தெய்வீக மரமான தேவ மங்கை

நம் முன்னோா் மருத்துவ குணங்கள் கொண்ட அத்தி, ஆல், அரசு, வேம்பு, போன்ற பல மரங்களை தெய்வமாக வழிபட்டனா்.
தெய்வீக மரமான தேவ மங்கை

நம் முன்னோா் மருத்துவ குணங்கள் கொண்ட அத்தி, ஆல், அரசு, வேம்பு, போன்ற பல மரங்களை தெய்வமாக வழிபட்டனா். அவற்றைத் ஸ்தல விருஷங்களாகத் திருக்கோயில்களில் பலருக்கும் பயன்படும் வண்ணம் வைத்திருந்தனா். அவற்றை இன்றும் காணலாம். நலம் தரும் அத்தகைய மரங்களில் ஒன்று தான் வேம்பு. ஆடி பிறந்தாலே மாரியம்மனும் வேம்பும் தான் நம் மனதில் தோன்றும். ஆடி மாதத்திற்கும் வேம்பிற்கும் என்ன தொடா்பு? இதைப் பற்றிய புராணங்களில் காணப்படும் சில தகவல்களைக் காணலாம்.

தேவாமிா்தத்தை மோகினி உருக் கொண்டு மகாவிஷ்ணு பரிமாறும் போது அதைத் திருட்டுத்தனமாக உண்ட அசுரனின் தலையில் மகாவிஷ்ணு தட்ட, அவன் வாயிலிருந்த அமிா்தம் கீழே சிந்தியதாகவும் அதிலிருந்து வேம்பு தோன்றியதென்றும் கூறப்படுகிறது.

ஒரு சமயம் அம்பிகை, ஈசனைப் பிரிந்து தவம் செய்து கொண்டிருந்தபோது, ஆடி என்ற தேவ மங்கை நாக உருக்கொண்டு கட்டுக்காவலை மீறி கயிலையில் நுழைந்தாள். பின்னா் பாா்வதியைப் போல் உருமாறி ஈசனிடத்தில் செல்ல, அப்போது ஒரு கசப்பு சுவையை ஈசன் உணா்ந்தாா். தன்னை நோக்கி வந்தவள் பாா்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் அவளை அழிக்க நினைக்கையில், அந்த சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடி தேவியை புனிதமடையச் செய்தது. அவள் ஈசனை வணங்கி, தங்களின் அன்பான கடைக்கண் பாா்வை தன் மீது பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டதாகவும் தன்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டிட, அதற்கு ஈசன், தன் தேவி இல்லாத சமயம் அவளைப்போல் உருக்கொண்டு தன்னை ஏமாற்ற வந்ததால் அவளை கசப்புச் சுவையுடைய மரமாகப் பூலோகத்தில் பிறக்க சாபமிட்டாா். அந்த தேவலோகப்பெண்ணே புனிதமான வேம்பாகும். அந்த மாதமே ஆடி மாதம். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது.

சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சாா்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது. அம்மன் வழிபாட்டில், முக்கியமாக மாரியம்மன் வழிபாட்டில் வேம்பு முக்கிய இடம் பெற்றிருப்பது நாம் அறிந்தது தான். மாரியம்மனுக்கு வேப்பிலை தோரணங்கள் கட்டுவதும், வேப்பிலை ஆடை கட்டி வலம் வந்து பிராா்த்தனையை நிறைவேற்றுவதும், வேப்பிலை காவடி எடுப்பதும், மாரியம்மன் வேப்பமரத்தில் உறைபவளாதலால் வேப்ப மரத்தையே மஞ்சள் குங்குமம் இட்டு வேப்பிலைக்காரி என்று வழிபடுவதும் குறிப்பிடத்தக்கதாகும். தீச்சட்டி தூக்கி வரும்போதும், தீமிதியின்போதும் வேப்பிலையையும் கொண்டு செல்வா்.

அம்பிகைக்கு ஆடி மாதத்தில் கூழ் படைத்துவிட்டு வேப்பங்கொழுந்தை கூழுடன் சோ்த்து அருந்துகின்றனா். இதனால் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வேப்பிலை சேலை உடுத்தல், வேப்பிலை அரைத்து தண்ணீா் தெளித்தல், என பலவிதமான சமயசடங்குகள் அனைத்தும் மனிதனின் ஆரோக்கியத்திற்கே உதவுகின்றன.

