மகாசுவாமியின் மனதில் மலர்ந்த மந்திர்!

உலகில் உயிர்கள் உய்ய வேண்டி, இன்புற வேண்டி ஞானக்கடலாகத் திகழும், சிவபெருமான் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆனந்தமாக கூத்தாடுகிறார்.
மகாசுவாமியின் மனதில் மலர்ந்த மந்திர்!

உலகில் உயிர்கள் உய்ய வேண்டி, இன்புற வேண்டி ஞானக்கடலாகத் திகழும், சிவபெருமான் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆனந்தமாக கூத்தாடுகிறார். பஞ்ச பூதத் தலங்களில் ஆகாசத்தைக் குறிக்கும் தலமான சிதம்பரத்தில் தான் இந்தத் தாண்டவம் சதாசர்வகாலமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. தில்லையில் இருப்பது போன்றே அம்பலவாணருக்கு ஓர் ஆலயம் மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் அமைந்துள்ளது.
 புனேவிலிருந்து சுமார் 112 கி.மீ. தொலைவில், சதாராவில் உள்ள இந்த ஆலயம் ‘ஸ்ரீ உத்தர சிதம்பர நடராஜ மந்திர்' என்று சிறப்பித்து அழைக்கப்படுகின்றது. அனைத்து விதத்திலும் சிதம்பரத்தைப் போலவே சிறிதும் வழுவாமல் அதே கட்டட பாணியுடன் சாந்நித்யத்துடன் திகழும் இந்த ஆலயம் அமைவதற்கான எண்ணம், இன்றும் பிருந்தாவன வாசியாய் இருந்து அருளாட்சி நடத்தும் காஞ்சி ஸ்ரீ மகாசுவாமிகள் மனதில் உதித்ததாகும்.
 1933 -ஆம் வருடம் காஞ்சி மகாசுவாமிகள் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்திற்கு விஜயம் செய்தது காஞ்சிமட வரலாற்றில் பெரிதாகப் பேசப்படுகின்றது. அவ்வமயம், தில்லையைப் போன்றே மற்றொரு ஆலயம் அமைக்க விருப்பம் கொண்டார் மகான், ஆனால் இது சாத்தியமாவதற்கு சுமார் 50 ஆண்டுகள் பிடித்தன.
 தன் பாதயாத்திரை விஜயத்தின் ஒரு பகுதியாக 1980 - 81 வருடங்களில் மஹாராஷ்டிராவில் உள்ள சதாராவில் முகாமிட்டிருந்தார் ஆசார்யாள். அவ்வமயம், சாமாண்ணா என்ற பக்தர் ஏதாவது ஓர் ஆலயம் அமைய வேண்டி தானமும், திரவிய சகாயமும் பெருமளவில் அளிக்க மிகுந்த ஆவல் மிக்கவராய் மகானை அணுகினார்.
 உடனே மகானும் ஸ்ரீ நடராஜர் ஆலயம் அமைக்கும் தன் பல நாள் அவாவை வெளிப்படுத்தினார். தானமாக கொடுத்த நிலம் சதாராவில் அமைந்ததும் ஒரு விதத்தில் நல்லதாய் போயிற்று. ஏனென்றால் மாவீரர் சத்ரபதி சிவாஜி ஆண்ட புண்ணிய பூமி அது. அந்த தன்மானச் சிங்கத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த நடராஜர் ஆலயத்தை அர்ப்பணிக்க மகாசுவாமிகள் முடிவெடுத்ததில் வியப்பு ஒன்றுமில்லை.
 இந்த ஆலயத்தின் முதல் கும்பாபிஷேக வைபவம் 1985-ஆம் ஆண்டு பூஜ்ய ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருக்கரங்களினால் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2003 -ஆம் ஆண்டு இரண்டாவது மகாகும்பாபிஷேகமும் அவராலே நடத்தப்பட்டது.
