Enable Javscript for better performance
நல்ல குடும்பம் அல்லாஹ்வின் அருட்கொடை- Dinamani

சுடச்சுட

  
  vm3

  நல்ல குடும்பம் அல்லாஹ்வின் அருளால் பெறும் பெரும் பாக்கியம். குடும்பத்தில் சுமுக சூழல் நிலவினால் குடும்பங்கள் இணைந்த சமூகம் சமுதாயம் கூடி வாழும். கூடி வாழ்வதால் தேடும் நன்மைகள் கைகூடும். அந்நன்மைகளால் பொன் விளையும் பூமியாக நம் நாடும் வளம் பெறும்; வாகை சூடும்.
   நம் அருளாகவும் அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறவும் நாம் அவருக்கு அவருடைய குடும்பத்தாரையும் அதைப் போன்றதையும் கொடுத்தோம் என்று எழில்மறை குர்ஆனின் 38-43 -ஆவது வசனம் கூறுகிறது. இந்த வசனம் அய்யூப் நபி குறித்தது. அய்யூப் நபிக்கு மனைவியையும் பிள்ளை செல்வத்தையும் அள்ளி வழங்கி எல்லாம் வல்ல அல்லாஹ் கண்ணியமாக வைத்தான் என்று விளக்குகிறது தப்ஸீர் அல்பஃவ்வி 310/3. குடும்பத்தில் ஒற்றுமை நிலவியது. குடும்பத்தினரோடு அய்யூப் நபியும் மகிழ்வாய் வாழ்ந்தார்கள். குடும்பத்தினரைக் காணும்பொழுது களிப்புற்றார்கள்; திருப்தி பெற்றார்கள். உள்ள உற்சாகத்தோடும் மன மகிழ்வோடும் இருந்தார்கள்.
   ஓர் ஆண் அவரின் குடும்பத்தின் மேய்ப்பாளர். அவர் அவரின் மேய்ச்சலைப் பற்றி கேட்கப் படுவார். ஒரு பெண் அவளின் கணவனின் வீட்டில் உள்ளவற்றிற்கும் குழந்தைகளுக்கும் மேய்ப்பாளர். அவள் அதைப்பற்றி கேட்கப்படுவாள்.
   ஒரு மனிதனுக்கு அமையும் சகோதர சகோதரிகளும் இறைவனின் அருட்கொடைகளே. அவர்கள் மகிழ்வான தருணங்களில் உடனிருந்து மகிழ்வைப் பெருக்குவர். வேதனை காலத்தில் வலியைப் பகிர்ந்து வேதனையை குறைப்பர். மூசா நபிக்கு ஹாரூன் நபி அத்தகு சகோதரராய் இருந்ததை 19-53 - ஆவது வசனம் நம் கருணையை கொண்டு அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அளித்தோம் என்று அறிவிக்கிறது.
   சகோதரத்துவத்தின் மிக முக்கிய பண்புகள். எடுத்ததற்கெல்லாம் கோபம் கொண்டு மனக் கசப்போடு பிரிந்து வாழாது ஒருவருக்குக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒத்துழைத்து ஒற்றுமையாய் வாழ வேண்டும். சோதனையான சமயங்களில் ஒருவர் மற்றவருக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். உடன்பிறந்தவரின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். சகோதரரின் கவலையை போக்க நீக்கமற நின்று ஆக்க வழிகளில் அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். அநிநியர்களுக்கு முன்னுரிமை தராது சகோதரர்கள் தங்களுக்கு இடையில் தக்க முறையில் ஆலோசித்து எடுக்கும் முடிவுகளின் விளைவுகளை விலாவாரியாக விவாதித்து பகிரும் கருத்துகளின் அடிப்படையில் அமையும் ஆன்ற சான்றுகளின்படி முயன்று முன்னேற வேண்டும்.
   அல்லாஹ் அமைத்து தரும் குடும்பத்தைச் சிதையாமல் சிதறாமல் பிரியாமல் பேணி காக்க வேண்டும். குடும்பம் சீராய் இயங்க இயன்றது அனைத்தையும் முயன்று முந்தி செய்ய வேண்டும். ஒருவர் செய்வார் என்று மற்றவர் பிந்துவது பிணக்கை உண்டாக்கி இணக்கத்தைக் குலைத்து விடும். ஒருவரின் உரிமையை மற்றவர் மதிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். இன்றைய அலைபேசி அறிவிப்பு போல தொடர்பு எல்லைக்கு வெளியே போய் விடக் கூடாது. குடும்ப நலனிற்காக தனித்தும் கூட்டாகவும் உழைக்க வேண்டும். இதனால் குடும்ப கௌரவம் காக்கப்படும். குடும்பத்தில் வளம் பொங்கும்; மகிழ்ச்சி பெருகும்.
   சகோதர சகோதரிகள் பாசத்தோடு பழகி பண்போடு அன்புடன் பரஸ்பரம் உதவி புரிய வேண்டும். குடும்பத்தின் சங்கையான நிகழ்வுகளில் கலந்து கலகலப்பாக்குவது போல சங்கடமான தருணங்களிலும் பொறுமையாய் ஒன்றாய் நின்று சங்கடம் நீங்கி மங்கலம் மலர உதவ வேண்டும். இதனால் குடும்பம் வலுவடையும்.
   குடும்பத்தில் அவரவரின் பொறுப்புகளை அவரவர் உணர்ந்து செயல்பட்டால் மகிழ்ச்சி எப்பொழுதும் மலர்ந்து மணம் வீசும். அத்தகு குடும்பம் சமூகத்தில் சகல மரியாதையையும் பெற்று மதிப்பிற்குரிய முன்னோடி குடும்பமாக முன் நிற்கும்.
   - மு.அ. அபுல் அமீன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai