இயற்கை சிருஷ்டித்த மலைக்கோயில்!

உத்ராஞ்சல் மாநிலத்தில் பித்ரோகார் மாவட்டத்தில் பூமிக்கடியில் உள்ளது பாதாள புவனேஸ்வர் குகைக்கோயில். இக்கோயில் மிகவும் பிரபலமானதாகும்.
இயற்கை சிருஷ்டித்த மலைக்கோயில்!

உத்ராஞ்சல் மாநிலத்தில் பித்ரோகார் மாவட்டத்தில் பூமிக்கடியில் உள்ளது பாதாள புவனேஸ்வர் குகைக்கோயில். இக்கோயில் மிகவும் பிரபலமானதாகும். 160 மீட்டர் நீளமுள்ள இக்குகைக் கோயிலை இருண்ட குகை வழியே சென்றால் மட்டுமே இங்குள்ள புவனேஸ்வரைத் தரிசிக்க முடியும்.  

இக்கோயிலைப் பற்றி யாருமே அறிந்திராத காலம் அது. அயோத்தியை ஆண்ட ரிதுபர்னா என்ற அரசர் நள மகாராஜருடன் சொக்கட்டான் விளையாடுவார். ஒருமுறை சொக்கட்டான் ஆடுவதில் மனைவி தமயந்தியிடம் தோல்வியுற்ற நளன்,  தன்  நண்பர் ரிதுபர்னாவிடம் ஓடிப்போய், ""நண்பா! என் மனைவியின் கண்ணில் படாதவாறு என்னை எங்கேனும் ஒளித்துவை'' என்று கூற... அதற்கு உடன்பட்ட ரிதுபர்னா தன்னுடன் சில வீரர்களையும் அழைத்துக்கொண்டு நளனுடன் தாருகாவின் அடர்ந்த காட்டிற்குள் சென்றான். போகும் வழியில் ஓர் அழகிய மானைக் கண்டவன், உடனே தன் வீரர்களுக்கு அம்மானை பிடித்துவருமாறு கட்டளையிட்டான். ""மானைப் பிடித்து வராவிட்டால் உங்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பேன்'' என்று கூறினான். மான் தப்பியோடி விட்டது.

ரிதுபர்னாவே அம்மானைத் தேடும் முயற்சியில் இறங்க சிறிது தூரத்தில் அந்த மான் அவன் கண்ணில்பட, அதனைத் துரத்திக் கொண்டு ஓடி ஒரு குகைக்குள் சென்றான். எத்தனை நாட்களானாலும் சரி அந்த மானைப் பிடிக்காமல் விடுவதில்லை என்று சபதம் இட்டவன், நளனை தன் வீரர்களுடன் திருப்பி அனுப்பிவிட்டு அக்குகைக்குள்ளேயே தங்கினான். 

அன்றிரவு, அவன் கனவில் தோன்றிய அந்த மான்,  ""ரிதுபர்னா! நீ என்னை தேடும் முயற்சியில் இறங்காதே, நான் மான் அல்ல'' என்று கூறி, ""நீ ஹேத்ரபாலனை குறித்து தவம் செய்'' என்று சொல்ல... அவ்வாறே அரசனும் ஹேத்ரபாலனை குறித்து கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தை மெச்சிய ஹேத்ரபாலன் அவன் முன் தோன்றி இந்த குகைக்குள் அனைத்து தெய்வங்களின் சிலைகளும் உள்ளன என்று கூறி இந்த குகையை உண்டாக்கிய ஆதிஷேனுக்கு அவரை அறிமுகப்படுத்தினான். ஆதிசேஷனும் தான் கட்டிக்காத்து வரும் குகையை முழுவதுமாக சுற்றிக் காண்பித்தது. இந்தக் குகையை சுற்றிலும் பார்வை இட்டு முடிக்க ஆறு மாதங்களாயின. 

அரசன் ரிதுபர்னான் விடைபெறும் முன்,  ""இந்த ரகசிய இடத்தை எக்காரணம் கொண்டும் யாரிடமும் நீ கூறக்கூடாது. அப்படி நீ கூறினால் நீ மரணத்தைச் சம்பவிப்பாய்'' என்று கூறி அனுப்பியதாம் ஆதிசேஷன். 

ஊர் திரும்பியதும் தன் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியாமல், உண்மைகளைக் கூற அப்படியே அவனது உயிர் பிரிந்தது. தன் கணவரின் உயிர் பிரிவதற்கு தான் காரணமாகிவிட்டதை நினைத்து வருந்திய அரசி எப்படியும் குகைக் கோயிலைக் கண்டு பிடித்து விடவேண்டும் என்று தீவிரத்துடன் புறப்பட்டாள். பல கஷ்டங்களையும் கடந்து அக்குகையை கண்டுபிடித்தவள் இடுப்பில் ஒரு நீண்ட கயிற்றைக் கட்டிக்கொண்டு அந்த இருண்ட குகைக்குள் சென்றடைந்தாள். அந்த இருண்ட குகையினுள் சிலைகள் இருப்பதை அவ்வளவு எளிதாக அவளால் தரிசிக்க முடியவில்லை. எப்படியும் இந்த மிகப் புராதனமான ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்த கோயிலை வெளிஉலகிற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் குகைவாயிலிருந்து கீழே போகும்வரை உள்ளே படிக்கட்டுகளை கட்டி முடித்தாள். அவள் காலத்திற்கு பின் அக்கோயில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. 

அதன் பின்னர், 12 -ஆம் நூற்றாண்டில் கட்யூரி வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களால் இக்குகைக் கோயில் சீர்படுத்தப்பட்டது. இக்குகைக்குள் உள்ள 82 படிகளையும் கடந்தே கீழே செல்ல முடியும். சுவரின் இருபக்கமும் கட்டப்பட்டுள்ள இரும்பு சங்கிலிகளைப் பிடித்துக்கொண்டு குனிந்து தவழ்ந்து ஊர்ந்தே கீழே இறங்க முடியும். 

ஆதிசேஷன் முதுகின் மீது தவழ்ந்து சென்றால் அங்கே நாம் காணும் காட்சி, எட்டு இதழ் கொண்ட தாமரைப்பூவிலிருந்து கீழே அமர்ந்திருக்கும் கணபதியின் சிலையின் மேல் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கிறது. 

இதைப் போன்று இன்னும் எத்தனையோ மிக அரிய சிலைகள்! இந்த குகையில் நான்கு கதவுகள் உள்ளன. ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு கதவு என்ற கணக்கில் முதல் கதவு பாவங்களைக் குறிக்கும். ராவணன் மடிந்த பிறகு இக்கதவு மூடிக் கொண்டு விட்டது.  இரண்டாவது கதவு, குருஷேத்திர யுத்தத்திற்குப்பிறகு மூடிக் கொண்டது. மூன்றாவது கதவு இந்த கலியுகம் முடியும் முன்  மூடிக்கொண்டு விடும். நான்காவது கதவு அடுத்த யுகமான அதாவது சத்யுகத்தைச் சார்ந்தது.  

குகைக்குள் செல்பவர்கள் வெளிச்சத்திற்கு எரியும் விறகுக் கட்டைகளைத் தூக்கிச் செல்வதால் கரி படிந்து இருக்கிறது. சமீபத்தில் தான் மின்சார விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com