மாமறையால் மன மாற்றம்

திருக்குர்ஆன் ஓதுவதைக்கேட்டு போதனையை உணர்ந்து சரணடைந்து நிரந்தர நிம்மதியைப் பெற்று நிறைவாழ்வு வாழ்ந்தவர்கள் வாழ்கிறவர்கள் நிறைய உள்ளனர். ஒரு சிலரை இக்கட்டுரையில் காண்போம்.

திருக்குர்ஆன் ஓதுவதைக்கேட்டு போதனையை உணர்ந்து சரணடைந்து நிரந்தர நிம்மதியைப் பெற்று நிறைவாழ்வு வாழ்ந்தவர்கள் வாழ்கிறவர்கள் நிறைய உள்ளனர். ஒரு சிலரை இக்கட்டுரையில் காண்போம். தணிவாய் கனிவாய் இனிய குரலில் ஓதும் குர்ஆன் வசனங்களைக் கேட்டோர் ஈர்க்கப்பட்ட நிகழ்ச்சிகளும் நிறைய உள்ளன.

புழைள் இப்னு இயாள் இறை கட்டளைகளுக்கு மாறு செய்பவராக மன இச்சைக்குக் கட்டுண்டு சுய நலத்திற்காக பிறர் உரிமைகளைப் புறக்கணித்து அடுத்தவரின் அல்லலில் எல்லையில்லா ஆனந்தம் கொண்டு நிதானம் இன்றி விதானத்தின் கீழ் இருப்பதெல்லாம் தனக்கென்று தருக்கி திரிந்தார்.

ஒருமுறை ஒருவர் குர்ஆனின் 57-16 ஆவது வசனத்தை ஓதுவதைத் செவிசாய்த்து கேட்டார். ""நம்பிக்கை உடையோரின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும் அவன் இறக்கி வைத்த சத்தியத்தைக் கவனித்தும் பயப்படும் நேரம் வரவில்லையா?'' உடனே யா அல்லாஹ்! (என் இறைவனே!) இதோ நேரம் வந்து விட்டது என்று கூறியவாறு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு மீட்சி பெற்றார்கள். அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. கல்வி ஞானத்திலும் வணக்க வழிபாடுகளிலும் நற்குணங்களிலும் நற்பண்புகளிலும் மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். அவர் வாழ்ந்த காலத்து மக்கள் அவரை நேசித்தார்கள். மார்க்க அறிஞர்களும் புகழ்ந்தனர். புழைள் இப்னு இயாள் (ரஹ்) என்ற இறைநேசர் இப்பூமியில் சிறப்பு வாய்ந்த மனிதராக என் காலத்தில் வாழ்ந்தார் என்று உரைக்கிறார் இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக்.
காலித் இப்னு அக்பர் முதல் முறையாக குர்ஆன் ஓதுவதைக் கேட்டார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக குர்ஆனில் ஓர் இனிமை இருக்கிறது. புதுமையான சரள நடை திரள வைக்கிறது. உட்பொருளின் செழுமையை உணர முடிகிறது. ஓதும் பொழுது கனியின் சுவையை சுகிக்க முடிகிறது. தகிக்க முடியாத தாபம் தணிகிறது. பாவ எண்ணங்கள் விரண்டோடுகின்றன. இக்குர்ஆனை நிச்சயமாக மனிதனால் இயற்ற முடியாது. குர்ஆனின் சொல் நயம், நடையழகு, பொருள் பொலிவைப் பூரணமாக உணர்ந்து ஆரணமாக ஏக இறை கொள்கையை ஏற்று இஸ்லாத்தைத் தழுவினார். நந்நபி (ஸல்) அவர்களின் நற்றோழர் ஆனார்.

