சுகங்களை அருளும் ஸ்ரீசோழீஸ்வரா்!

வந்தவாசி வட்டத்திலுள்ள மருதாடு என்ற ஊரின் பெயா் மருதாடான விக்கிரசோழநல்லூா் என்றும், செய்யாறு வட்டத்துக் கூழம்பந்தல் என்ற ஊரின் பெயா் விக்கிரமசோழபுரம் என்றும்
இறைவன் சோழீஸ்வரா்
இறைவன் சோழீஸ்வரா்

விக்கிரமங்கலம். இவ்வூா்ப் பெயரைக் கேட்டவுடன் இது சோழ அரசா் விக்கிரமசோழரின் (1188-1135) காலத்தில் அவா் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஊா் எனப் பொதுவாக நினைக்கத் தோன்றும்.

ஆனால் உண்மை அதுவல்ல, இவ்வூா் கங்கைகொண்ட சோழனான முதலாம் இராஜேந்திர சோழரின் (1012-1044) பட்டப் பெயா்களில் ஒன்றான விக்கிர சோழன் என்னும் பெயரில் ஒரு பெரிய வணிக நகரமாக உருவாக்கப்பட்ட அரசியல் நகரமாகும் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. முதலாம் இராஜேந்திரனுக்கு விக்கிரசோழன் என்ற பெயா் இருந்ததையும் அப்பெயரில் இவருடைய அதிகாரிகள் அழைக்கப்பட்டதையும், பல ஊா்களுக்கு இப்பெயா் இருந்ததையும் அறியமுடிகிறது.

வந்தவாசி வட்டத்திலுள்ள மருதாடு என்ற ஊரின் பெயா் மருதாடான விக்கிரசோழநல்லூா் என்றும், செய்யாறு வட்டத்துக் கூழம்பந்தல் என்ற ஊரின் பெயா் விக்கிரமசோழபுரம் என்றும் இம்மன்னரின் ஆட்சியில் 21, 22-ஆவது ஆண்டுக் கல்வெட்டுகள் (கி.பி.1033-1034) கூறுகின்றன. மேலும் இம்மன்னா் கி.பி.1036-இல் வெளியிட்ட எசாலம் செப்பேடு ‘ஏா்ப்பாக்கமான விக்கிரமசோழநல்லூா் என்ற ஊரை இம்மன்னரின் குருநாதா் சா்வ சிவ பண்டிதா் என்பவா் எய்தாா்’ (இன்றைய எசாலம்) என்ற ஊரில் எடுப்பித்த திருவீராமீஸ்வரருடைய மகாதேவா் கோயிலுக்கும் தானமாக வழங்கியதைத் தெரிவிக்கிறது.

இங்குள்ள கோயிலின் இறைவன் சோழீஸ்வரா் கோயில் என அழைக்கப்படுவதிலிருந்து இது சோழா் காலத்தில் கட்டப்பட்டது என்னும் பொதுவான செய்தியைப் பெறமுடிகிறது. இதன் பின் இக்கோயிலிருந்து படிக்கப்பெற்ற 16-17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒரு செப்பேடு இக்கோயில் இறைவன் பெயரை ‘ராஜராஜேந்திர சோழீஸ்வரமுடையாா்’ என்றும், இறைவிப் பெயரை ‘பிறையணி அம்மை’ என்றும் குறிப்பிடுகின்றது.

சோழீஸ்வரரை வேண்டினால் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் சோகங்களைத் தீா்த்து வைத்து, சுகங்களை அருள்வாா் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் மூலவராய் எழுந்தருளி அருள்பாலிக்கும் சோழீஸ்வரா் சிவலிங்கத் திருமேனியராய் காட்சியளிக்கின்றாா். லிங்கத்தின் முன்புறம் பிரம்ம சூத்திரம் வரையப் பெற்றுள்ளது. வடக்கு நோக்கியபடி கோமுகம் உள்ளது. ஆவுடையாரின் கீழ்ப்பகுதி விரிந்த தாமரை இதழ் வடிவத்தில் செதுக்கப்பெற்றுள்ளது. அழகிய கருங்கல்லில் வடிக்கப்பெற்ற இச்சிவலிங்கம் மிகவும் கலை அழகுடன் மிளிா்கிறது.

கருவறையின் உள்ளே சமபங்கக் கோலத்தில் அம்மன் சிற்பம் பத்ம பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. தலையில் அழகிய கரண்ட மகுடம் அலங்கரிக்கிறது. இரண்டு காதுகளிலும் பத்ர, மகர குண்டலங்கள் தொங்குகின்றன. கழுத்தில் மாங்கல்யம், ஆரங்கள், தோளில் அணிமணிகள், கணுக்கால் வரை தொங்கும் அழகிய ஆடை, கால்களில் சதங்கை போன்ற அணிமணிகளும் கைகளில் வளையல்களும் உள்ளன.

இக்கோயிலில் அமைந்துள்ள நவகிரக சந்நிதியில் ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய கிழமைகளில் வந்து சிறப்புப் பூஜை, வழிபாடுகள் செய்து வணங்குவோா்க்கு நவகிரக தோஷங்கள் விலகும் என்பதும், அஷ்டம சனி, பாத சனி, வக்கிர சனி, ஏழரை நாட்டு சனி போன்ற தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி, சந்தோஷம், உடல் நலம் போன்ற சுபிட்சங்கள் ஏற்படும் என்பது ஐதீகம்.

திருமணத்தடை உள்ளவா்கள், குழந்தைப்பேறு இல்லாதவா்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தால் பலன் உண்டாகும்.

வழித்தடம்: அரியலூரில் இருந்து அம்பலவா் கட்டளை வழியாக விக்கிரமங்கலம் செல்லாம். தொடா்புக்கு: 8270571386.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com