பொருநை போற்றுதும்! - 76

தாமிரவருணியின் தென்கரையில் பாளையங்கோட்டை, வடகரையில் திருநெல்வேலி; அழகான இரட்டை நகரங்கள். 
பொருநை போற்றுதும்! - 76

தாமிரவருணியின் தென்கரையில் பாளையங்கோட்டை, வடகரையில் திருநெல்வேலி; அழகான இரட்டை நகரங்கள். 

"அடடா, இதென்ன சோதனை? பகவானுடைய திரு அமுதுக்காகக் காயப்போட்ட நெல்லெல்லாம் வீணாகப் போய்விடும் போலிருக்கிறதே!' தவித்தார் வேதபட்டர். 

திடீரென்று பெய்யத் தொடங்கிய பெருமழையைக் கண்ட வேதபட்டரின் உள்ளம் பதைபதைத்தது. ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தவர், செய்வதறியாது தவித்தார். ஓடி வருவதற்குள் நெல் நனைந்துவிடும். "ஐயோ, எவ்வளவு பெரிய தப்பு செய்துவிட்டேன். சுவாமிக்காக உலரப் போட்ட நெல்லெல்லாம் இப்படி நனைய விட்டுவிட்டேனே', என்று மனம் குமுறினார். வானத்தையும் பூமியையும் மாறி மாறிப் பார்த்துப் பரிதவித்தார்.  

மழை லேசாக நிற்க... உடலும் உள்ளமும் நெல் இருந்த இடம்நோக்கிப் பாய்ந்தன. அங்கே... ஆச்சரியம் காத்திருந்தது. நெல்லைச் சுற்றிலும் நீர் தேங்கியிருந்தது. ஆனால், உலரப் போட்ட நெல், துளிகூட நனையவில்லை.  பக்தர்கள் அன்புடன் அளிப்பதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் பரமனார், தமக்குப் படைப்பதற்காக பக்தர் வைத்த நெல்லை விட்டுவிடுவாரா என்ன? நெல்லைச் சுற்றி தெய்வீக வேலியொன்றை அமைத்துவிட்டார். 

படையலுக்கு வைத்த பக்தரின் நெல்லைப் பரமனார் வேலி அமைத்துக் காப்பாற்றியதாலேயே, இது திருநெல்வேலி. நெல்லைக் காத்ததனால், நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர் என்னும் பெயர்கள் (சாலி=வேலி). இத்தலத்தின் தலமரம், மூங்கில்; ஆகவே, வேணுவனம். இவற்றோடு, பிரம்மவிருந்துபுரம், தாருகாவனம், கல்யாணபுரம் என்னும் பெயர்களும் உள்ளன. 

திருநெல்வேலி என்றவுடனே அருள்மிகு நெல்லையப்பர்தாமே நினைவில் நின்றாடுவார்? வேணுவனநாதர், வேணுவனேச்வரர், வேணுவன மகாலிங்கேச்வரர், வேய்முத்தநாதர், சாலிவாடீசர், சால்வடிநாதர், வேண்டவளர்ந்தநாதர் என்றெல்லாமும் இவருக்குத் திருநாமங்கள் உண்டு. அம்பாள், அருள்மிகு காந்திமதியம்மை, வடிவுடையம்மை. காந்திமதியம்மை என்னும் பெயரைத் தீந்தமிழில், கதிர்நிலா அம்மை என்றே அழைக்கிறார் திருஞானசம்பந்தப் பெருமான். 

சுவாமியின் சிவலிங்கத் திருமேனி, சதுரபீட ஆவுடையார் கொண்டது. இப்போது வெளியில் தெரிவது இருபத்தோராவது ஆவுடையார் என்றும், பூமிக்கு அடியில் மற்ற இருபது ஆவுடையார்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள். சுவாமிக்கே, வேண்டவளர்ந்த நாதர் என்றும் வேண்ட வளர்ந்த மகாலிங்கம் என்றும் தானே திருநாமங்கள்! 

"அதென்ன வேண்ட வளர்ந்த மகாலிங்கம்?' இதுவுமொரு சுவாரசியக் கதைதான்! தினந்தோறும் இந்த வழியாகப் பால் கொண்டு போவார் ராமக்கோன் என்பவர். ஒவ்வொரு நாளும் இந்த இடத்தில் அவர் கால் இடறும். தடுமாறித் தவிக்கும்போது, கையிலுள்ள பால் கொட்டிவிடும். தேடித் தேடிப் பார்த்தார். காலை இடறியது மூங்கில் கொம்பு என்று கண்டுபிடித்தார். நாளும் இடைஞ்சல் செய்த மூங்கிலை வெட்டிவிடத் தீர்மானித்தார். கோடரி மூங்கிலின்மீது பட்டவுடன், ரத்தம் பெருக்கெடுத்தது. அச்சத்தில் ஆடிப்போன ராமக்கோன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, சுயம்பு லிங்கம் எழுந்து நின்றது. அப்போது ராமக்கோன் வேண்டிக்கொண்டாராம் – மேலும் மேலும் வளரவேண்டும் என்று விண்ணப்பித்தாராம். இவ்விண்ணப்பத்தின்படி, ராமக்கோனுக்காக வளர்ந்த சிவனார், இருபத்தொரு ஆவுடையார்களின்மீது நிலை கொண்டாராம். 

