Enable Javscript for better performance
அறிவாற்றலை அதிகரிக்கும் சேந்தமங்கலம் அகத்தீஸ்வரர்!- Dinamani

சுடச்சுட

  

  அறிவாற்றலை அதிகரிக்கும் சேந்தமங்கலம் அகத்தீஸ்வரர்!

  By DIN  |   Published on : 21st February 2020 11:46 AM  |   அ+அ அ-   |    |  

  vm3

  ராமன், ராவண வதம் நிகழ்த்திய, தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினார். சிவலிங்க மூர்த்தத்தைக் கொண்டு வருவதற்காக அனுமனை வடதிசைக்கு அனுப்பினார். அனுமன் சிவலிங்கம் கொண்டு வருவதற்கு தாமதமானது. எனவே, சீதை மணலால் வடித்த சிவலிங்க மூர்த்தத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்துவிட்டார். சற்று தாமதமாக அனுமன் கொண்டு வந்த சிவலிங்க மூர்த்தத்தை அனுமனின் மனம் நோக்கக்கூடாது என்பதற்காக கருவறைக்கு வெளியில் பிரதிஷ்டை செய்ததுடன், முதலில் அந்த லிங்கத்துக்கே பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்ற நியதியையும் ஏற்படுத்தினார்.
   இதுபோன்று, இரண்டு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்புக்குரிய மற்றொரு தலம் புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பளுவஞ்சியில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் ஆகும். ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டது ராமபிரான் என்றால் இங்கே சேந்தமங்கலத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டவர், ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதய மகா மந்திரம் உபதேசித்த அகத்தியர். கயிலை நாயகனின் உத்தரவின்படி, தென்திசை பயணம் வந்த அகத்தியர் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட எண்ணற்ற தலங்கள் இருந்தாலும், இந்தத் தலத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இங்கே அகத்தியரின் நாம ஜபத்தால் ஈசன் சுயம்புவாகத் தோன்றி அருள்புரிந்த தலமாகும்.
   சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய முகூர்த்தம் குறித்தாயிற்று! சிவலிங்க மூர்த்தம் எடுத்துவர, அடியார்களையும் அனுப்பியாயிற்று. ஆனால் இயற்கைச் சீற்றத்தின் காரணமாக குறித்த நேரத்துக்குள் சிவலிங்கம் வந்து சேரவில்லை. அகத்தியர் பொறுமையுடன் வில்வ தளங்களைச் சமர்ப்பித்தப்படி சிவ சஹஸ்ர நாமத்தை ஜபம் செய்தார். அகத்தியர் செய்த நாமஜபத்தின் பலனாக சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றினார். மனம் மகிழ்ந்த அகத்தியர் சிவலிங்க பிரதிஷ்டையுடன், அம்பிகை அகிலாண்டேஸ்வரியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
   அதே நேரம், அடியார்களும் சிவலிங்க மூர்த்தம் கொண்டு வந்தனர். அவர்கள் மன வருந்தக்கூடாது என்பதற்காக, அகத்திய மகரிஷி அவர்கள் கொண்டு வந்த சிவலிங்க மூர்த்தத்தையும் கருவறைக்கு வெளியில் பிரதிஷ்டை செய்து வழிபடச் செய்தார். சிறப்புமிக்க இந்தத் திருக்கோயிலில் ஒரு காலகட்டத்தில் நித்திய பூஜைகள் கூட நடைபெறாத நிலை ஏற்பட்டுவிட்டது.
   சிவ சஹஸ்ரநாமத்தின் மகிமையால் சுயம்வாகத் தோன்றிய ஈசன் அருள்புரியும் இந்தத் திருக்கோயிலுக்கு வந்து, சிவ சஹஸ்ரநாம பாராயணமும், அர்ச்சனையும் செய்து இறைவனை வழிபட்டால், எல்லா தடைகளும் நீங்கி, வாழ்க்கையில் எண்ணிய எண்ணம் எல்லாம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் சிறு குழந்தைகளுக்கு கல்வியில் ஈடுபாடு குறைந்திருந்தால் இக்கோயிலில் வந்து வழிபடுகிறார்கள். தேர்வுக்கு போகும் முன்பு இங்குள்ள ஈசனை வேண்டி நேர்த்திக்கடன் வைத்து சென்றால் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெறுவார் என்பது ஐதீகம். அப்படி வெற்றி பெற்றவர்கள் தங்களுடைய நேர்த்திகடனை, இறைவனுக்கு அபிஷேகம் செய்து நிறைவு செய்கிறார்கள்.
   சுவாமி கோயில் கருவறை, மகா மண்டபம், உபானம், ஜகதி, முப்பட்டைக் குமுதம், கண்டம், பட்டி கண்டம், வேதிகைசுவர், போதிகை எழுதகம், பிரஸ்தரம் வரை கருங்கல் திருப்பணியாகவும், பிரஸ்தரத்திற்கு மேலே சுதையாலான இருதள விமானத்தை உடையதாகவும் உள்ளது. கருவறை தெற்கு தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்திக்கு தனிமண்டபம், கருவறை பின்புற தேவகோட்டத்தில் அண்ணாமலையார், வடபுற தேவகோட்டத்தில் பிரம்மா நின்ற நிலையிலும் உள்ளார்.
   இக்கோயிலின் மகாமண்டபதிற்கு வெளிப்புற சுவரில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியாண்டு பொறித்த கல்வெட்டு உள்ளதாலும், போதிகைகள், கருவறை சுவர் அரைத்தூண்களின் வடிவமைப்பு ஆகியன பிற்கால பாண்டியர் கலைப்பாணியில் அமைந்துள்ளதாலும் இக்கோயில் கி.பி. 12 அல்லது 13 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கோயிலாகும்.
   முன்பு, இடிந்து கிடந்த கோயிலை திருப்பணி செய்து, மூலப்பிள்ளையார், சுப்பிரமணியர்-வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர், காலபைரவர் ஆகிய பரிவாரத் தெய்வங்கள் அமைத்துள்ளனர். கருவறையில் தான்தோன்றிலிங்கம் உள்ளது. கருவறைக்கு முன்பு துவாரபாலகர் இருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வார் சிறப்பு பெற்றவராக இங்கே திகழ்கிறார். அதேப்போன்று, ஒரே சந்நிதியில் இரட்டைப்பிள்ளையார் நாகரோடு காட்சி அளிக்கிறார்.
   கோயிலின் வாயிலில் பிற்காலச் சோழர் கலைப்பாணியில் ஆவுடையார்லிங்கம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் தினந்தோறும் ஒரு காலப் பூஜைகள் மட்டும் நடைபெறுகிறது. 21-2-2020 - மகாசிவராத்திரி விழாவில் நான்கு கால பூஜைகளும் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
   வழித்தடம்: புதுக்கோட்டையில் இருந்து 5, 17, 28 ஆகிய எண்கள் கொண்ட நகரப்பேருந்துகளில் மேலப்பளுவஞ்சி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயிலை அடையலாம்.
   தொடர்புக்கு: 94437 12421/ 94454 19432.
   - பொ.ஜெயச்சந்திரன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai