விந்தைமிகு விண்வெளி சிந்தனை

விந்தைமிகு விண்வெளி சிந்தனை

அந்தமும் ஆதியும் இல்லா இறைவன் எந்த முன் மாதிரியும் முன் உதாரணமும் இன்றி விந்தைமிகு விண்வெளியை அமைத்து அகில மக்கள் பயன்பாட்டிற்கு வசப்படுத்தி கொடுத்திருப்பதைச் சிந்தனை செய்ய

அந்தமும் ஆதியும் இல்லா இறைவன் எந்த முன் மாதிரியும் முன் உதாரணமும் இன்றி விந்தைமிகு விண்வெளியை அமைத்து அகில மக்கள் பயன்பாட்டிற்கு வசப்படுத்தி கொடுத்திருப்பதைச் சிந்தனை செய்ய செப்புகிற செம்மறை குர்ஆனின் கூற்றை ஆய்வோம்.
 சிந்திப்பது பற்றிய சீர்மிகு குர்ஆனின் சிறப்பான வசனம் 7-185 வானங்கள் பூமியில் உள்ள ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் பல பொருள்களையும் அவர்கள் பார்க்கவில்லையா? என்று வினவுகிறது. வானங்கள் பூமியின் ஆட்சி அதிகாரங்களைப் பார்ப்பது என்பது அல்லாஹ் அவற்றில் அடங்கியுள்ள உண்மைகளைச் சிந்தித்து உணரவேண்டியதே. அல்லாஹ்வின் அறிவை மிகைக்கும் அற்புத அத்தாட்சிகளை உணர வேண்டும் என்று விளக்குகிறது தப்ஸீர் அத்தப்ரீ 191/2 . வானங்களில் உள்ள படைப்புகளில் அறிவை ஈர்க்கும் அற்புத அத்தாட்சிகள் உள்ளன. அறிஞர்கள் அறியவேண்டிய ஆய்வுக்குரிய நுட்பங்கள் நிறைந்துள்ளன. இவற்றை அறிய இகம் காக்கும் இறைவனின் அச்சம் வலுவடையும்; மகத்துவம் புலப்படும்.
 இப்ராஹீம் உறுதியான நம்பிக்கை உடையவர் ஆவதற்காக வானங்களிலும் பூமியிலும் உள்ள ஆட்சிகளை நாம் அவருக்குக் காண்பித்தோம் என்று ஏக இறைவன் இயம்பியதை 6-75 -ஆவது வசனம் எடுத்துரைக்கிறது. வானங்களையும் பூமியையும் அவற்றில் உள்ளவற்றையும் அவைகளின் இயக்கத்தையும் ஊன்றி உணர்ந்து ஆய்ந்து அறிவதற்காக இப்ராஹீம் நபி அவர்களுக்குக் காட்டியதை அறிவிக்கிறது இந்த வசனம். 3-91 -ஆவது வசனம் நிலையிலும் இருப்பிலும் விலாப்புறம் படுத்தபடியும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதைச் சிந்திக்கின்றனர். எங்கள் இறைவனே இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிக தூயவன். வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! என்று சிந்தித்து செப்புவதை அறிவிக்கிறது. இவர்கள் இப்படி சிந்தித்ததின் விளைவே இன்றைய விண்வெளி ஆராய்ச்சி.
 45-13 -ஆவது வசனம் வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் அல்லாஹ் அவனின் அருளால் உங்களுக்குக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். கவனித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் படிப்பினைகள் உள்ளன என்று உரைக்கிறது. பூமியில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பாக வானம் முகடாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப்பாதுகாப்பால் மக்களின் வாழ்வு நிலையாக அமைகிறது. வாழ்வாதாரங்கள் வானத்தில் இருந்து கிடைக்கின்றன. 14- 33 -ஆவது வசனம் சூரியனையும் சந்திரனையும் ஒழுங்காக இயங்க வைத்து இரவையும் பகலையும் மக்கள் வசதிக்காக செய்தான் என்று செப்புகிறது.
 எவ்வித உதவியும் இன்றி எம் ஆற்றலால் வானத்தை அமைத்து விசாலமாக்கினோம் என்ற ஏகன் அல்லாஹ்வின் கூற்றை எடுத்துரைக்கிறது 51-47 -ஆவது வசனம். அல்லாஹ்வின் ஆற்றலால் படைக்கப்பட்ட வானத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் பூமியில் இல்லை. உயரமாக எவ்வித ஆதாரமும் இன்றி எற்படுத்தினான் ஏக இறைவன் என்று விளக்கம் அளிக்கிறது தப்ஸீர் இப்னு கதீர் 424/7. 31-10 ஆவது வசனம் வானங்களைத் தூண்கள் இன்றி படைத்திருக்கிறான். நீங்கள் பார்க்கிறீர்கள், பூமி உங்களைக் கவிழ்த்து விடாதிருக்க மலைகளை நிறுத்தி பல உயிரினங்களையும் அதில் பரப்பினான். வானிலிருந்து மழையை பொழிவித்து பயிர்களை முளைக்கச் செய்தான் என்று செப்புகிறது. 79-27, 28- ஆவது வசனங்கள் அல்லாஹ்தான் வானத்தைப் படைத்தான். அவனே அதன் முகட்டை உயர்த்தி அதனை ஒழுங்கு படுத்தினான் என்று பகர்கின்றன.
