மனோரதங்களை பூர்த்தி செய்யும் மகாதேவர்!

சிவபெருமான் பஞ்ச பூதங்களின் தலைவன், அதனால் தான் நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் பஞ்சபூத தலங்களை அமைத்துள்ளனர்.
மனோரதங்களை பூர்த்தி செய்யும் மகாதேவர்!

சிவபெருமான் பஞ்ச பூதங்களின் தலைவன், அதனால் தான் நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் பஞ்சபூத தலங்களை அமைத்துள்ளனர். அவருள் எல்லாம் அடக்கம் என்பதால் தான் படைத்தல், காத்தல், அருளுதல், மறைத்தல், அழித்தல் என ஐந்தொழிலும் ஐந்து முகங்களில் செய்வதாக கூறுகின்றனர். எனவே,  யாகசாலையிலும் சிவனுக்கு பஞ்சாக்னியாக குண்டமும், மேடையும் அமைத்து சிவபெருமானை வழிபடுகின்றோம். 

ஐந்து என்ற எண்ணும், ஐந்தெழுத்து மந்திரமும், நமசிவாயமும் நம்மை நல்வழியில் காத்து இறைவனுடன் இரண்டற கலக்க செய்கிறது. அவ்வகையில் சிவபெருமானின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு நோக்கி உச்சியில் அமைந்துள்ள முகங்கள் முறையே, தத்புருஷம், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், ஈசனார் என்று போற்றி அழைக்கப்படுகின்றது.

திருவள்ளூர் மாவட்டம், அகரம் (புதுமாவிலங்கை) கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மனோன்மணி சமேத ஸ்ரீ மகாதேவர் ஆலயம் மிகவும் பழைமையானது. கல்வெட்டுக்கள் கூறும் தகவல்களின்படி, 7 -ஆம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்டதாக அறியலாம். இத்தலத்தில் உறையும், இறைவன் ஸ்ரீ மகாதேவர் எனவும், இறைவி ஸ்ரீ மனோன்மணி என பெயர் பொருத்தத்துடன் திருநாமம் கொண்டு அருள்புரிகின்றனர். பொதுவாகவே, லிங்கத்தின் ஆவுடையாரை மனோன்மணி சக்தியாக கருதப்படுகின்றது. இவ்வாலயத்தின் எண் திசைகளிலும் சிவாலயங்களால் சூழப்பட்டுள்ளது. 

"வேதத்தின் கண்' என்று அழைக்கப்படும், ஸ்ரீ ருத்ரத்தில் மகாதேவர் என்ற சிவனின் "நாமங்களில் உயர்வான ஒன்றாக போற்றப்படுகின்றது. கிழக்கு நோக்கி (தத்புருஷம்) மிக உயரமான பாணத்துடன் சந்நிதி கொண்டு காண்போரை சுண்டி இழுக்கும் அற்புத தோற்றம். இறைவனுக்கு தான் ஒன்றும் சளைத்தவள் அல்ல என்று கூறுவது போல், தெற்கு நோக்கிய சந்நிதியில் அபய வரத முத்திரையுடனும், மேல் இரு கரங்கள் பாசம், அங்குசம் ஏந்தி பக்தர்களின் துயரை துடைப்பவராக அதிசௌந்தர்யத்துடன் காட்சி தருகின்றாள் அம்பாள். இவ்வாறு இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் சந்நிதி கொண்டிருப்பதை "அகத்திசுவரங்கள்' என்று அழைக்கின்றனர். மனோன்மணி என்ற பெயரே லஷ்மி கடாட்சத்தை அளித்து நமது மனதில் உள்ள ஆசைகளை நிறைவேற்றுபவள் என்ற பொருளில் அமைந்துள்ளது. "ஓம் மனோன்மன்யை நம" என்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் ஓர் அட்சரம்.

ஒரு சிவாலயத்திற்கு உரிய அனைத்து கோஷ்ட தெய்வங்கள் புடைசூழ, தல விருட்சமாக வில்வமரம் அமைய, ஒரு காலத்தில் விழாக்கோலம் பூண்டிருந்த இவ்வாலயம், காலத்தின் கோலத்தினால் "மிஞ்சியது மகாதேவன் மட்டுமே' என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது அகரம் கிராம மக்கள் மற்றும் சிவனடியார்களின் பெருமுயற்சியால் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு ஓரளவு பழைய நிலைக்கு வந்துள்ளது. இன்னும் நிறைவேற வேண்டிய பணிகளாக சந்நிதிகளில் தரைதளம் போடுதல், பிள்ளையார், முருகன், கால பைரவர், சண்டிகேசுவரர் தனி சந்நிதி அமைத்தல், நந்தி மண்டபம் கட்டுதல் போன்ற பணிகள் உள்ளன. பக்தர்கள் உதவி செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 30 -ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

சென்னை - அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கி, ஷேர் ஆட்டோவில் செல்லலாம்.

தொடர்புக்கு: 94449 17124 /  73974 79369.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com