 இந்த ஆலயத்தின் ஐந்து அடுக்கு ராஜகோபுரங்கள் அற்புத அழகுடையவை. இதில் ஒரு தேசிய ஒற்றுமையும் உண்டு. ஆம், மேற்கு ராஜகோபுரம் அமைய உதவி செய்தது மகாராஷ்டிரா அரசு. வடக்கு ராஜகோபுரம் ஆந்திர அரசால் கட்டப்பட்டது. கிழக்கு ராஜகோபுரத்தை கர்நாடக அரசும், தெற்கு ராஜகோபுரத்தை தமிழக அரசும் கட்டிக் கொடுத்தன. நான்கு பக்க கோபுர வாயில்களுக்கான தேவையான மரங்களை அளித்து உதவி செய்தது கேரள அரசு.
 விநாயகர், மூலநாதேஸ்வரர் (சிவன்), அம்பாள், ஆதிசங்கரர் மற்றும் அனைத்து கோஷ்ட தெய்வங்களின் சந்நிதிகளும் அழகுற இங்கு அமைந்துள்ளன. தில்லை கோவிந்த ராஜர் சந்நிதிக்குப் பதில் ஸ்ரீராதாகிருஷ்ண மூர்த்தி விக்ரகங்கள் பிரதிஷ்டையாகி உள்ளது சிறப்பு. சிதம்பரம் போலவே இந்த ஆலயத்தில் சிறப்போடு விளங்குகிறார் நடராஜர். இவருக்கு (18 புராணங்களைக் குறிக்கும் வகையில்) 18 தூண்களுடன் மண்டபம் (கனக சபை) அமைந்துள்ளது. ஆறு சாஸ்திரங்களைக் குறிக்கும் வகையில் தனியாக ஆறு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் நடுப்பகுதியில் 12 ராசிகளும், சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. நடராஜனின் பஞ்சலோகத் திருமேனி சுமார் நான்கரை அடி உயரம் உள்ளதாய் சிவகாம சுந்தரியோடு உள்ளது. ஆனந்த நடனக் கோலத்தில் காட்சியளிக்கிறார் இந்த அம்பலவாணர். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களின் பஞ்சலோக திருமேனிகளும், ஐயப்பன் சந்நிதியும், ஆலயத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
 மரகத லிங்கம், பட்டுத்திரையால் மூடப்பட்ட சிதம்பர ரகசியம் போன்றவற்றை தில்லையை அடுத்து இங்குதான் தரிசிக்க முடியும்.
 ஸ்ரீ உத்தர சிதம்பரம் நடராஜ மந்திர் டிரஸ்ட், சதாரா என்ற அமைப்பின் மூலம் ஆலய நிர்வாகங்கள் தகுந்த டிரஸ்டிகளைக் கொண்டு வெகு சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கே உரிய ஆண்டிற்கு ஆறு அபிஷேகங்களில் ஒன்றான "ஆருத்ரா அபிஷேக' வைபவம் ஜனவரி 10 -ஆம் தேதி அதிகாலையில் நடைபெறுகின்றன. இந்த விழா ஜனவரி 5 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகின்றது. ஜனவரி 9 -ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் ரதோத்ஸவம் நடைபெறுகிறது. அன்று நடராஜர் சிவகாமி அம்மன் அலங்காரத்துடன் வீதி உலா வருவர்.
 தற்போது மூன்றாவது கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டியுள்ளதால் பல்வேறு திருப்பணி வேலைகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமியின் அனுக்கிரகத்துடனும் அவரது வழிகாட்டுதலுடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த உன்னத திருப்பணி கைங்கர்யத்தில் பக்தர்கள் பங்கேற்று ஆடல் வல்லானின் அருளுக்கும், காஞ்சிப் பெரியவரின் பரிபூர்ண அனுக்கிரகத்திற்கும் பாத்திரராகலாம்.
 தொடர்புக்கு: சென்னை- 98410 72214 / சதாரா- 98220 59801.
 - எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com