மாசியில் கயிலாசவாசியின் ஆசி!

சாவா மூவா வரம்வேண்டி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது, இவ்வுலகையே அழிக்கும் சக்திமிக்க ஆலகால விஷம் நிறைந்த ஒரு பானை முதலில் வந்தது.
மாசியில் கயிலாசவாசியின் ஆசி!

சாவா மூவா வரம்வேண்டி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது, இவ்வுலகையே அழிக்கும் சக்திமிக்க ஆலகால விஷம் நிறைந்த ஒரு பானை முதலில் வந்தது. அஞ்சி நடுங்கிய தேவர்கள் முக்கண்ணன் சிவனாரிடம் சென்று உதவி வேண்டினர். இத்தகைய விஷ தாக்கத்திலிருந்து அனைவரையும் காப்பாற்ற அந்த விஷத்தை தானே அருந்திய, ஈசன், பின்னர் அதனை தன் கழுத்தில் நிறுத்தி திருநீலகண்டன் ஆனார். இந்த பெருமைமிகு நாளே சிவராத்திரி எனப்படுகிறது.
 ஒருசமயம், பிரம்மாவும் விஷ்ணுவும் தன்னில் யார் பெரியவர் என்ற ஒரு கருத்து வேறுபாட்டில் சிவனாரை அணுகினர். இதற்கு ஓர் உபாயமாக விராட் சொரூபமாக ஒளிவடிவம் எடுத்து அடிமுடி காணா வகையில் லிங்கோத்பவராக பரந்து விரிந்து நின்றார் சிவனார். வராக உருவில் விஷ்ணு பூமியை குடைந்து கொண்டு சிவனாரின் பாதத்தை காணவும், அன்னப்பறவையாக உருவெடுத்து பிரம்மா, சிவனாரின் தலைமுகட்டை காணவும் சென்றனர்.
 விஷ்ணு தன் இயலாமையை ஒத்துக்கொண்டு மேலே வந்துவிட்டார். மேலே சென்ற பிரம்மாவோ பலகாத தூரம் சென்றும் சிவனாரின் முடி தெரியாததால்; அப்போது அங்கு அவரை கடந்து சென்ற தாழம்பூவை அணுகி "எங்கிருந்து வருகிறாய்' எனக்கேட்க; தாழம்பூவும் "சிவனாரின் தலையில் சூடப்பட்ட நான் பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன் என்றும்; தான் கிளம்பி வெகுநாள்கள் ஆகிறது' எனவும் கூறியது. இந்த சூழ்நிலையில் மேலே செல்வது சரியல்ல என பிரம்மா முடிவெடுத்து அந்த தாழம்பூவை தன் சாட்சிக்கு அழைத்தார். தாழம்பூவும் இதன் உள்விவரம் தெரியாமல் சரியென சிவனாரிடம் வந்து பொய்சாட்சி கூறியது. பெருங்கோபமுற்ற சிவன் சாபமிட்டார்.
 கும்ப (மாசி) மாதத்து பெளர்ணமியிலிருந்து 14 -ஆம் நாளில் வரும் திரயோதசி திதியில்; சிவனார் தன்னை உலகிற்கு முதன்முதலில் லிங்கத் திருமேனியாக காட்டிய நாளே மகாசிவராத்திரி நாளாகக் கொண்டாடப்படுகிறது. சுருங்கக்கூறின் புவனம் தோன்றிய நாள் அதுவே எனக் கருதப்படுகிறது.
 ஒரு வேடன் வேட்டையாடவும், வீட்டிற்கு விறகு சேகரிக்கவும் காட்டிற்குச் சென்றான். திசை தவறி திக்குத் தெரியாமல், பயங்கர விலங்குகள் நடமாடும் அடர்ந்த காட்டிற்குள்ளே சென்று விட்டான். திரும்பிப் பார்த்தபோது ஒரு புலி அவனை தொடர்வதைக்கண்டு அஞ்சி நடுங்கி ஒரு மரத்தின்மீது ஏறி உட்கார்ந்தான். அந்த புலியோ அம்மரத்தின் கீழேயே படுத்துவிட்டது. பகல் சென்றது, மாலை சென்றது. ஆனால் புலி நகர்ந்து செல்வதாய் இல்லை. இரவு வந்தது, வேடனுக்கோ பசி. தூங்காமல் இருக்க அந்த கிளையில் அமர்ந்து கொண்டு இரவு முழுதும் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே இருந்த புலியின் மீது போட்டுக்கொண்டே இருந்தான்.
 பொழுது புலர்ந்தது. ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி அந்த இலைக்குவியலை விலக்கிப்பார்த்தான் வேடன். ஆச்சரியம்... அங்கு புலி இல்லாமல் ஒரு சிவலிங்கம் இருந்தது! அவன் இருந்த மரமோ சிவனுக்குகந்த வில்வமரம். இந்த நிகழ்வு நாள் சிவராத்திரி ஆதலால், வேடனின் செயல் எதேச்சையான செயல் ஆனாலும்; அது ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடாகக் கருதப்பட்டு அவனுக்கு மோட்சம் கிட்டியது.
 இந்தப் புராண வரலாற்றுடன் சம்பந்தப்படுத்தி பேசப்படும் திருத்தலங்களில் ஒன்றுதான் சுவாமிமலையில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள வில்வாரண்யம் என்றழைக்கப்படும் திருவைகாவூர் ஆகும். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரப்பாடல் பாடப்பட்ட 274 சிவத்தலங்களில் இது 48 -ஆவது தலம்.
 சிவராத்திரி என்பது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகாசிவராத்திரி என்றும் ஐந்து வகைப்படும். சிவராத்திரி விரதத்தைப்பற்றி கூறும்போது மாசி மாத கிருஷ்ண பட்சத்தன்று வரும் மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழித்திருந்து விரதமிருந்தால்; சீர்செய்ய முடியாத பிரம்மஹத்தி தோஷத்தை வேரோடு அழித்திடும் வல்லமை இதற்குண்டு என சிவபுராணம் கூறுகிறது.
 இவ்வாண்டு, மகாசிவராத்திரி நன்னாள் பிப்ரவரி 21-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை வருகிறது.
 - எஸ். எஸ். சீதாராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com