வலீதுப்னு முஙய்றா இஸ்லாத்தை எதிர்த்தும் ஏற்றவர்களை ஏளனப்படுத்தியும் கேலியும் கிண்டலுமாக இழிவுபடுத்தியும் இல்ஸாமிய எதிரியாகவே வாழ்ந்து மடிந்தார். அவரின் மகன் காலித் இப்னு வலித் வாரிசு உரிமையை ஒப்புக் கொண்டு இஸ்லாத்தின் பரம வைரியாக தந்தையினும் வேகமாக விவேகம் இன்றி இஸ்லாமியர்களை வதைத்தார்.  அவர் பிறவி வீரர். அவர் திருக்குர்ஆன் ஓதுவதைக் கேட்டு இக்குர்ஆனின் நூதன சுவையும் மதுரவாக்கும் என் மனதை மாற்றுகிறது என்று கூறி இஸ்லாத்தை ஏற்றார். ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாமிய தற்காப்பு போர்களில் தளபதியாக பொறுப்பேற்று வெற்றிகளைக் குவித்தார்.

துல்பிஜாதைனி ஒட்டகம் மேய்த்தவர். இஸ்லாமிய வழிப்போக்கர்கள் ஓதும் குர்ஆன் வசனங்களைக் கேட்டு மனனம் செய்து சிந்தித்தார். மனமாற்றம் ஏற்பட்டது. இஸ்லாத்தை ஏற்க அவரின் சிறிய தந்தையிடம் அனுமதி கேட்டார். சிறிய தந்தை மறுத்ததோடு பரம்பரை சொத்துகளையும் திருப்பி கேட்டார். தாயிடம் ஒரு கம்பளித் துணியைப் பெற்று இரண்டாக கிழித்து ஒன்றை இடுப்பில் கட்டிக்கொண்டு மற்றொன்றை மேலே போர்த்திக் கொண்டு கட்டியிருந்த ஆடை உட்பட அனைத்தையும் சிற்றப்பாவிடம் திருப்பி கொடுத்து விட்டு மதீனா சென்று மாநபி (ஸல்) அவர்களின் முன் நின்று இஸ்லாத்தை ஏற்றார். மூத்தா என்ற ஊரில் சண்டைக்குச் சென்றபொழுது நோயுற்று இறந்தார்.

மதீனாவில் வாழ்ந்த சொந்தபந்தங்கள் இஸ்லாத்தை ஏற்றால் மதீனாவிலிருந்து வெளியேற்றி விரட்ட வீராவேசத்துடன் பூரண ஆயுதங்களோடு குதிரையில் சுற்றி வந்தார் அஸ்அதுப்னு ஜர்ரார். மக்காவிலிருந்து வந்து இஸ்லாமிய பிரசாரம் செய்யும் முஸ் அபுப்னு உமைர்  (ரலி) அவர்களை அதட்டினார். அவரோ அமைதியாக குதிரையிலிருந்து இறங்கி அவர் அருகில் அமர்ந்து உரையாட வேண்டினார். அவரின் அடக்கமான அமைதியான வேண்டுகோளால் ஆத்திரம் தணிந்து ஆவேசம் அடங்கி வேண்டுகோளை ஏற்று அவரின் பக்கத்தில் அமர்ந்தார் அஸ் அதுப்னு ஜர்ரார். முஸ் அபுப்னு உமைர் (ரலி)  குர்ஆனின் சில வசனங்களை ஓதினார். அதனைக் கேட்ட அஸ்துப்னு ஜர்ரார் இஸ்லாத்தை ஏற்றார். அன்று மாலைக்குள் அவரின் கோத்திரத்தார் அனைவரையும் இஸ்லாத்தில் இணைத்தார். 

இஸ்லாமியர்கள் பொருள் உணர்ந்து இறைமறையை முறையோடு ஓதி மறைவழியில் மாநபி (ஸல்) அவர்கள் நடந்து காட்டிய நந்நெறியில் பணிவு, இறையச்சம், சகோதர பாச நேசத்துடன் நன்மை பயக்கும் நற்செயல்களை நாளும் செய்தால் ஆள்வோர் முதல் ஆளப்படுவோர் வரை அனைவரும் அருமறை குர்ஆனின் ஈர்ப்பில் திளைத்து நல்ல தீர்ப்பைப் 
பெறுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com