மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்: வென்றிட லாகும் விதிவழி தன்னையும்..!  - 6

"வென்றிட லாகும் விதிவழி தன்னையும்வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தைவென்றிட லாகும் விழை புலன் தன்னையும்
மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்: வென்றிட லாகும் விதிவழி தன்னையும்..!  - 6

"வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழை புலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே'

(பாடல் : 1232)

பொருள் : எல்லாவற்றையும் மிக எளிதாக வென்று விடும் மங்கையாகிய பராசக்தியின் அருளைப் பெற்றவர்களுக்கு, விதியை மிக எளிதாக வென்றிட முடியும். முற்பிறவியின் வினைகளை மிக எளிதாக வெல்லலாம். நம்மைக் கட்டிப் போடும் பாசத்தை விட்டொழித்து, ஐம்புலன்களையும் வென்றிடலாம். அவள் எல்லாவற்றையும் வென்றிட அருள் செய்வாள்.

திருமந்திரத்தில் சிவ பெருமானைப் போற்றித் துதிக்கிற திருமூலர், அம்பிகையையும் போற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

பராசக்தியின் தயவினாலேயே, பரமசிவனின் அருளைப் பெற முடியும். சுவாமியின் அருளைப் பெற, அம்பிகையின் அனுக்கிரகம் அவசியம். வைணவத்திலும் அப்படித்தான்... தாயாரின் தயவினாலேதான், பெருமாளின் அருளைப் பெற முடியும். 

அம்பிகைக்கு "பஞ்ச க்ருதய பராயணா' என்று ஒரு திருநாமம் உண்டு. ஐந்தொழில்களையும் செய்கிறவள் என்பது பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை நமக்குத் தெரியும். 

"முத்தொழில் ஆற்றிடவே முன்னின்று அருளும் முதல்வி சரணம்' என, அம்பிகை முத்தொழில்களும் நடக்க அருள்  செய்வதை "லலிதா நவரத்ன மாலை' குறிப்பிடுகிறது. பூத்தவளே, காத்தவளே, கரந்தவளே என அம்பிகை முத்தொழில்களை செய்வதை, "அபிராமி அந்தாதி'யும் போற்றுகிறது. இந்த முத்தொழில்களோடு மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களை அம்பிகை செய்வதால், அவளுக்கு "பஞ்ச க்ருதய பராயணா' என்று பெயர்.

இதை, திருமூலரும்,

"அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்றில்லை
அவளன்றி ஊர் புகுமாறு அறியேனே' 
(பாடல் : 1053) 

என்ற பாடலில் சொல்கிறார்.

அன்னையின் சக்தியை அறிந்துணராத தேவர்கள் இல்லை. அவள் சக்தி இல்லாமல் தவங்கள் செய்ய முடியாது. அவள் துணையில்லாமல், ஐந்தொழில் புரியும் ஈசர்களால் அதைச் செய்ய இயலாது. அவள் துணை இல்லாமல், திருவடிப்பேறு பெறும் வழியையும் நான் அறியேனே என்பது பாடலின் பொருள்.

இதைப் போலவே, 

"தரித்திருந் தாளவள் தன்னொளி நீக்கி
விரித்திருந்தா ளவள் வேதப் பொருளைக்
குறித்திருந் தாளவள் கூறிய ஐந்து
மறித்திருந் தாளவள் மாதுநல் லாளே'  
( பாடல்: 1156 ).

என்ற பாடலிலும், அம்பிகையே ஐந்தொழில்களும் நடைபெறக் காரணமான ஆதார சக்தியாக இருக்கிறாள் என்கிறார் திருமூலர். ஞான சம்பந்தர் அம்பிகையை, "பெண்ணின் நல்லாள்' என்று சொல்வதைப் போலவே, திருமூலர் இப்பாடலில் "மாது நல்லாள்' என்கிறார்.

மீனாட்சியாக, காமாட்சியாக, அகிலாண்டேசுவரியாக, அபிராமியாக, விசாலாட்சியாக, லலிதாம்பிகையாக பல்வேறு ரூபங்களில் பக்தர்களுக்கு, வினைகளிலிருந்து விடுதலையையும், பெரும் வெற்றியையும் தருபவள் அம்பிகை. குமரகுருபர், மீனாட்சியம்மன் கோயிலில், "மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை' அரங்கேற்றம் செய்த போது, "தொடுக்கும் பழம் கடவுள்' என்ற பாடலைப் பாடிய போது மீனாட்சியம்மனே சிறு பெண்குழந்தையாக வந்து குமரகுருபருக்கு மணி மாலையைப் பரிசளித்தாள்.

எல்லா உயிர்களுக்கும் தாயான அம்பிகை, தன் பக்தர்களிடம் எதையுமே கேட்பதில்லை. தன் பக்தர்களுக்கு ஒரு துன்பம் எனில், நொடிப் பொழுதில் அதை நீக்கி அருள் செய்வாள்.

"கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்து பவளம் கச்சாகப் 
படர்ந்தல்குல் பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்துநின் றாளே' 

(பாடல்:1400)

எல்லைகளைக் கடந்த பராசக்தியானவள், பொன்னாலான மணி முடியும், மாணிக்கத்தாலான தோடும், முத்து, பவளம், பட்டாடை அணிந்து, பாதத்தில் சிலம்பைச் சூடி, சின்னஞ்சிறிய பெண்ணாக என் முன் வந்து நின்றாள் என்கிறார் திருமூலர்.

குமரகுருபரருக்கும், திருமூலருக்கும் சின்னஞ்சிறு பெண்ணாக அம்பிகை காட்சியளித்த அதிசயம் இந்தக் காலத்திலும் நடக்கும்... நடந்திருக்கிறது. 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் தக்கார் கருமுத்து கண்ணனின் ஒரு பேட்டியைப் படித்தேன். மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின்போது, பாலாலயம் செய்வதற்கான தேதியை முடிவு செய்வதில் இரு தரப்பினருக்கு கருத்து வேறுபாடு. அம்பிகையின் முன் திருவுளச் சீட்டு எழுதிப் போட முடிவு செய்தனர். "நடத்தலாம்...', "நடத்தக்கூடாது...' என, ஒரு வெள்ளிக்கிழமையன்று அம்பிகைக்கு முன் சீட்டு எழுதிப் போட்டு, பக்தர்கள் வரிசையில் நின்றிருந்த ஒரு குழந்தையை அழைத்து சீட்டு எடுக்கச் சொன்னார்கள். 

"நடத்தலாம்' என்று வந்த சீட்டை அக்குழந்தை எடுத்துத் தந்தது. இதுவே அம்பிகையின் முடிவு என மகிழ்ந்தார்கள். கருமுத்து கண்ணனுக்கு, அந்தக் குழந்தையின் பெயரைக் கேட்க வேண்டும் போல் தோன்ற... பெயரைக் கேட்டதும் அந்தக் குழந்தை சொன்னது... ""என் பேர் மீனாட்சி...''

வேறு பெயருடைய குழந்தை வந்திருக்கலாமே... அது ஏன் மீனாட்சி என்கிற பெயருள்ள குழந்தை தான் வர வேண்டுமா? அது தான் அம்பிகை, குறிப்புகளாலும், சூட்சுமங்களாலும் நம்மோடு இருப்பதை உணர்த்துகிற விதம்.
அந்த அம்பிகையைத் தொழுது, வணங்கி, நம் விதியை, வினைகளை மிக எளிதாக வென்றிடுவோம். 

"வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழை புலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே'

(தொடரும்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com