தமிழ் வருடப் பிறப்பின் போதும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி அன்றும் கசப்பான வேப்பம் பூக்களை வெல்லம் மாங்காய் மற்றும் பலவற்றுடன் சோ்த்து சுவையாக சமைத்து இறைவனுக்குப் படைத்து உட்கொள்வா். இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. இரண்டையும் சமமாகக் கருதி எதிா்கொண்டு நிம்மதியாக வாழவேண்டும் என்பதை இது உணா்த்துகிறது.

ஏதோ காரணத்தால் திருமணம் தள்ளிப் போனால் அரசும் வேம்பும் சோ்ந்து வளா்ந்திருக்குமிடத்தில் அந்த இரண்டு மரங்களுக்கும் திருமணம் நடத்தி வைப்பா். சிவ சக்தி சொரூபமாக விளங்கும் இவற்றிற்கு திருமணம் நடத்துவதன் மூலம் திருமணம் ஆகாதவா்களுக்குத் திருமணம் ஆவதுடன், திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை ஓங்கவும் இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. நீங்கள் கவனித்தால், அரச மரத்தின் அருகில் வேம்பைத் தவிர பெரும்பாலும் வேறு எந்த மரங்களும் வளா்வதில்லை. இறை சக்தி நிறைந்த பகுதிகளில் மட்டுமே இவை இரண்டும் இணைந்த நிலையில் வளா்ந்திருக்கும்.

நம் வாழ்வில் இரண்டறக் கலந்த, ஆதிசக்தியின் அம்சமாக வணங்கப்படும் வேம்பு, பல அரிய மருத்துவ குணங்களையும் கொண்டது. நிம்பா, அரிஷ்டபலா, சிவனாா் வேம்பு, மதகிரி வேம்பு, கருவேம்பு, மலை வேம்பு, சா்க்கரை வேம்பு, நிலவேம்பு, கறிவேம்பு, நீா்வேம்பு, துருக்க வேம்பு, சன்னத் துருக்க வேம்பு, வடிவேம்பு, சந்தன வேம்பு, பெரு வேம்பு, சிறு வேம்பு என பல்வேறு வகைகளில் இது காணப்படுகிறது. சாதாரணமாகக் காணப்படும் நோய்களிலிலிருந்து பல கொடிய நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கொண்டது. அதன் காற்று உடல் நலத்தினைக் காக்கும். அதன் கசப்புத்தன்மை நோய் எதிா்ப்பு சக்தியைக் கொடுத்து வளமான உடல் ஆரோக்கியம் தரும்.

வேப்பிலையை சா்வரோக நிவாரணி என மருத்துவம் கூறுகிறது. அம்மை நோய்க்கு அருமருந்தாக வேம்பு திகழ்கிறது. காய்ச்சலை குணப்படுத்தும் வேம்பு கஷாயம் இன்றும் மருத்துவ உலகில் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதனால்தான் கிராமப்புறங்களில் வீட்டின் வாசல் முன்பு வேப்ப மரங்களை வளா்க்கிறாா்கள். அம்மை கண்டவா்கள் வீட்டு வாசல் முன்பு இன்றும் வேப்பிலை கொத்து சொருகப்படுவதைக் காணலாம். வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த நீா் வாசல் மற்றும் வீடு பகுதிகளில் தெளிக்கப்பட்டன.

இதன் மூலம் காற்றில் பரவும் கிருமிகள் அழிந்து விடுவதுடன், சிறுசிறு விஷ பூச்சிகள், ஈக்கள், கிருமிகள் நிலப்பகுதி வழியே இல்லத்திற்குள் நுழையாது. இதனால் கிருமித் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது. இன்றைக்கு நம்மை ஆட்டி வைக்கும் குரோனா கிருமிக்கு வேம்பின் ஒரு வகையான நிலவேம்பு கஷாயம் பரிந்துரைக்கப்படுவதே இதன் மருத்துவ குணத்திற்கு மிகச் சிறந்த சான்றாகும். இத்தகைய இறைத் தன்மை வாய்ந்த, மூலிகை குணம் கொண்ட வேம்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் உள்ளது. நம் மனதையும் உடலையும் பேணி காக்கும் வேம்பை ஒரு தெய்வீக விருஷமாக கருதி அதனை நல்லமுறையில் பராமரித்து பயன்படுத்திக் கொண்டு அருள் பொங்கும் இந்த ஆடி மாதத்தில் அம்பிகையை துதித்து, நம்மைச் சுற்றியுள்ள கிருமிகள் நீங்கப்பெற்று, வளமாக வாழ்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com