; செழித்திருக்கிறது; செம்மையுற்றிருக்கிறது. அதனால்தான் தென்னாட்டிலே அமையப்பெற்ற தமிழ் தழைக்கும் பகுதியில் வைணவம் செழிக்க, தனது அம்சங்களாகவும் பிராட்டியின் அவதாரமாகவும் பன்னிரு ஆழ்வார்களைப் படைத்துக் காட்டினார் பெருமாள் என்பது நம்மால் புரிதற்குரிய பேருண்மை ஆகும்.
   தென்னாட்டைத் தெரிவு செய்த திருமாலே போற்றி!
   எந்நாட்டையும் உய்விக்கும் எம்பெருமானே போற்றி! !


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai