நாகூர் நாக நாயகன்!

புன்னாகவனம் என்னும் பகுதியில் சம்புபத்தன் எனும் அந்தணனின் ஐந்து வயது மகன் விளையாடிக் கொண்டிருந்தான்.
நாகூர் நாக நாயகன்!

புன்னாகவனம் என்னும் பகுதியில் சம்புபத்தன் எனும் அந்தணனின் ஐந்து வயது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அரவுகளின் அரசனான நாகராஜன் தன் மனைவிகளுடன் கூடி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். அதை அந்த சிறுவன் பார்த்துவிட்டதால் வெகுண்ட நாகராஜன், சிறுவனைக் கடிக்க, அச் சிறுவன் மரணமடைந்தான். தன் ஞான சக்தியால் உணர்ந்த சம்புபக்தன் நாகராஜனுக்கு "நீ உன் நாகஉலகை விட்டு அகன்று அறிவும், வலிமையும் இழந்து தனிமையில் பூலோகத்தில் உழல்வாய்' என சாபமிட்டான் .
 தன் தவறை உணர்ந்த நாகராஜன் தன் சாபத்திற்கு விமோசனம் கேட்டார். ஆயிரம் ஆண்டுகள் பூவுலகில் உழன்று உன் தந்தை காசியபரைக் கண்டு வணங்கி, ஆசி பெற்று சாபம் தீர்ப்பாய் என கூறினான். மேலும் "காஸ்யபர் மாசி மாத மகாசிவராத்திரியில் முதற்காலம் கும்பகோணம் வில்வவனத்தில் உள்ள நாகநாத சுவாமியையும்; இரண்டாம் காலம் திருநாகேஸ்வரம் சண்பகவனத்தில் உள்ள நாகநாதரையும்; மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் வன்னிவனத்தில் உள்ள பாம்புரநாதரையும்; நான்காம் ஜாமத்தில் புன்னாகவனம் எனப்படும் நாகூர் நாகநாதரையும் கண்டு வணங்கி சிறப்பு வழிபாடு நடத்தி வணங்க சிவபெருமான் காட்சிதர, அந்நேரம் வழிபட்டு உன் சாபம் நீங்கி விமோசனம் பெற்று முக்தி அடைவாய்' என்றார்.
 அதன்படி, மகாசிவராத்திரியன்று வழிபட முதல் 3 காலங்களில் 3 இடத்திலும் வழிபட்டு 4 -ஆம் காலத்தில் நாகூர் நாகநாதரை வணங்கினான். சிவபெருமான் சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு காட்சி தந்து போதுமான வலிமையையும் வேறு தேவையான நலன்களையும் வழங்கி சாபவிமோசனம் தந்தார். நாகராஜன் பூஜித்து வணங்கியதால் சுவாமி நாகநாதர் என்றும்; அம்பாள் திருநாகவல்லி என்றும்; புன்னாகவனம் நாகூர் எனவும் வழங்கப்பட்டது. இதன் வரலாறு தொன்மையானது.
 ஒரு புன்னைக் கனியை நாரை ஒன்று கெளவிக் கொண்டுவானில் பறந்து சென்றது. அதை கண்ட மற்றொரு நாரை அக்கனியை அதன் வாயிலிருந்து தான் பறிக்கச் சண்டையிட்டது. அந்தச் சண்டையில் நாரை வாயிலிருந்த கனி தவறித் தரையில் விழுந்து மரமாய் முளைத்தது. அந்த மரத்தின் வடபுறம் ஒரு லிங்கத் திருமேனி பூமியிலிருந்து முளைத்து எழுந்தது. அவ்வாறு தோன்றிய சுயம்பு மூர்த்தியே நாகநாத சுவாமி ஆகும்.
 இத்தலத்தை பிரம்ம தேவன் பூசித்ததால் பிரமாபுரம் எனப்பெயர் பெற்றது. சந்திர தீர்த்தம் வாழ்வை வளமாக்கும் சந்திரனின் அமுதக் கலைகள் நிரம்பியுள்ளதால் தீர்த்தம் சந்திரதீர்த்தம் எனப்படுகிறது. உருத்திர நதி எனவும் அகத்தியக் காவேரி என்று புகழப்படும் வெட்டாறு நதி ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் சிறப்புற்று, தில்லைக்கு நிகரான சிறப்புடையது எனவும் போற்றுப்படுகிறது.
 கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கோயில். சுவாமிக்கு வலது புறத்தில் உற்சவர் சந்திரசேகரர், கல்யாண சுந்தரர், தியாகராஜர், இடது புறத்தில் அம்பாள் நாகவல்லி, காட்சி கொடுத்த நாயனார், நடராஜர், ஐயப்பன் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளிலும், உட்பிரகார வலது புறத்தில் ஜூரதேவர், தட்சிணாமூர்த்தி, நாககன்னிகள், வலம்புரி விநாயகர், மேற்கில், கன்னி ராகுபகவான், ஐவேலி நாதர், சுப்பிரமணியர், தத்புருஷலிங்கம், மகாலட்சுமி, நால்வர், இடது புறத்தில் பிரம்மா, துர்கை, காசி விஸ்வநாதர், நர்த்தனவிநாயகர், சனீஸ்வர பகவான் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் அருள்கின்றனர்.
 இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் கன்னி மூலையில் ராகுபகவான் விமானம், மண்டபத்துடன் தனி சந்நிதியில், நாகவல்லி, நாககன்னியருடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இத்திருக்கோயிலில் நவக்கிரகங்கள் எல்லாம் சமப்பிரதிஷ்டை எனப்படும் ஒரே நேர்க்கோட்டில் நாகநாதரை நோக்கி வணங்கி அமைந்துள்ளமை தனிச்சிறப்பாகும்.
 இந்த கோயிலில் ஆனி மாத பௌர்ணமியில் சந்திரன் 10 நாள்களும், மாசி மாதம் தீர்த்தவாரி நடத்தி தோஷம் நீங்கி பிரமோற்சவம் செய்து வழிபட்டு தோஷம் நீங்கிய சிறப்பு வாய்ந்த தலம். இவ்வூரில் யாரையும் நல்லபாம்பு தீண்டியது கிடையாது என்று கூறப்படுகிறது. மாறாக, நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் என அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தியாவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தோஷம் நீங்க பிரார்த்தனை செய்கின்றனர்.
 இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி 4-ஆம் காலம், வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வாண்டு, மகாசிவராத்திரி 4 -ஆம் காலம், பிப்ரவரி 22 -ஆம் தேதி, நாகநாதருக்கும் நாகவள்ளி அம்பாளுக்கும் அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து காட்சி கொடுத்த நாயனார் ரிஷபாரூடராய் பிரகாரத்தில் நாகராஜாவிற்கு காட்சி அருளுவார். நாகராஜன் வணங்க அவனது தோஷம் நீங்கி, அவருக்கு பரிவட்டப்பட்டு கட்டி திருநீறு அளித்து காத்தருளுவார். இந்நிகழ்வை கண்டு தரிசிக்கும் பக்தர்களின் எப்பேர்ப்பட்ட தோஷமும் நீங்கி சகல நலன்களும் பெறுவார்கள் என்பது ஐதீகமாகும்.
 தொடர்புக்கு: 94436 22235/
 95665 70363.
 - ஆர்.அனுராதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com