 வானத்தை உயரமாய் கட்டமைத்தான். அளவிட முடியாத தொலைவில் வைத்தான். நம் இயல்பான கணிப்புகளுக்கு அப்பாற்பட்டதாக அமைத்திருக்கிறான் என்று விளக்குகிறது. தப்ஸீர் இப்னு கதீர் 316/8. 79-28 -ஆவது வசனத்தில் வரும் ஸம்ரு என்னும் அரபி சொல் ஒரு பொருளின் மிக தாழ்ந்த அடிப்பகுதியிலிருந்து உயர்ந்த மேற்பகுதி வரை அளப்பதைக் குறிக்கிறது. அளவிட முடியாத உயரத்தில் வானம் இருப்பதை இயம்புகிறது. அல்லாஹ் ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தான். அந்த அல்லாஹ்வின் படைப்பில் நீயாதொரு ஒழுங்கீனத்தையும் காண மாட்டாய்.
 மற்றொரு முறை பார். அதில் ஏதேனும் பிளவைக் காண்கிறாயா என்று கேட்கிறது 67-3 -ஆவது வசனம். அல்லாஹ் வானங்களை ஒவ்வொரு அடுக்காக கட்டமைத்தான். அவற்றில் எந்த வேறுபாடோ ஏற்றத் தாழ்வோ குறைகளோ பாதிப்புகளோ குழப்பமோ இல்லாத வகையில் வைத்திருக்கிறான். பல்வேறு கோளங்களையும் ஒளிவீசும் நட்சத்திரங்களையும் அந்த வானங்களில் வைத்திருக்கிறான். ஏழு வானங்களும் அவற்றில் அமைந்துள்ள நட்சத்திரங்களும் பிரமாண்டமானவை. சூரியன், சந்திரன் பிற கிரகங்கள் பூமியை விட உருவத்தால் மிகப் பெரியவை. பலவகை பிரகாசங்களும் அற்புதங்களும் நிரம்பியவை. ஒப்பிடுகையில் பூமியில் புலப்படும் அற்புதங்கள் அற்பமானவை. ஏழு வானங்களில் உள்ள நட்சத்திரங்கள், ஒரு விநாடியில் பல லட்சம் தொலைவில் சஞ்சரித்தாலும் ஒன்றோடொன்று மோதி கொள்வதில்லை. எத்தனை வழி சாலைகள் அமைத்து சகல வசதிகளைச் செய்து வழியை விசாலமாக்கினாலும் விபத்துகள் குறையவில்லை. ஆபத்துகள் அகலவில்லை. இந்நிகழ்வும் நினைவில் பதித்து சிந்திக்கத் தக்கது.
 நிச்சயமாக, நாம் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களைப் பார்ப்பவர்களுக்கு அதனை அலங்காரமாகவும் ஆக்கி வைத்தோம் என்று அல்லாஹ் அறிவிக்கிறான் 15-16- ஆவது வசனத்தில். நட்சத்திரங்கள் வானத்தின் அழகு. இருள்சூழும் சமயங்களில் தரையிலும் கடலிலும் உரிய வழியைக் கண்டு செல்ல இந்த நட்சத்திரங்கள் வழிகாட்டிகள் என்று விளக்கம் தருகிறது தப்ஸீர் அத்தப்ரீ 123/ 23. 16-16 -ஆவது வசனம் அடையாளங்களைக் கொண்டும் நட்சத்திரங்களைக் கொண்டும் தங்கள் வழியை அறிந்து கொள்கின்றனர் என்று உறுதி செய்கிறது. காடுகள் மலைவழி செல்வோர் காலத்தையும் திசைகளையும் தெரிந்து நேர்வழியில் செல்ல நட்சத்திரங்களைப் படைத்தான் பாராளும் அல்லாஹ்.
 வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் மட்டுமே அறிவான். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ள அறிவியல் அறிஞர் ஒருவர் கூறுகிறார். வானத்தில் எண்ணற்ற விண்மீன் வளிமண்டலங்கள் (கேலக்ஸி) உள்ளன. ஒரு விண்மீன் வளிமண்டலம் என்பது அதனைச் சூழ்ந்து அமைந்திருக்கும் நட்சத்திரங்களையும் கோள்களையும் உள்ளடக்கியது. நமது பால்வெளி விண்மீன் (மில்கி வே கேலக்ஸி) வளிமண்டலத்தில் மட்டும் சூரியனைச்சுற்றி பல ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன.
 ஒளிரும் வானத்தில் ஒளிந்துள்ளதைத் தெளிந்து ஆய்ந்து அறிந்து புரிந்து பூரணமாய் பயன்பெற முயலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி வெற்றியுற உற்ற உதவிகள் புரிவோம். உத்தமன் அல்லாஹ்வின் அருளையும் நித்தமும் தொழுது இறைஞ்சுவோம்.
 - மு.அ.அபுல் அமீன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com