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், பற்பல சிறப்புகள் கொண்டது. 

வெட்டுத் தழும்போடு சற்றே சாய்ந்த மூலவர் சிவலிங்கம்; * லிங்கத்தின் நடுவில் காணப்படும் அம்பிகை உருவம்; *முக்குறுணி விநாயகர் என்னும் பெயரோடு எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் வலது கையில் மோதகமும், இடது கையில் எழுத்தாணியுமாக மாற்றி வைத்திருக்கும் தன்மை; * நவக்கிரகச் சந்நிதி புதன், வடக்கு நோக்கியிருத்தல் (வழக்கமாக, கிழக்கு); * திருமார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிற உற்சவ விஷ்ணு; * சுண்ணாம்பு, கடல் சிப்பி போன்ற பொருட்களாலான வெண் சுதை நந்தியான "மாகாளை';  * நெல்லையப்பருக்குப் பக்கத்துச் சந்நிதியில் சயனத் திருக்கோல நெல்லை கோவிந்தராஜர்;  * தாமிர சபையில் ஆனந்த தாண்டவம் ஆடுகிற நடராஜர்; * அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பெற்றவரான திருமூலநாதர் என, இந்தப் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். 

திருநெல்வேலித் திருக்கோயிலின் தாமிர சபையில் (செப்பம்பலம்), நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். பிற நடராஜர்களைக் காட்டிலும், இவரிடம் வேறுபாடு ஒன்றுண்டு. என்ன தெரியுமா? இவரின் சடைக் கற்றையானது, விரி சடையாக இல்லாமல், தூக்கிக் கட்டிய ஜடாபாரமாக இருக்கும். அதாவது, பிற நடராஜ மூர்த்தங்களில் காணப்படுவதுபோல், விரிந்து பரந்து பறக்கிற சடையாக இல்லாமல், நீள்கொண்டையாகக் கட்டப்பட்டிருக்கும்.  நடராஜர் என்றவுடனேயே விரிசடை நினைவுக்கு வரும். இருந்தாலும், பாண்டிநாட்டுத் தலங்கள் பலவற்றில், இழுத்துக் கட்டப்பட்ட ஜடாபாரம் கொண்டவராகவே நடராஜப் பெருமான் காட்சி தருவார். 

திருப்புத்தூர் புராணம் என்னும் நூலில், உமாதேவிக்கும் சிவபெருமானுக்கும் உரையாடல். சிவன் ஆடுகிற தாண்டவங்கள் எத்தனை என்று உமாதேவி வினவுகிறார். அவை ஏழு என்றும் ஸ-ரி-க-ம-ப-த-நி ஆகிய ஏழு ஸ்வரங்களிலிருந்து தோன்றின என்றும் சிவனார் விடை தருகிறார். இவ்வாறு கூறும்போது, "தாமிர சபையில் தேவதாரு வன நெல்வேலியாம் பிரபல தலத்தில் ஆற்றுதும் முனி நிருத்தம்' என்றும் மொழிகிறார். முனி நிருத்தம் என்பது காளிகா தாண்டவம் என்றும் அழைக்கப்பெறுகிற உற்பத்தி நடனம் (சிருஷ்டிக்கான படைத்தல் நடனம்). இதன்படி, தாமிர சபைப் பகுதியில்தான் உயிர் படைத்தல் தொடங்குகிறது. சிருஷ்டி தொடக்கத்தில் ஆடப்படுகிற நடனம் என்பதால், வேகம் குறைவாகவும், ஜடாபாரம் அவிழாமலும் ஆடினாராம். 

படைத்தல், காத்தல், அழித்தல் என்று படிப்படியாக வேகம் பிடித்து, அனைத்தும் சேர்ந்ததான ஆனந்தத் தாண்டவத்தில், சடைக்கற்றை முழுவதுமாக அவிழ்ந்து பறந்துகொண்டிருக்கும். 

திருநெல்வேலித் தாமிர சபையில், இப்போது காட்சி தருகிற நடராஜர், ஆனந்தத் தாண்டவத்தைத்தான் ஆடுகிறார் என்றாலும், தொடக்கத்தில் ஆடிய முனி நடனத்தை நினைவு கூர்வதுபோல், கொண்டையோடேயே ஆடுகிறார் போலும்!

(தொடரும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com