பொருநை போற்றுதும்! 80 டாக்டர் சுதா சேஷய்யன்  

1906-7 ஆண்டுகளில், சுதேசி இயக்கத்தின் பதியன்கள், திருநெல்வேலிப் பகுதியில் ஆங்காங்கே வேர் விட்டிருந்தன. 1906 -ஆம் ஆண்டு அக்டோபர் 6 -ஆம் நாள், வ.உ.சிதம்பரனார்,
பொருநை போற்றுதும்! 80 டாக்டர் சுதா சேஷய்யன்  

கொந்தளித்துக் கொண்டிருந்த பொருநை
 1906-7 ஆண்டுகளில், சுதேசி இயக்கத்தின் பதியன்கள், திருநெல்வேலிப் பகுதியில் ஆங்காங்கே வேர் விட்டிருந்தன. 1906 -ஆம் ஆண்டு அக்டோபர் 6 -ஆம் நாள், வ.உ.சிதம்பரனார், தம்முடைய சுதேசி கப்பல் கம்பெனியை முறைப்படி பதிவு செய்து தொடங்கினார். இக்கம்பெனியின் தொடக்ககால வெற்றிகளால், ஆங்கிலேயர் பலர் மனம் கொதித்தனர். அப்போதைய சப்-கலெக்டரும் தூத்துக்குடி இணை மாஜிஸ்டிரேட்டுமான ஆஷ் துரை, சுதேசி கப்பல் கம்பெனியை ராஜதுரோகக் குற்றத்திற்காக தண்டிக்கவேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார். வங்கச் சிங்கமாக அறியப்பெற்றவரும், நாடெங்கிலும் சுதேசி இயக்கத்தை ஒருங்கிணைத்தவருமான தேசியவாதி பிபின் சந்திர பால், 1907-இல், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சுதேசியக் கருத்துகளை விதைத்தார். மதுரை மாவட்டத்தின் வத்தலகுண்டு என்னும் ஊரைச் சேர்ந்த சுப்பிரமணிய சிவா, 1908 ஜனவரியில் திருநெல்வேலியை அடைந்தார். வ உ சி-யும் சிவா-வுமாக இணைந்து நெல்லையின் பல்வேறு பகுதிகளில் சுதேசி எழுச்சிப் பேருரைகளை ஆற்றினர்.
 மேற்கூறிய காரணங்களால் தாமிரவருணியின் கரை முழுவதும் கொந்தளித்துக் கொண்டிருந்த நிலையில், சுதேசி எழுச்சியின் ஓரங்கமாக, 1908 -ஆம் ஆண்டு பிப்ரவரி 27 -ஆம் தேதி, தூத்துக்குடிப் பவழ ஆலையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மக்கள் ஒன்றிணைந்து விடக்கூடாது என்பதற்காக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 29 -ஆம் நாள், தூத்துக்குடிக்கு வருகை புரிந்த மாவட்டக் கலெக்டரும் மாஜிஸ்டிரேட்டுமான வின்ச் துரை, ஊரடங்கு உத்தரவை ரத்து செய்தார். வ உ சி-யும் சிவா-வும் தங்கள் கூட்டங்களைத் தொடர்ந்தனர்.
 இதற்கிடையில், வட நாட்டில், ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த பிபின் சந்திர பால், மார்ச் 9 -ஆம் நாள் விடுதலையாகிறார் என்னும் செய்தி கிட்டியது. மார்ச் 7-ஆம் தேதி நடைபெற்ற கூட்டமொன்றில், பிபின் பால் அவர்களின் விடுதலையை வெற்றி விழாவாகக் கொண்டாடப் போவதாக வ உ சி-யும் சிவா-வும் அறிவித்தனர். 7 -ஆம் தேதி மாலை வ உ சிக்குச் செய்தி அனுப்பிய கலெக்டர் வின்ச், அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தும்படி அறிவுறுத்தினார். கூடவே, திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி இருவருக்கும், சமீபத்தில் சுதேசி இயக்கத்தில் இணைந்திருந்த பத்மநாப ஐயங்காருக்கும் ஆணை அனுப்பினார்.
 மார்ச் 9 -ஆம் நாள் காலை - மூவரும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். மூவர்மீதும், குறிப்பாக வ உ சி மீது, ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்த வின்ச், "கொன்று விடுவேன்' "குத்தி விடுவேன்' என்றேகூட மிரட்டினார்.
 கொதித்துத் திரண்ட மக்கள்
 நீதிமன்றம் அன்றைய நாளுக்கு முடிவடைய, மூவரும் வெளியில் வந்தனர். பிபின் சந்திர பாலின் திருவுருவப் படத்தை யானை மீதேற்றி, ஊர்வலம் ஒன்று நெல்லை வீதிகளில் நடந்தது. இரவு சுமார் 9 மணியளவில், இந்த ஊர்வலம், பொருநைக் கரையிலுள்ள தைப்பூச மண்டபத்தை அடைய, மக்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று, எழுச்சி உரையொன்றை சிவா ஆற்றினார் (வ உ சி-யும் பத்மநாப ஐயங்காரும்கூட இக்கூட்டத்தில் உரையாற்றியதாகத் தெரிகிறது).
 அடுத்த நாள்; அதாவது, மார்ச் 10 -ஆம் நாள். தூத்துக்குடிக்குச் சென்ற மூவரும், பால் அவர்களின் உருவப் படத்தை ஏந்தி ஊர்வலத்தையும், தொடர்ந்து கூட்டத்தையும் நடத்தினர். அன்று மதியமே திருநெல்வேலி திரும்பி, நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் பங்கேற்றனர். அடுத்த நாளும் விசாரணை நடந்தது. ஒவ்வொரு நாளும், ஏதோ காரணத்தினால் விசாரணை இழுத்துக் கொண்டே சென்றது. சிறு சிறு குழக்களாகவும் கூட்டங்களாகவும் கூடிய மக்களின் அமைதியின்மையும் வளர்ந்தது.
 வெற்றி விழா ஊர்வலத்தில் தாங்களும் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்த பர்மா எண்ணெய்க் கம்பெனியின் ஊழியர்கள், 10 -ஆம் தேதியன்று மின்னல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 11- ஆம் தேதி, ஊராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
 11 -ஆம் நாள் மாலை, நீதிமன்றத்திற்கு எதிரிலேயே, பொருநைக் கரையில் கூட்டமொன்றில் பேசிய மூன்று பெருமக்களும், 12 -ஆம் நாள் காலை, விசாரணையின் தொடர்ச்சிக்காக நீதிமன்றத்தை அடைந்தனர். குற்றவியல் சட்டத்தின் புதிய பிரிவு ஒன்றின்கீழ், புதிய குற்றச்சாட்டுகளை வின்ச் முன்மொழிந்தார். விசாரணையானது ஏப்ரல் மாதத்திற்குத் தள்ளிப்போடப்பட்டு, ஜாமீனும் மறுக்கப்பட்டு, மூவரும் காவலில் வைக்கப்பட்டனர்.
 (தொடரும்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com